இலங்கை வாழ் தமிழர்களுக்கு பல தசாப்தங்களாக உதவிவரும் ராஜ். சிவநாதன் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர். இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் தமிழர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் அவர், தற்போது புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான நிரந்தர தீர்வைப் பெறும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி
கேள்வி : வடக்கு மக்களுக்காக உதவும் பணிகளில் நீங்கள் இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருக்கிறீர்கள். ஆனாலும் இதுவரை அந்த பணிகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் இதுவரை என்னென்ன பணிகளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு, கிழக்கு மக்களுக்கு மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று குறிப்பிட முடியுமா?
பதில் : மக்களுக்கு உதவுவதை பெரிதாக சொல்வது சரியானதென நான் நினைக்கவில்லை.. எனினும் நீங்கள் கேட்டதற்கிணங்க,
வடக்கு, கிழக்கு மக்களுக்கு போர்காலத்துக்கு முதலும் லண்டனில் இருந்த காலத்திலும் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்தபோதும் 86 ஆம் ஆண்டு லண்டனிலிருந்து வந்ததன் பின்னரும் என்னாலும் நான் சேர்ந்த அமைப்புக்களாலும் பல உதவிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நாம் அவுஸ்திரேலியாவில் இருந்தபோது “இலங்கை மாணவர் நிதியம்” என்ற ஒரு மாணவர் அமைப்பை அமைத்திருந்தோம். அந்த அமைப்பு எனது நண்பர் முருகபூபதியால் ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பில் நானும் அங்கத்தவராகவும் தலைவராகவும் பல ஆண்டுகள் செயற்பட்டு இலங்கையில் வாழும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு, போர்க் காலத்தில் தாய் தந்தையை இழந்த பிள்ளைகளை க.பொ.த உயர்தரம் வரை படிப்பித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எமது புலம்பெயர் அன்பர்கள் நிறையப் பேர் ஒத்துழைத்து இதுவரை காலமும் அதனை நடத்திக்கொண்டு வருகின்றோம்.
அதில் புலம்பெயர் அவுஸ்திரேலிய மக்கள் மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள மக்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது அர்ப்பணிப்பை தந்து அப்பிள்ளைகளுக்கு உதவிசெய்து வருகின்றார்கள். இன்று அந்த அமைப்பை எமக்கடுத்ததான இரண்டாவது சந்திதியினர் எடுத்து நடத்தி வருகின்றார்கள். 10 -–12 ஆயிரம் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றோம்.
போர் முடிந்த பின்னர் மலையகம் உட்பட தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொருளாதார நெருக்கடியிலுள்ள குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
நான் தனிப்பட்ட முறையில் போர் காலத்தின் முன்னரும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து போரினால் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டோம். அதன்பின்னர் நடைபெற்ற அழிவுகளில் கிளிநொச்சியில் மகாதேவா ஆச்சிரமம் மற்றும் செஞ்சோலை பிள்ளைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கான நடிவடிக்கைளில் ஈடுபட்டேம்.
குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மகாதேவா ஆச்சிரமத்தில் பெண்கள் தங்குமிடத்துக்கு அத்திவாரம் இட்டு அதன் புனரமைப்பு பணிகளை பூர்த்திசெய்தோம்.
சக்தி பெண்கள் விருத்தி என்ற அமைப்பு மட்டக்களப்பு சித்தாண்டி என்ற இடத்திலுள்ளது. விதவைகளும் பிள்ளைகளும் என 1200 பேர் உள்ள ஒரு அமைப்பை நுண் நிதி மூலம் ஆரம்பித்து 2009 முதல் இன்று வரை நடத்திவருகின்றேன்.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் பண்ணைகளை நிறுவி அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் வேலை வாய்ப்புகளை வழங்கி 2010 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன்.
இவ்வாறு எங்களால் முடிந்தளவு கோவில்களுக்கும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றோம்.
மலையகத்திலும் நானும் எனது அண்ணும் இணைந்து சில உதவிகளை வழங்கினோம். கோயில் இல்லாத இடங்களில் கோயில் அமைத்து கொடுத்துள்ளோம்.
இணைந்து செய்ய வேண்டுமாயின் இணைந்து செயற்படுவேன். தனியாகவும் என்னால் முடிந்த உதவிகளை வழங்கி வருவேன்.
கேள்வி : தற்போது நீங்கள் இலங்கை வந்த நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் சாதகமான சமிக்ஞைகள் அரச தரப்பில் இருந்து வெளிப்பட்டு இருக்கிறதா?
பதில் : மக்களுக்குரிய சமூக சேவைகள் காரணமாக நான் ஒரு வருடத்தில் மூன்று அல்லது நான்கு தடவைகள் இலங்கைக்கு வருவேன்.
கடந்த இரு வருடங்களில் வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்தோர் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை வாழ் சமூக நலன் விரும்பிகள் என்ற அமைப்பை நிறுவினோம். அந்த அமைப்பில் நான் சர்வதேச இணைப்பாளராக செயற்பட்டு வருகின்றேன்.
இந்த அமைப்பின் முதலாவது நோக்கம் பொருளாதார நெருக்கடியாலும் நீண்ட நாள் போர்ச் சூழலாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான சுபீட்சமான வாழ்வு, மற்றும் அரசியல் தீர்வு என்பனதான். அரசியல் சார்பற்ற அமைப்பாக இதனை நாம் அமைத்திருந்தோம்.
எமது தமிழரின் அரசியல் தீர்வுக்காக பல விதமான கோரிக்கைகள் தமிழ் அரசியல் வட்டாரத்தினாலும் வெளிநாட்டு புலம்பெயர்தோரினாலும் விடுக்கப்பட்டுள்ளன. வேறு வேறு நோக்கங்கள் இருந்தாலும் நாங்கள் இந்த அரசியலமைப்பின் 6 ஆவது திருத்தம் 9 ஆவது திருத்தம் மற்றும் 13 ஆவது திருத்தம் என்பனவற்றை முறையாக பயன்படுத்தினால், வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் சமாதானமான, நிரந்தமான தீர்வு கிடைப்பதற்கு இது ஒரு முதற்படியாக இருக்கும்.
சேவை முழுமையாக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இலங்கை வாழ் சமூக நலன் விரும்பிகள் அமைப்பு நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் ஊடாக அனைத்து அரசியல்வாதிகளையும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளையும் தெற்கு அரசியல்வாதிகளையும் தொடர்பு கொண்டு எமது அமைப்பின் உறுப்பினர்கள் அந்த அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து 13 திருத்தத்தை முற்றாக அமுலாக்கவும் மாகாணசபையை நடத்த வேண்டும் என்ற கொள்கையிலும் செயற்பட்டு வந்தோம்.
இந்த அரசாங்கம் வருவதற்கு முன்னர் பழைய அரசாங்கங்களில் இதனை செய்ய வேண்டும் என அரசியல்வாதிகளுக்கும் அழுத்தங்களை கொடுத்து வந்தோம்.
கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் எதனையும் நிறைவேற்றவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்திய அரசாங்கம் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர்களையும் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கலந்துயாடினோம். அப்போது தாம் அரசியலுக்கு வந்தால் மாகாண சபை தேர்தலை நடத்தி 13 ஐ அமுல்படுத்துவோம் என உறுதியளித்தார்கள்.
அதன்படி தற்போது அவர்கள் முழு வலிமை பெற்ற அரசாங்கமாக இருக்கின்றார்கள். அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம்.
அதாவது அரசாங்கமாக இருக்கும் நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்ற கருத்துக்களையும் நாம் அவர்களிடம் கூறி வருகின்றோம்.
அதன்பொருட்டு நான் எனது நண்பர்களுடன் இணைந்து இங்குள்ள அமைச்சர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றேன்.
மேலும் ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின்போது ஒருங்கிணைப்பு குழுவில் பல விடயங்களை முன்வைத்திருந்தார்கள் இதனால் மக்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை வந்துள்ளது.
எமக்கும் அந்த நம்பிக்கையுள்ளது. மேலும் அவர்கள் புதிய அரசாங்கம் என்ற படியால் பல பிரச்சினைகள் இருக்கக்கூடும் அவற்றையெல்லாம் நிவர்த்திசெய்து முனோக்கிச்சென்றால் இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நான் நினைக்கின்றேன். அத்துடன் நாமும் அவர்களுடன் தொடர்ந்து செயற்படவுள்ளோம்.
கேள்வி : வடக்கு கிழக்கில் நீங்கள் தனியாகவோ அல்லது வேறு அமைப்புகளுடன் இணைந்து செய்வதற்கு எதிர்பார்த்துள்ள திட்டங்கள் எவை?
பதில் : எங்கள் மத்தியில் உதவி செய்யும் ஆர்வம் நிறைய உள்ளது மக்களுக்கு என்ன உதவி செய்வது? அப்படி செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய உதவிகளையும் அது எந்த இடங்களுக்கு செய்ய வேண்டும் என்பதையும் கதைத்து அதற்குரிய உதவிகளை செய்கிறோம்.
வெளிநாட்டு தமிழர்கள் நாங்களும் எங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய விதமாக வழிமுறைகளை செய்கின்றோம். குறிப்பாக காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு சரக்கு கப்பல்சேவையை நடத்துவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம். அதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் குறையலாம். அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து வரும் பலர் பலாலிக்கு நேரடி உள்ளூர் விமான சேவையை கோருகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகின்றன.
கேள்வி : பொதுவாகவே வடக்ைக மையப்படுத்திய எந்த ஒரு அபிவிருத்தி திட்டமாக இருந்தாலும் அவை வடக்கு அரசியல்வாதிகளில் குறிப்பாக தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருக்கின்றன. இனிமேலும் அவர்களது எதிர்ப்பு வடக்கு அபிவிருந்திக்கு தடையாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா?
பதில் : அரசியல்வாதிகளின் தலையீடும் அவர்களது நடவடிக்கைகளும்தான் நமது இன்றைய தலைமுறையினர் வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்பின்றி இருப்பதற்கும் வெளிநாடு செல்வதற்கும் காரணமாய் உள்ளது.
ஆனால் அந்த விதமான அரசியல் இனிமேல் யாழ். மாவட்டத்திலும் கிழக்கிலும் செய்ய முடியாது. ஏனெனில் இம்முறை தேசிய மக்கள் சக்தியினர் அங்கு பெரும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அது சாத்தியப்படாது என நினைக்கின்றேன். தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இனிமேல் பலிக்காது
கேள்வி : வடக்கு அரசியல் கட்சிகளிடையே அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிணக்குகளும் தமிழர்களை ஒன்று படுத்தவே முடியாது என்ற ஒரு தோற்றப்பாட்டியே ஏற்படுத்தி இருக்கிறதே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில் : இது ஒரு நல்ல கேள்வி. பொதுவாகவே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் ஒற்றுமையாக இருந்ததில்லை. பிரிந்து இருப்பதால் தான் தேசிய கட்சியிடம் இப்போது தோற்றுப் போய் இருக்கிறார்கள்.
அது தெரிந்தும் தங்களுடைய ஈகோவால் தங்கள் ஆசனங்களை குறைத்தது மட்டுமன்றி இன்றும் இவர்களுக்குள் ஒற்றுமை வருவதாக தெரியவில்லை. ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள் என்று பலமுறை சொல்லிவிட்டோம். இப்போதும் தமிழ்க் கட்சிகள் பழையவற்றை மறந்து ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த அரசாங்கம் நல்லதை செய்தாலும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து கதைத்து சரியான தீர்வை கொண்டு போவதற்கு இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் திடமாக நம் நம்பிக்கை வைத்து அவர்களிடம் கேட்கின்றோம் ஆனால் இவர்களின் போக்குகளும் அவர்களுடைய அடிப்படைவாதமும் மாறாமல் அப்படியே உங்களது தமிழினத்திற்கு ஒரு சாபக்கேடாகத்தான் உள்ளது.
நாங்கள் ஓரளவுக்குத்தான் சொல்லலாம். சில புலம்பயர் அமைப்புகளும் இவர்களின் பிரிவுக்கு காரணமாக உள்ளன. ஒவ்வொருத்தரும் பணத்தை வைத்துத்தான் அரசியல் நடத்துகிறார்கள்.
மக்களின் நலன்களை மறந்து விட்டார்கள். நாங்கள் மக்களின் நலனுக்காக எங்களால் முடிந்த அளவு ஒற்றுமைப்படுங்கள் என்று கூறுவோம். சேர்வதும் சேராததும் அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்பதுதான் தற்போது என் நிலைமை.
கேள்வி : இதே நிலைமை தான் புலம்பெயர் நாடுகளிலும் என்று சொல்லலாமா?
பதில் : உண்மைதான். ஒவ்வொரு விதமான கருத்துக்களுடனும் முரண்பாடுகளுடனும்தான் அவர்களும் உள்ளார்கள். கனடாவில் நூறு நூற்றைம்பதுக்கும் மேலான அமைப்புகள் உள்ளன. அவுஸ்திரேலியாவில் அவ்வாறில்லை.
கேள்வி : இறுதியாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?
எங்கள் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும். 13ஆவது திருத்தத்தை முறையாக அமுல் செய்தால் அதனை வைத்துக்கொண்டு அதற்கடுத்த நிலைக்கு நாங்கள் போகலாம். அல்லாவிட்டால் ஒற்றுமையின்மையால் அனைத்தையும் இழந்த சமூகமாக நாங்கள் மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.
வாசுகி சிவகுமார்