ஒரு நாட்டின் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் ஆக்கபூர்வமாக சாதகமான எதிர்காலத்திற்காகவே செயற்படவேண்டியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் அந்த நோக்கத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு புதிய அரசியல் கலாசாரமொன்றை அறிமுகஞ்செய்து அதனை நிறுவுவதையே அவர்கள் நடைமுறையில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் எதிர்க்கட்சி அது தொடர்பில் எந்தவிதமான தயார்நிலையிலும் இல்லை என்பதை கவலையுடனேனும் குறிப்பிடவேண்டும். அதனை உறுதிசெய்கின்ற சான்றுகளை ஏராளமாக கடந்த ஒருசில வாரங்களில் காணக்கூடியதாக இருந்தது.
பொதுவில் அவர்கள் விடுத்த கூற்றுக்களிலும் அரிசி, தேங்காய், குரங்கு, ட்ரோன் பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர்களின் கூற்றுகள் இதோ இந்த குறுகிய எல்லைக்குள், அதாவது யதார்த்தத்தை திரிபுபடுத்துகின்ற எல்லைக்குள் நிலவியது. ஆனால் அரசாங்கம் அதைவிட நீண்டதூரம் சென்று செயலாற்றிக் கொண்டிருக்கிறது. மிகவும் அண்மித்த உதாரணம் மின்கட்டணத்தை நூற்றுக்கு 20 வீதத்திற்கு மேலாக குறைத்தமையாகும்.
அதன் மூலமாக மனைசார் மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதோடு சிற்றுண்டிச்சாலைகள், பேக்கரிகள் உள்ளிட்ட தொழில்முயற்சிகளுக்கும் பாரிய நிவாரணம் கிடைத்துள்ளது. அதைவிட அதிக கவனம் செலுத்தப்படவேண்டியது உற்பத்திக் கைத்தொழில்களுக்கு உரித்தாகின்ற பாரிய அனுகூலங்கள் தொடர்பிலாகும். அதாவது வலுச்சக்திச் செலவு குறைவடைந்து உற்பத்திச் செலவு குறைவடைவதாகும்.
மின் கட்டணக் குறைப்பின் பெறுபேறுகள்
அதன்படி உள்நாட்டுச் சந்தையில் பண்டங்களின் விலைகள் வீழ்ச்சியடைவதோடு குறிப்பாக ஏற்றுமதிப் பண்டங்களின் விலைகள் குறைவடையும். அதன்மூலமாக வெளிநாட்டுச் சந்தைகளில் இலங்கையின் உற்பத்திகளுக்கு போட்டித்தன்மைமிக்க குறைந்த விலை விதிக்கப்பட்டு கேள்வி அதிகரிக்கும். அந்த கேள்வியை நிவர்த்திசெய்வதற்காக அதிகளவில் பண்டங்களை உற்பத்திசெய்து ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம். நாட்டை உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுசெல்வதென்பது இதோ இந்த செயற்பாங்கிற்கு உயிர்கொடுப்பதாகும். நிலவுகின்ற சந்தைகளுக்கு மேலதிகமாக புதிய சந்தைகளை தேடிக்கொள்வதையும் புதிய பண்டங்களை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அறிமுகம் செய்வதையும் மேற்கொள்ளலாம். அதன்படி குறிப்பாக கொழும்பை கேந்திரமாகக் கொண்டுள்ள பொருளாதாரத்தை தூரப்பிரதேசம்வரை விரிவாக்க முடியும்.
மின் கட்டணக் குறைப்பு இதோ இத்தகைய விரிவான பொருளாதார நன்மைகளைக் கொண்டுவருகின்ற செயற்பாங்கிற்கு வித்திடுவதாக அமையும். இந்த செயற்பாங்கினை நிறைவுசெய்ய வேண்டுமாயின் சிறப்பான பொருளாதார முகாமைத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொருளாதார முகாமைத்துவம், அதனை முறைப்படி மேற்கொள்வதில் காட்டுகின்ற அர்ப்பணிப்பு என்பன சிரச தொலைக்காட்சியில் நேடியான உரையாடலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றதன் மூலம் நன்றாகவே உறுதியாகிற்று. அந்த தொலைக்காட்சியில் பல ஊடகவியலாளர்கள் சூழ்ந்து பல்வேறு துறைகள் ஊடாக எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில்கள் மூலமாக அது தெளிவாகின்றது. ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு கடதாசி தாள் எதனையும் பார்க்காமல் மிகவும் சரியான பதில்களை அளித்தார். வேறு ஜனாதிபதியொருவரிடம் இவ்விதமாக கேள்வி கேட்டால் ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் புடைசூழ சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு பதிலளித்ததை கடந்தகால அனுபவங்கள் எவருக்கும் தெளிவுபடுத்தும். பாரபட்சமின்றி விடயங்களை கருத்தில் கொள்கின்ற எந்த ஒருவருக்கும் புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளில் நிலவுகின்ற வெளிப்படைத்தன்மையும் நேரடியானதன்மையும் தெளிவாகும்.
வெளிநாட்டுக் கடன்களுக்குப் பதிலாக முதலீடுகள்
மற்றுமொரு பக்கத்தில் பேசப்படவேண்டிய விடயத்தை பலர் திட்டமிட்டு மூடிமறைக்கிறார்கள். சீனாவிலிருந்து 3700 மில்லியன் டொலர் பாரிய அளவிலான முதலீடு கிடைத்தமையாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சார்ந்ததாக சீன சினோபெக் அரச எரிபொருள் கம்பெனி இந்த முதலீட்டுக்காக முன்வந்துள்ளது. இலங்கையில் அரச நிறுவனங்களை விற்றுத் தின்கின்ற நிகழ்ச்சிநிரல் கடந்த 46 வருடங்கள் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
எனினும் சீனா மாத்திரமல்ல, அண்மையில் பொருளாதார வல்லரசுகளாகிய பெரும்பாலான நாடுகள் அரசாங்க கம்பெனிகள் அல்லது கூட்டுறவு முறைமையின் தொழில்முயற்சிகளை நன்றாக திட்டமிட்டு அமுலாக்கி வந்தன. சினோபெக் கம்பெனி அதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இந்த முதலீடுகள் கிடைப்பதனால் துறைமுக வலயத்தில் எண்ணெய் தூய்மையகமொன்று புதிதாக ஆரம்பிக்கப்படுதல், பாரிய பொருளாதார பலத்திற்கு வழிசமைப்பதாக அமையும். கடந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின்படி நான்கு வருடங்களில் 2900 மில்லியன் டொலர் கடன்தொகையே கிடைக்கும். அதனை வட்டியுடன் மீளச்செலுத்த வேண்டும்.
இந்த கடன்தொகையும் எட்டு தவணைகளில் நான்கு வருடங்களிலேயே கிடைக்கும். அதனைப் பெற்றுக்கொள்வதற்காக எட்டு மாதங்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. நிபந்தனைகளை ஒவ்வொன்றாக பரிசீலித்துப்பார்த்தே கடன் தவணைதவணையாக வழங்கப்படும். ஒரு கடன்தவணை கிடைத்த இடத்தில் இருந்து அடுத்த தவணை கிடைக்கும்வரையான காலப்பகுதிக்குள் நிபந்தனைகளை ஈடேற்றியுள்ள நிலைமை பற்றி நன்றாக பகுப்பாய்வு செய்யப்படும். கடந்த அரசாங்கங்கள் வகைதொகையின்றி பணத்தை விரயமாக்கிய விதத்திற்கிணங்க இவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படுவதையிட்டு கவலைப்பட காரணம் கிடையாது.
நிகழ்கால அரசாங்கத்தின் கீழும் இந்த நிபந்தனைகளை ஈடேற்றுவதற்கான கடப்பாடு உண்டு. இறுதியில் வட்டியுடன் கடனை மீளச்செலுத்த வேண்டும். அதைவிட அந்த கடன்தொகையைவிட அதிகமான நேரடியான முதலீட்டுத் தொகை கிடைக்கும். முதலீட்டின் நன்மைகள் நீண்டகால வருமானப் பிறப்பாக்க வழிமுறையேயன்றி கடன் தவணையை வட்டியுடன் மீளச்செலுத்த வேண்டியதில்லை. தேசிய பொருளாதாரத்தில் இது போன்ற அனுகூலங்களை பெற்றுக்கொண்டு பயணிக்கின்ற அதேவேளையில் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் உச்ச அளவிலான அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.
குறிப்பாக கடந்த காலத்தில் போலியான ஔடதங்கள் காரணமாக கண்கள் குருடாகிய பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு செலுத்தியமை ஓர் உதாரணமாகும்.
இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதென்பது உண்மைதான். எனினும் பார்வையை இழந்தவர்கள் எமது சகோதர மக்களாவர். அவர்களைப்போன்றே அவர்களின் குடும்ப அங்கத்தவர்களால் இந்த உயிர்களுக்கு விலை கணிக்க முடியாது. பார்வை இழந்தமைக்கு விலைமதிப்பு கிடையாது. அவ்வாறாயினும் ஏதேனுமொரு நிவாரணத்தை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக பாடசாலைகள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்காக ரூபா 6,000 எழுதுகருவிகளுக்கான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக பாடசாலை பிள்ளைகளும் பிக்குமாணவர்களும் விசேட தேவை நிலவுகின்றவர்களாக கல்வி பயில்கின்ற பிள்ளைகளுமான 822,300 பேருக்கு ரூபா 3,000 வீதம் பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வெகுமதி அட்டைகள் வழங்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருக்கின்றன. முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம்வரை கல்விபயில்கின்ற 15 இலட்சம் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்குவதற்காகவும் திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. இதோ இவ்விதமாக மக்கள்நேயமுள்ள பல நடவடிக்கைகளை அமுலாக்கி மக்கள் பங்கேற்புடனான உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அத்திவாரம் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்து வரப்படுகின்றது. அதேவேளையில் எதிர்க்கட்சி பொதுவாக உயர்த்திப்பிடிப்பது அரசி, தேங்காய், குரங்குகள் மற்றும் ட்ரோன் (தானியங்கி) தாக்குதல் பற்றிய கதையையாகும். அரிசி மாஃபியா பற்றிய கதை வெளிப்பட்டது இன்று நேற்றல்ல. குறிப்பாக 2020 மத்திய வங்கி அறிக்கையில் இது பற்றி விபரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேங்காய் பற்றிய பிரச்சினையும் அதே அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இற்றைவரை பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான விஞ்ஞான ரீதியான திட்டமிட்ட வழிமுறைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை.
நிகழ்கால அரசாங்கம் இந்த பெரும்போகத்தில் நெல்லைக் கொள்வனவுசெய்ய நெற்களஞ்சியங்கள் அனைத்தையும் நவீனமயமாக்கிவிட்டது. அரச பிரிவிற்கு மாத்திரமன்றி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசியாலை உரிமையாளர்களுக்கும் மேற்படி களஞ்சியங்களில் நெல்லை சேகரித்துவைக்க வாய்ப்பு வழங்கத் தயார். நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக 500 கோடி ரூபா முதல்சுற்றில் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக தெங்கு வளர்ப்பினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வட மாகாணத்தில் 40,000 ஏக்கர் பயிர்ச்செய்கைக் காணிகளை இனங்கண்டு தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
குரங்குகள் உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்ற விலங்குகள் மற்றும் அறுவடைக்கு சேதம் விளைவிக்கின்ற விலங்குகளின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்காக விஞ்ஞானரீதியான முறையியலின்படி செயலாற்றப்பட்டு வருகின்றது. பெண் விலங்குகளைப் பிடித்து லூப் அணிவித்தல் ஓர் எடுத்துக்காட்டாகும். மறுபுறத்தில் கிராமங்களில் உள்ள குரங்குகள் ஏற்றிச்சென்று தொலைவில் உள்ள வனாந்தரங்களில் விடுவிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு புத்தம்புதிதாக சேர்ந்துள்ளது யாதெனில் மகிந்த ராஜபக் ஷ மீது ட்ரோன் (தானியங்கி) தாக்குதல் இடம்பெறுவதற்கான ஆபத்து நிலவுகின்றதென்பதாகும். பாதுகாப்பிற்கான நிபுணத்துவர் குழு வழங்கியுள்ள விதப்புரைக்கிணங்க ராஜபக் ஷவின் பாதுகாப்பு 60 பேராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மயானங்களிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ. அங்கத்தவர்கள் எழுந்துவந்து ட்ரோன் தாக்குதலொன்றை மேற்கொள்ளக்கூடுமென்ற பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. “நாட்டைக் காப்பாற்றிய தலைவரை மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்ல” முயற்சிசெய்கிறார்கள் என 2014 -– 2015 காலப்பகுதியில் பாரிய பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது பத்து வருடங்கள் கழிந்தபோதிலும் மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டுசெல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக் ஷ மீது ட்ரோன் தாக்குதல் நடத்துவதற்கான ஆபத்து நிலவுகின்றதென இப்போது கூறுகிறார்கள்.
ட்ரோன் கதைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறைவின்றி வக்காலத்துவாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மக்களின் அரசியல் புரிந்துணர்வினை “அரிசி, தேங்காய், குரங்குகள்” என்கின்ற வறையறைக்குள் தேக்கி வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறான கதைகளில் புதிதாக சேர்த்துக்கொண்டிருப்பது ட்ரோன் கதையாகும். அத்தகைய புனைகதைகளுக்கு ஓரிரு தொலைக்காட்சி அலைவரிசைகள் உயிர்கொடுப்பதை மாத்திரமே செய்துவருகின்றன. அவ்வாறு செய்து அவர்கள் அவர்களின் வயிற்றை வளர்த்து வருகிறார்கள். எனினும் மக்கள் அந்த பிரசாரங்கள் பற்றி கவனஞ்செலுத்துவதாக புலப்படவில்லை. ஏனெனில் 2022 போராட்டத்தின் (அரகலய) பின்னர் இனிமேலும் ஏமாற்றமுடியாத மக்களே இருக்கிறார்கள்.
பிரியதர்ஷன தயாரத்ன தமிழில் கிறிஸ்டோபர் மகேந்திரன்