தினகரனில் 37 வருடங்களுக்கு முன்னர் 11 வருடங்கள் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய ச.சுந்தரதாஸ் தமது எழுத்துலகப் பிரவேசத்தின் ஐம்பதாவது வருட நிறைவையொட்டி அளித்த பேட்டி.
தினகரன், தினகரன் வார மஞ்சரியில் 37 வருடங்களுக்கு முன்னர் பதினொரு வருடங்கள் பணியாற்றியவர் தான் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பூர்வீகமாகவும் கொழும்பைப் பிறப்பிடமாகவும் கொண்ட ச. சுந்தரதாஸ். 1977 இல் தினகரன் ஊடாக சிறுகதை, கட்டுரை, சினிமா என எழுத்துலகில் பிரவேசித்த இவர் சொற்ப காலத்தில், செய்திகள், பேட்டிகள் எனவும் அகலத்தடம் பதித்தார்.
அதிலும் சுந்தர் பதில்கள் என்ற பெயரில் தினகரனில் வெளியான அவரது சினிமா கேள்வி பதில் பகுதி, 1990 களுக்கு முற்பட்டவர்களால் இன்றும் நினைவுகூரப்படக்கூடியதாக உள்ளது. அன்றைய காலப்பகுதியில் இப்பகுதிக்கு வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றிருந்தது.
இவர் 1988 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார். அத்தோடு சுந்தர் பதில்கள் பகுதி நின்று போனது. ஆனபோதிலும் தமது எழுத்துலக பிரவேசத்திற்கும் எழுத்துலக வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பு நல்கிய தினகரனின் ஆசிரியர் பீடத்திற்கு 37 வருடங்களுக்கு பின்னர் கடந்த வியாழனன்று வருகை தந்திருந்தார் ச. சுந்தரதாஸ். அத்தோடு அவரது எழுத்துலகப் பிரவேசத்திற்கு இவ்வருடம் ஐம்பது வருடங்களும் நிறைவடைகின்றன.
இவ்வாறான நிலையில் தினகரன்-வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், எழுத்தாளர் சுந்தரதாஸை இன்முகத்தோடு வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த விஷேட நேர்காணல் இது.
கேள்வி: உங்களது எழுத்துலகப் பிரவேசம் குறித்து சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?
பதில்: ஆம். 1975 ஆம் ஆண்டில் கதம்பம் மாத இதழில் எனது முதலாவது சிறுகதை வெளியானது. அதனைத் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினேன். 1977 இல் ஒரு நாள் தினகரனின் அன்றைய பிரதம ஆசிரியர் மறைந்த ஆர். சிவகுருநாதனைச் சந்தித்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. நான் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்த சந்தர்ப்பம் அது. பத்திரிகைகளுக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் அக்காலப்பகுதியிலேயே என்னுள் மேலிட்டிருந்தது.
அந்த சூழலில் தினகரன் பிரதம ஆசிரியரைச் சந்தித்து, நான் எழுதி வந்துள்ள சிறுகதையைக் காண்பித்து, இச்சிறுகதையை தினகரனில் வெளியிட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அச்சமயம் அச்சிறுகதையை என்னிடம் இருந்து பெற்ற பத்திரிகை ஆசிரியர் சிவகுருநாதன், வாரமஞ்சரிக்கு பொறுப்பாக இருந்த எம்.ஆர் சுப்ரமணியத்திடம் அதனை வழங்கி தினகரனில் வெளியிட்டு உதவினார்.
அத்தோடு ‘நீங்கள் தினகரனில் தொடர்ந்து எழுதலாமே. அதற்கு வாய்ப்பளிக்கலாம் என்றும் குறிப்பிட்டு என்னை ஊக்கப்படுத்தினார். அவர் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கக்கூடியவராகவும் இருந்தார். அதன் ஊடாக 1977 முதல் தினகரனில் எழுதக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன். அது நான் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் உருவாகக் களமாக அமைந்தது.
கேள்வி: தினகரனில் நீங்கள் எழுதிய சுந்தர் பதில்கள் சினிமா கேள்வி பதில் பகுதி இன்றும் நினைவு கூரப்படுகிறதே?
பதில்: தினகரனில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் நான் எழுதிக் கொண்டிருந்த சமயம் சினிமா தொடர்பான செய்திகளையும் ஆர்வத்துடன் எழுதினேன். சினிமா தொடர்பான செய்தி, கட்டுரைகளில் எனக்கிருந்த ஆர்வத்தையும் ஆற்றல்களையும் புரிந்து கொண்ட தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன், சுந்தர் பதில்கள் என்ற தலைப்பில் சினிமா கேள்வி பதில்கள் பகுதியை நடாத்த எனக்கு வாய்ப்பளித்தார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்பகுதியை ஆர்வத்தோடும் அர்ப்பணிப்புகளோடும் முன்னெடுத்தேன். அதனால் வாசகர்கள் மத்தியில் இப்பகுதிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது.
இப்பகுதிக்கு வாரா வாரம் பெருந்தொகையான தபாலட்டைகள் கிடைக்கப்பெறும். அவை சினிமா தொடர்பான கேள்விகளைத் தாங்கி இருக்கும்.
அன்றைய காலகட்டத்தில் தபாலட்டைகளில் கேள்வி கேட்கப்படுவது தான் வழக்கமாக இருந்தது. இவ்வாறு கிடைக்கப்பெறும் கேள்விகளைத் தெரிவு செய்து பதிலளிப்பேன்.
இது வாசகர்களுக்கு பெரும் இரசினைக்குரிய சுவையான பகுதியாக அமைந்திருந்தது. அதனால் தான் இரண்டு மூன்று தசாப்தங்கள் கடந்தும் கூட இன்றும் பலருக்கு இந்த சுந்தர் பதில்கள் நினைவை விட்டகலாத பகுதியாக இருக்கிறது.
அன்றைய காலப்பகுதியில் ஊடகத்துறை இன்று போன்று வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. வானொலியும் பத்திரிகைகளும் காணப்பட்ட அந்த யுகத்தில் பாடசாலை மாணவர்களும் இளம் சமுதாயத்தினரும் இப்பகுதியைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களது கேள்விகளுக்கான பதில்களுடன் அவர்களது பெயர்களும் பிரசுரிக்கப்பட்டமை அதற்கான முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
கேள்வி: இவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ள சுந்தர் பதில்களை தொகுத்து புத்தமாக வெளியிட்டுள்ளீர்களா அல்லது அதற்கான எண்ணங்கள்?
பதில்: இற்றை வரையும் அது குறித்து யோசிக்கவில்லை. இங்கு நீங்கள் வினவுவதால் அது குறித்து கவனம் செலுத்த நினைக்கிறேன். ஏனெனில் அது ஒரு சுவாரசியமான பகுதி. சில கேள்விகளும் பதில்களும் அன்றைய காலத்திற்கு மாத்திரமல்லாமல் காலம் கடந்தும் பிரயோசனமாக இருக்கக்கூடியவையாகும். அதனால் அவற்றை நூலாக்குவது நல்லதெனக் கருதுகிறேன்.
அதேநேரம் இப்பகுதியைப் பயன்படுத்தி வந்த பலர் பிற்காலத்தில் எழுத்தாளர்களாக உருவாகியுள்ளனர். இதனை இங்கு பெருமையோடு குறிப்பிடுகின்றேன். இப்பகுதியை சுமார் பத்து வருடங்களாக நடாத்தினேன். எனது புலம்பெயர்வோடு அப்பகுதி வெளிவந்ததாகத் தெரியவில்லை.
கேள்வி: நீங்கள் பணியாற்றிய காலப்பகுதியில் தினகரனின் செய்திகள், கட்டுரைகள் குறித்து குறிப்பிடுவதாயின்?
பதில்: நான் சுந்தர் பதில்கள் பகுதிக்கு பொறுப்பாக இருந்த சமயம் கொழும்பு மத்திய நிருபராகவும் கடமையாற்றவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இதன் ஊடாக செய்திகளை சேகரிப்பதற்காக ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்று வந்தேன். அக்காலப்பகுதியிலும் எல்லா வகையான செய்திகளுக்கும் தினகரன் இடமளித்தது. அரசாங்க செய்திகள் அதிகம் வெளி வரக்கூடிய பத்திரிகையாக தினகரன் விளங்கினாலும் அன்றைய எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட மக்கள் விடுதலை முன்னணி, லங்கா சமசமாஜகட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் செய்திகளும் கூட வெளியானது. அதற்கு ஆசிரியர் சிவகுருநாதன் இடமளித்திருந்தார்.
அதேநேரம் அக்காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு சென்று நான் சினிமா செய்தி சேகரித்து வருவேன். அது இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலம். யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட இயக்கங்களின் பல தலைவர்கள் தமிழ்நாட்டில் தான் தங்கியிருந்தனர். நான் இந்தியா செல்லும் சந்தர்ப்பங்களில் சினிமா செய்திகளுக்கு மேலதிகமாக அங்கிருந்த இலங்கை தீவிரவாதத் தலைவர்களையும் சந்தித்து செய்திகளையும் பேட்டிகளையும் எடுத்து வந்துள்ளேன். ஈரோஸ் பாலகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா, புளொட் வாசுதேவன், எல்.ரி.ரி.ஈ யோகி, திலகர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். அவர்களது செய்திகளும் பேட்டிகளும் கூட அன்று தினகரனில் வெளியாகின. தினகரன் தவிர்ந்த இலங்கையின் ஏனைய பத்திரிகைகளில் இத்தகைய செய்திகள் அன்று வெளியாகவில்லை.
அதேநேரம் தினகரனுக்காக உள்நாட்டிலும் பல அரசியல் தலைவர்களையும், அமைச்சர்களையும் மாத்திரமல்லாமல் தொழிற்சங்கத் தலைவர்களையும் நளீம் ஹாஜியார் போன்ற தொழிலதிபர்களையும் கூட நேரில் சந்தித்து பேட்டிகள் கண்டுள்ளேன். அவையும் தினகரனில் பிரசுரமாகியுள்ளன.
கேள்வி: புலம்பெயர்ந்து சென்ற பின்னர் உங்களது எழுத்து பணி எவ்வாறு உள்ளது?
பதில்: அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த எனக்கு அங்கு 208 வருடங்கள் பழமை வாய்ந்த வங்கியில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதுவே அவுஸ்திரேலியாவின் முதலாவது வங்கி. அத்தோடு என் எழுத்துப் பணியையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றேன். இவ்வருடத்துடன் எனது எழுத்துலகப் பிரவேசத்திற்கு 50 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்த சூழலிலும் எனது ஆக்கங்கள் இலங்கை, இந்தியா பத்திரிகைகளிலும் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சஞ்சிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளிவருகின்றன. அவற்றில் இந்தியாவின் கலைமகள், ராணி, சாவி, மஞ்சரி போன்ற பத்திரிகைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
அதேவேளை சில வருடங்களுக்கு முன்னர், ‘மறக்க முடியாத வில்லன்கள்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டேன். வழமையாக கதாநாயகர்கள் தொடர்பில் எழுதித்தான் புத்தகங்கள் வெளியிடுவார்கள். நான் வில்லன் நடிகர்கள் குறித்து எழுதிய தொடர் கட்டுரையைத் தொகுத்து இப்புத்தகத்தை தமிழகத்தில் வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது.
50 வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படங்களைப் பற்றி தற்போது வாரா வாரம் தொடராக எழுதி வருகிறேன். வாரம் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையில் எழுதப்படும் இக்கட்டுரையில் அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட விதம் அதன் போது இடம்பெற்ற சம்பங்களை இக்கட்டுரைகளில் குறிப்பிடுகின்றேன். அதுவும் நல்ல சுவாரசியமாக இருப்பதாக வாசகர்கள் தெரிவிக்கின்றனர். இதைவிட அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் இலக்கிய கூட்டங்கள், சந்திப்புக்களிலும் பங்குபற்றுகிறேன்.
கேள்வி: இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் செல்வாக்கு பெற்று இருப்பதை பத்திரிகையாளர் என்ற வகையில் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: தற்போது வெகுஜன ஊடகத்துறை பாரிய வளர்ச்சி கண்டிருக்கிறது. வானொலியும் பத்திரிகையும் மாத்திரம் காணப்பட்ட யுகம் மாறி இன்று தொலைக்காட்சி, வட்ஸ்அப், இன்டர்கிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. அவை மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெற்றுள்ளன. மக்களும் அவற்றில் கிடைக்கப்பெறும் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் நம்பகத்தன்மை என்று வரும் போது இன்றும் நாம் பத்திரிகையையே நம்ப வேண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் விரும்பியபடி தகவல்களை பரப்ப முடியும். அதனை வாசகர்கள் ஊர்ஜிதம் செய்து கொள்ள வசதி இல்லை. ஆனால் பத்திரிகைகள் எந்தவொரு செய்தியையும் பொறுப்புணர்வுடன் தான் வெளியிடும். அதனால் இன்றும் உண்மைக் செய்திகளின் உயிர் நாடியே பத்திரிகைகள் தான்.
அதனால் பத்திரிகைகளுக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வாசகர்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும். எந்தவொரு காலத்திலும் அதனைக் கைவிட்டு விடக்கூடாது.
கேள்வி: நிறைவாக நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?
பதில்: தினகரன் 92 வருடங்களாக வெற்றிகரமாக வெளிவருகிறது. அது ஒரு பாரிய வரலாற்று சாதனையாகும். கடந்த 92 வருட காலப்பகுதியில் எத்தனையோ விடயங்கள் இந்நாட்டில் இடம்பெற்றுவிட்டது. தமிழர்களும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களும் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றும் கூட இப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால் அது ஒரு வரலாற்று சிறப்பு தான்.
அதேநேரம் இன்றும் கூட சிறப்பான முறையில் தினகரன் தனது பணியை முன்னெடுத்து வருகிறது. இதற்கு இப்பத்திரிகையில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் உள்ளிட்ட எல்லா ஆக்கங்களும் நல்ல எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
ஆகவே இப்பத்திரிகை நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இன்னும் 8 வருடங்கள் தான் உள்ளன. அதனையும் மிக விமர்சையாகவும் சிறப்பாகவும் கொண்டாடக்கூடிய சந்தர்ப்பத்தை காலம் எங்களுக்கு வழங்க வேண்டும்.
நேர்காணல்: மர்லின் மரிக்கார்