வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களை சுமார் முப்பது வருட காலப்பகுதியாக வகுத்து நோக்க முடியும்.
பிரித்தானியரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், தமிழ்த் தலைவர்கள் அரசியல் உரிமைகளுக்காக சாத்வீக வழிகளில் போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டங்கள் வன்முறை வழிகளிலும், இராஜதந்திர ரீதியாகவும் அடக்கப்பட்டிருக்கின்றன. அஹிம்சை வழியில் போராடிய அமரர் மாவை சேனாதிராஜா போன்ற தமிழ்த் தலைவர்கள் சிறைவாசம் அனுபவிக்கவும் நேர்ந்துள்ளது.
அத்தகைய அஹிம்சைப் போராட்டங்களின் பலனை தமிழினம் பெற்றுக் கொண்டதில்லையென்பது வருத்தத்துக்குரிய உண்மை.
அவ்வாறான அஹிம்சைவழிப் போராட்டங்களில் மூன்று தசாப்த காலம் கடந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர் தரப்பிலிருந்து ஆயுதரீதியிலான போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக அஹிம்சைப் போராட்டங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின, அஹிம்சைப் போராட்டங்கள் தமிழ் இயக்கங்களால் அடக்கப்பட்டன.
தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்டங்கள் மூன்று தசாப்த காலத்தைக் கடந்த பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. சுமார் முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தினால் தமிழினம் கண்ட பலன் உயிரழிவுகளும், உடைமை அழிவுகளுமே தவிர வேறெதுவும் கிடையாது. ஒருபுறம் அரசாங்கப் படைகளுடனான யுத்தம், மறுபுறத்தில் சகோதரப் படுகொலைகள் என்றவாறு முப்பது வருட காலம் கடந்து விட்டது.
தமிழ் இயக்கங்களால் தமிழ் மக்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும், தமிழ் இயக்கங்களின் அச்சுறுத்தல் காரணமாக பெருமளவு தமிழர்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனரென்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்யாமலிருக்க முடியாது.
அதேசமயம் மூன்று தசாப்தகால யுத்தத்தில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, தென்னிலங்கையிலும் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளதையும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது.
இவ்வாறு முப்பது, முப்பது வருடங்களாக போராட்டங்களிலேயே காலத்தைக் கழித்துள்ள இனமாக தமிழினம் உள்ளது. தற்போது அடுத்தபடியான முப்பது வருட காலப்பகுதிக்கு தமிழினம் கால்பதித்துள்ளது. நீடித்த போராட்டங்கள் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி கவனிப்பாரற்றுப் போயுள்ளது என்பதை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடியும்.
வடக்கு, கிழக்கு தமிழினத்துக்கு அரசியல் உரிமைகள் அவசியமென்ற கருத்தை எவரும் புறந்தள்ளிவிட முடியாதென்பது உண்மை. ஆனால் அரசியல் உரிமைப் போராட்டங்கள் என்பதை முன்னிலைப்படுத்தி, அபிவிருத்தியை அலட்சியப்படுத்துவது எவ்வகையில் நியாயம்?
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ் விஜயத்தின் போது ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தமிழ்ப் பிரதேச அபிவிருத்தியில் ஜனாதிபதி காண்பிக்கின்ற அக்கறையையும், அவர் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தமிழ்ப் பிரதேச அபிவிருத்தியிலும், நீண்டகால யுத்தத்தினால் நொந்து போயுள்ள மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதிலும் அங்குள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மிகுந்த அக்கறை கொள்வதே தற்போது அவசியமாகின்றது.