மதுரைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோழர் அந்தனிஜீவாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியை நியூசெஞ்சுரி புக் ஹவுஸில் அண்யமையில் நடந்தது. த.க.இ.பெ. மாவட்டத் தலைவர் கவிஞர் மு.செல்லா தலைமை வகித்தார். அவர் தமதுரையில் “தோழர் அந்தனி ஜீவாவின் ஆக்கங்கள் குறித்துத் தனியாக ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டும்” என்றார்.
காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் த.க.இ.பெ. மாநிலத் துணைச்செயலருமான பேராசிரியர் பா.ஆனந்தகுமார் பேசுகையில், “அந்தனி ஜீவா அரசியல், இலக்கியம், இதழியல் என்ற முத்தளங்களிலும் பெரிய சாதனைகளைப் படைத்தவர். நாடகத்தை எளிய மனிதர்களின் ஆயுதமாக்கியவர். தனது காலத்துப் படைப்பாளிகளை மதித்தவர். பெண்களின் சிறுகதைகள், கவிதைகளைத் தொகுத்து ஆவணமாக்கினார். அரசியலில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தார். எல்லாத் தரப்பு ஆளுமைகளின் நேசிப்புக்கு உரியவராக இருந்தார். தமிழகத் தொடர்புகளைக் கடைசிவரை பேணியவர். அத்தகைய ஆளுமையாளரைக் கொண்டாட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார். ஈழம் அநுராதபுரத்தில் பிறந்த, கூடல்நகர் பாரதி கவிதா மண்டலத்தின் தலைவர், தோழர் கவிஞர் பேனா.மனோகரன் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இலக்கிய விமர்சகர் முனைவர் ந.முருகேசபாண்டியன், த.மு.எ.க.ச.வின் மதுரை மாவட்டச் செயலர் ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா, த.மு.எ.க.ச.வின் மாநிலக்குழு உறுப்பினர் சோழநாகராஜன் முதலாகப் பலர் கலந்துகொண்டு தங்களது நினைவேந்தல் உரையை வழங்கினர்.
த.க.இ.பெ. பொருளாளர் தோழர் கவிஞர் தமிழ்சிவா, அந்தனிஜீவாவின் “அமைதி கோர்ட் நடந்துகொண்டிருக்கிறது” என்ற கட்டுரை நூலை 2010இல் வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் நா.வானமாமலை முன்னுரையுடன் வெளியான “ஈழத்தில் தமிழ் நாடகம்” ஆகியவற்றை மீள்பதிப்பாக வெளியிட வேண்டும்” என்ற கருத்துரையை முன்வைத்தார். த.நா.க.இ.பெ. மாவட்டத் துணைச்செயலர், கவிஞர் ஜி.மஞ்சுளா வரவேற்றார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் முதுநிலை விற்பனைச் சீரமைப்பாளர் தோழர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். த.க.இ.பெ. கவிஞர் முத்தையா புலவர் அஞ்சலித் தீர்மானத்தைப் படித்தார்.