ஹமாஸ் – இஸ்ரேல் போர் 15 மாத காலப்பகுதிக்கு பின்னர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இரு தரப்புக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீண்ட போர் மேற்காசிய பிராந்தியத்தில் முடிவுக்கு வர உள்ளதாகவும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்தகைய போர் நிறுத்த உடன்பாடு சாத்தியமான செய்முறையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கிறதா என்ற கேள்வி பலரிடமும் காணப்பாடுகிறது. முன்னரும் இவ்வாறு பல போர்நிறுத்த உடன்பாடுகள் எட்டப்பட்ட போதும் அமுலுக்கு வராமல் கைவிடப்பட்டதோடு, தீவிர தாக்குதல்களும் அழிவுகளும் கடந்த 15 மாத கால பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. இப்பின்னணியில் இப்போது எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த உடன்பாட்டு மீதும் அதிக சந்தேகங்கள் காணப்படுகிறது. இக்கட்டுரையும் போர் நிறுத்தம் மற்றும் அதன் சாத்தியப்பாட்டை தேடுவதாக உள்ளது.
அமெரிக்கா, கட்டார் என்பன இணைந்து மேற்கொண்ட முயற்சியின் விளைவாக போர் நிறுத்த உடன்பாடு இன்றைய தினத்திலிருந்து (19.01.2025) அமுலுக்கு வர உள்ளதாக தெரிய வருகிறது. போர் நிறுத்த உடன்பாடு தொடர்பில் இஸ்ரேலிய அமைச்சரவையின் முடிவினை பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அவர் காசாவில் இருந்து பணயக் கைதிகள் விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பணயக் கைதிகள் திரும்புதலை உறுதி செய்தல் உள்ளிட்ட போர் இலக்குகள் அனைத்திலும் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குள் திரும்ப அனுமதிக்கப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இப்போர் நிறுத்த உடன்பாடு மூன்று கட்டங்களாக நிகழும் என்றும் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் பிளிங்டன் தெரிவித்துள்ளார்.
முதலாவது கட்டம், இரு தரப்பினதும் பணயக் கைதிகள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கையாக அமைய உள்ளது. 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நிலப்பரப்புக்குள் புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட யூதர்களில் பணயக் கைதிகளாக 94 பேர் எஞ்சியுள்ளர். அதிலும் 60 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் தெரியவருகின்றது. அவர்களை முதல் ஆறு வாரத்தில் விடுவிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் 33 பேர் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் விடுவிக்கப்பட திட்டமிடுவதாகவும் தெரிய வருகின்றது. பதிலுக்கு ஆயிரம் பலஸ்தீன போராளிகள் விடுவிக்கப்பட இஸ்ரேலிய அரசாங்கம் உடன்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டம், போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட 16ஆவது நாளிலிருந்து நிரந்தர போர் நிறுத்த உடன்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் பிரகாரம் எஞ்சியுள்ள பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான நிகழ்வுகளோடு முழுமையான போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் காசா நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் படிப்படியாக வெளியேறும் திட்டத்தையும் கொண்டுள்ளது.
மூன்றாவது கட்டம், காசா நிலப்பரப்பில் கட்டுமானத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பாலஸ்தீனர்களின் குடியிருப்புகள் மீள உருவாக்கப்படும் எனவும் உடன்பாட்டின் உள்ளடக்கம் உறுதிப்படுத்துகின்றது. அத்தோடு காசா நிலப் பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பல முன் முயற்சிகள் கடந்த 15 மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட போதும் அவை அனைத்தும் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் மீறப்பட்டதோடு, பிராந்திய ரீதியான போருக்கான சூழலை ஏற்படுத்த முனைந்திருந்தது. தற்போதைய போர் நிறுத்தம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வருகின்ற நிலையில் எட்டப்பட்டுள்ளது. அதனால் இஸ்ரேலிய அரசாங்கம் மட்டுமன்றி அமெரிக்காவும் அதன் புதிய ஆட்சியும் இவ்வுடன்பாட்டை சாத்தியப்படுத்துமா என்ற கேள்வி அதீதமாக எழுந்துள்ளது. அதற்கான நியாயப்பாடுகளை தேடுவது அவசியமானதாகும்.
ஒன்று, போர் நிறுத்த உடன்பாட்டுக்கு இஸ்ரேலிய அமைச்சரவை நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒப்புதல் அளித்துள்ளது. அத்தகைய ஒப்புதலும் காசாவில் இருந்து பணயக் கைதிகைள விடுவிக்கும் ஒப்பந்தம் என்றே குறிப்பிட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரதான நோக்கம் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதாகும். 15 மாத கால போரிலும் ஹமாஸ் அமைப்பினால் கைது செய்யப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முடியாத நிலையில், அதனால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தெரிகின்றது. இத்தகைய நிலை என்பது இஸ்ரேலிய அரசாங்கத்தின் பலவீனம் மட்டுமின்றி, அதன் இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறைகளின் இருப்பையும் ஹமாஸின் நடவடிக்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஹமாஸின் போரியல் உத்தியில் மிகப் பிரதானமான ஒன்றாக பணயக் கைதிகள் விடயம் பார்க்கப்படுகிறது. ஆனால் அதனை இஸ்ரேலிய புலனாய்வுத் துறையினரால் தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் ஹமாஸ் தரப்பிலிருந்து எஞ்சியுள்ள பணயக் கைதிகள் முழுமையாக விடுதலை செய்வதற்கான வாய்ப்பை போர் நிறுத்த உடன்பாடு சாத்தியப்படுத்துமா என்ற சந்தேகம் எழுகின்றது. அதுமட்டுமின்றி கொல்லப்பட்ட பணயக் கைதிகளின் உடல்களை மூன்றாவது கட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் கையளிப்பது என்றும் உடன்பாடு தெரிவிக்கின்றது. இவை யூதர்கள் மத்தியில் ஏற்படுத்த இருக்கின்ற பிரதிபலிப்புகளே போர் நிறுத்த உடன்பாட்டின் நீடிப்புக்கான வாய்ப்பாக தெரிகின்றது .
இரண்டு, ஹமாஸ் தரப்பை பொறுத்தவரை காசா நிலப்பரப்பை இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து முழுமையாக மீட்பது என்பதே நோக்கமாக உள்ளது. அதற்கான வாய்ப்பை எவ்வாறு இஸ்ரேலிய தரப்பு சாத்தியப்படுத்தும் என்பது கேள்விக்குரியதாக அமைகிறது. மீளவும் ஒரு தாக்குதலை ஹமாஸ் மேற்கொள்ளாது என்பதற்கு எத்தகைய உத்தரவாதம் இல்லாத சூழலை ஒருபோதும் இஸ்ரேலிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது. அதனை கடந்து ஹமாஸின் எல்லைகளினால் இஸ்ரேலின் அயல்நாடுகளினால் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பு அரணாக எல்லைகள் அமைந்திருப்பதற்கு, காசா நிலப்பரப்பு காணப்படுவதும் முக்கியமானது. எனவே அத்தகைய நிலப்பரப்பை முழுமையாக கைவிட்டு இஸ்ரேலிய இராணுவம் வெளியேறுமா என்ற கேள்வி யதார்த்தமானது. அதனை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் கடந்த 15 மாத காலப்பகுதியை இழந்துள்ளதோடு, அக்காலப் பகுதியில் ஏற்பட்ட இராணுவ, பொருளாதார இழப்பீடுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்பதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும். ஒரு நீண்ட யுத்தத்தை பலஸ்தீனர் மீது நிகழ்த்திய இஸ்ரேல் அதன் சாதகமான விளைவுகளை விட்டுக் கொடுக்கும் என்று கணிப்பிட முடியாது.
மூன்று, போர் நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய பல பலஸ்தீனர்கள் மீளவும் தமது குடியிருப்புகளுக்கு திரும்பலாம் என குறிப்பிட்டுள்ளது. ஏறக்குறைய காசா பகுதியில் அனைத்து குடியிருப்புகளும் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் மற்றும் குண்டுத் தாக்குதல்களால் அழிந்து போய் இருக்கின்றது. இந்நிலையில், பலஸ்தீனர்கள் மீளக் குடியமர்வது என்பது கடினமான இலக்காக அமைகின்றது. கடினமான இலக்கை நோக்கி அந்த மக்கள் மீள குடியேறுவது என்பது நீண்ட செய்முறைக்கு பின்னரே சாத்தியமானது ஆகும். அதனை நோக்கிய காலப்பகுதியின் பொருளாதார ஒத்துழைப்பு, மேல்கட்டுமானதுக்கான நிதி, போன்ற பல விடயங்கள் இவ்வுடன்பாட்டில் முதன்மைப்படுத்தப்படவில்லை. இதனால் இந்த உடன்பாட்டின் பிரகாரம் பணயக் கைதிகள் பரிமாற்றத்தோடு முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாகவே தெரிகின்றது. அதிலும் இரு தரப்பும் முழுமையாக ஒத்துழைக்குமா என்கின்ற கேள்வி தவிர்க்க முடியாததாக அமைகின்றது.
எனவே, ஹமாஸ் இஸ்ரேலிய தரப்புகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் போர் நிறுத்த உடன்பாடு, நீடிப்பதற்கான வாய்ப்பினை மிக அரிதாகவே கொண்டிருக்கின்றது. உடன்பாட்டின் உள்ளடக்கங்களும் பிராந்திய மற்றும் சர்வதேச சூழலும் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடியதாக அமையவில்லை என்றே தெரிகின்றது. இரு தரப்பும் நெருக்கடிமிக்க சூழலில் மீளவும் ஒரு போரை தொடங்கும் யதார்த்தமே தென்படுகிறது. தற்காலிக அமைதி இருதரப்புக்கும் தேவைப்படுகிறது. அத்தகைய தற்கால அமைதியை முதன்மைப்படுத்தும் விதத்திலே உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கத்தை பொறுத்தவரையில் பணயக் கைதிகள் விவகாரம் நீண்ட அரசியல், இராணுவ நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதனை முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்த உடன்பாட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் தரப்பை பொறுத்தவரை மக்களை மீளக்குடியமர்த்துவது போரை முடிவுக்கு கொண்டு வருவதன் ஊடாகவே சாத்தியமாவதோடு, போருக்கான அர்த்தங்களை முழுமையாக மீளமைக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கிறது. அதனால் ஒரு நீண்ட போர் நிறுத்த உடன்பாடு தேவைப்படுகிறது.
இத்தகைய இரு தரப்பின் இலக்குகளே இப்போர் நிறுத்த உடன்பாட்டின் உள்ளடக்கமாகும். ஆனால் இஸ்ரேலிய அரசாங்கம் தனக்கான வாய்ப்புகளை சரியாக அளவீடு செய்து, அதன் அடுத்த கட்ட நடவடிக்கையை சாத்தியப்படுத்தும்.