மன்னர் ஃபஹ்த் அல்குர்ஆன் அச்சகம், சவுதி அரேபியாவின் மதீனாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அல்குர்ஆன் அச்சகமாகும்.
இது புனிதக் குர்ஆனை அச்சிட்டுப் பரப்புவதும் மட்டுமின்றி, அதன் தரமான உச்சரிப்பு, விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு வேலைகளை மேற்கொள்கின்ற ஒரு மையமுமாகும். இவ் அச்சகம் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களுக்கு சேவை செய்து வருகின்றது.
தொடக்கம் மற்றும் நிறுவல்
1984 ஆம் ஆண்டில், சவுதி அரேபியாவின் மன்னர் ஃபஹ்த் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதை நிறுவினார். அதன் அங்குரார்ப்பண நிகழ்வின்போது, அவர்; “எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் புனிதக் அல் குர்ஆனுக்கு சேவை செய்வதாகும்.” என்று கூறினார்கள். இந்நிறுவனம் உலகளாவிய முஸ்லிம்களுக்கு புனிதக் குர்ஆனை துல்லியமாக வழங்கும் நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பணிகள்
இந்நிறுவனம் அது ஸ்தாபிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை பல முக்கியமான பணிகளை செய்து வருகின்றது. அவற்றுள் சில பின்வருமாறு:
1. புனிதக் குர்ஆன் அச்சிடுதல்:
* புனித அல் குர்ஆன் அச்சிடுவதில் மிக உயர்தர இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* ஆண்டுதோறும் 18 கோடிக்கும் மேல் அல் குர்ஆன் பிரதிகள் அச்சிடப்படுகின்றன.
2. மொழிபெயர்ப்பு:
அல் குர்ஆனின் பிரதிகள் அனைத்து மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் 74 மொழிகளில் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனுள் தமிழ், ஆங்கிலம், உருது, மலாய், இந்தி, பாஷா மற்றும் சீன மொழிகள் அடங்கும்.
3. உச்சரிப்பு ஆராய்ச்சி:
* ஹஃப்ஸ், வர்ஷ் மற்றும் இதர அல்குர்ஆன் ஓதல் முறைகளின் சரியான உச்சரிப்புகளைப் பரப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
* தஜ்வீத் விதிகள் குறித்து தனியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
4. இலவச விநியோகம்:
* உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் முஸ்லிம் அமைப்புகளுக்கு குர்ஆன் பிரதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
* விசேஷமான சந்தர்ப்பங்கள் மற்றும் புனித மாதங்களில் இதன் விநியோகம் அதிகரிக்கிறது.
5. அல்குர்ஆன் சார்ந்த ஆராய்ச்சிகள்:
இவ்வச்சகத்தில் அல்குர்ஆன் மட்டுமல்லாது இன்னும் பல ஆய்வுகள் அச்சிட்டு விநியோகிக்கப்படுகின்றன, அவற்றுள் பின்வருவன மிக முக்கியமானவை:
– அல் குர்ஆனை விவரிக்கும் விளக்க நூல்கள், தஃப்ஸீர்கள் மற்றும் ஹதீஸ்களுடன் தொடர்பு பட்ட ஆய்வு நூல்கள்.
தரமான உத்திகள் மற்றும் தொழில்நுட்பம் இவ்வச்சகம் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது:
* அச்சு இயந்திரங்கள்: மிக முன்னேற்றமான தொழில்நுட்பத்தைக் கொண்ட இயந்திரங்கள் பயன்படுகின்றன.
* அச்சு தரம்: அனைத்தும் உயர் தரமான காகிதங்களிலும் அச்சிடப்பட்டு நீண்ட கால பயன்பாட்டிற்கான அமைப்புடன் தயாரிக்கப்படுகின்றன.
* கண்காணிப்பு: ஒவ்வொரு பிரதியும் துல்லியமாக சரிபார்க்கப்பட்ட பின் வெளியிடப்படுகிறது.
சிறப்பு பங்களிப்புகள்
இந்நிறுவனத்தினால் உலகம் எங்கும் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக பங்களிப்புக்களுள் சில பின்வருமாறு:
* முஸ்லிம்களுக்கான வழிகாட்டி:
இந்நிறுவனம், இஸ்லாமிய சமூகங்களின் ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை பங்களிப்பை வழங்குகிறது.
* மதீனா ஃபொண்ட் (Madinah Script):
குர்ஆனை துல்லியமாக வாசிக்க உதவும் அழகான எழுத்துருவை அறிமுகப்படுத்தியது.
* தொழில்நுட்ப ஆவணங்கள்:
இப்போது, குர்ஆன் டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கிறது, பல்வேறு பப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தளங்களின் மூலம் உலகெங்கும் பிரசாரம் செய்யப்படுகிறது.
* பிரதான நோக்கங்கள்
அளப்பரிய சேவைகளை வழங்கும் இந்நிறுவனத்தில் பிரதான நோக்கங்கள் பின்வருமாறு:
1. உலகளாவிய முஸ்லிம்களுக்கு புனிதக் குர்ஆனை அடையச் செய்வது.
2. குர்ஆனின் அறிவு மற்றும் உச்சரிப்பு போன்றவற்றைத் துல்லியத்தை பாதுகாப்பது.
3. இஸ்லாமிய கலாசார பரிமாற்றத்தை ஊக்குவிப்பது.
அல்குர்ஆன் பதிப்பு பற்றிய மேலதிக தகவல்:
* வருடாந்தம் இங்கு மூன்றுக்கு மேற்பட்ட மில்லியன் பிரதிகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
* இதன் செலவுகள் முழுமையாக சவுதி அரசின் நிதியுதவியால் நிரப்பப்படுகிறது.
மன்னர் ஃபஹ்த் அல்குர்ஆன் அச்சகம் உலகின் மிகப் பெரும் இஸ்லாமிய நூலகமாகவும் குர்ஆன் அச்சிடும் மையமாகவும் விளங்குகிறது. இது, சவுதி அரேபியா இஸ்லாமிய உலகிற்கு வழங்கிய ஓர் அரிய அன்பளிப்பாகவே திகழ்கிறது.
கலாநிதி எம்.எச்.எம். அஸ்ஹர்