இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்புகள் இருந்தாலும், எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரமானது பல தசாப்தங்களாகத் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாக நீடித்து வருகின்றது.
இலங்கையிலும், இந்தியாவிலும் மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசாங்கங்கள் இவ்விவகாரத்தில் அவ்வப்போது அக்கறை காண்பித்தாலும், இதுவரை எந்தவொரு அரசினாலும் இதற்குத் தீர்வுகாண முடியாமல் உள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்திய மீனவர்களின் எல்லைமீறிய மீன்பிடிப் பிரச்சினை மீண்டும் ஒரு முறை பேசுபொருளாகியுள்ளது. இந்தியாவின் தமிழக அரசாங்கத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை தமிழ் அரசியல்வாதிகள், மீனவர் பிரச்சினை பற்றிக் கூறிய கருத்துகளாலேயே இது மீண்டும் பேசப்படுகின்றது.
அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது மீனவர் விவகாரம் குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பியிருந்தன. இதற்குப் பதிலளித்த கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் சந்திரசேகர், உண்மையை விளக்கியிருந்தார்.
‘தமிழக மீனவர்களால் ஆந்திரா, கேரளா, குஜராத் அல்லது பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியுமா? ஆனால், இலங்கை கடற்பரப்பில் மாத்திரம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதுடன், எதிர்கால தலைமுறையின் கடல்பரப்பையும் சூறையாடுகின்றனர். இதனாலேயே சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கின்றது’ என அவர் கூறியிருந்தார்.
இலங்கையில் தடைசெய்யப்படட மீன்பிடி முறையான இழுவைப் படகைப் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் இந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், தன்னைச் சந்தித்த தமிழக மீனவப் பிரதிநிதிகளிடம் இந்த யதார்த்தத்தை எடுத்துக் கூறியிருப்பதாகவும் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டியிருந்தார். மீனவர் விவகாரம் குறித்து தமிழக அரசாங்கத்துடனும், புதுடில்லியில் உள்ள மத்திய அரசாங்கத்துடனும் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், குறித்த மாநாட்டுக்குச் சென்றிருந்த ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகள் மீனவர் விவகாரம் குறித்து தமிழக அரசாங்கத்துடன் எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்தவில்லையென்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மீனவர் விவகாரம் குறித்துக் கலந்துரையாட தமிழக முதலமைச்சரிடம் தாம் நேரம் கோரியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார். ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகள் இதுபற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. இருந்தபோதும், மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்திய அமைச்சர் சந்திரசேகர், இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளுடனான பேச்சுகளை ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் மீன்பிடி விவகாரம் அவ்வப்போது பேசப்படுவதும் பின்னர் மறக்கப்படுவதும் மாறி மாறி இடம்பெறும் நிகழ்வுகளாகிப் போயுள்ளன. குறிப்பாக இந்தியாவின் தேர்தல் காலங்களில் (சட்டமன்ற, பாராளுமன்ற) தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வாக்குக் கோரப்படும்.
அதன் பின்னர் தேர்தல் முடிந்ததும் தமது நாட்டு மீனவர்கள் பற்றி தமிழக அரசியல்வாதிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையான படகுகளில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, அதுவும் இலங்கைக் கரையிலிருந்து சில கிலோமீற்றர் தூரம்வரை வந்து மீன்பிடித்துச் செல்வது மாத்திரமன்றி, கடல் வளத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அடிமட்டம் வரை சென்று மீன்பிடிக்கக் கூடிய மீன்பிடி முறைமையைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் இலங்கை மீனவர்களின் கடல்வளம் அழிவடைந்து அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் காரணமாக பல தசாப்தங்களாக வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்ட வடக்கு மீனவர்களே இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.
பெரும் எண்ணிக்கையான இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்கள் எவ்வாறு அத்துமீறி நுழைகின்றன என்பது செய்மதிப் படங்களின் மூலம் பதிவுசெய்யப்பட்டு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கையளிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இதுபற்றி இந்திய மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், அவர்கள் இதனை ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்த மீனவர்களுக்கு மாற்று மீன்பிடி முறையை அறிமுகப்படுத்துவது பற்றிய பேச்சுக்கள் எழுந்தபோதும், இதுவரை அதற்கான தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் எல்லை தாண்டிய இந்திய மீனவர் விவகாரம் பற்றி கவனம் செலுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தமிழ் அரசியல் தலைவர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள் காண்பித்த அக்கறை போதாது என்பதே இலங்கை மீனவ சமூகத்தின் குறைப்பாடாக உள்ளது. ஏனெனில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இழுவைப் படகுகள் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை. எனினும், அதில் பணியாற்றும் மீனவர்களே சிக்கலுக்கு முகம்கொடுக்கின்றனர்.
அதேபோல, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழக அரசாங்கத்துடன் உறவுகளைப் பேணி வருகின்றபோதும், மீனவர் பிரச்சினையைத் தீர்க்க அனைவரும் ஒன்றுசேர்ந்து இதுவரை பணியாற்றவில்லை. அவ்வாறு பார்க்கும்போது மீனவர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தரப்புக்கும், இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தரப்பினருக்கும் உண்மையான நோக்கம் இல்லையோ என்றும் சந்தேகிக்கத் தோன்றுகின்றது.
இவ்விடயத்தில் மனிதாபிமான ரீதியில் சிந்திக்க வேண்டிய கடப்பாடு தமிழக அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஓரளவுக்குத் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் தமது தொப்புக்கொடி உறவுகளான வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யக்கூடாது என்பதை தமிழக அரசியல் தலைவர்களும், தமிழக மீன்பிடி சமூகத்தினரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோல, தமிழக மீனவர்களுக்கு மாற்று மீன்பிடி முறைகளை நடைமுறைப்படுத்துவதில் இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மறுபக்கத்தில், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எல்லைகளில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதும் அவசியமான விடயமாகும்.
பி.ஹர்ஷன்