அரசியல்வாதிகளில் தங்கியிருந்த காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ‘தகவல்களின் அடிப்படையில் திட்டங்களை வகுக்கும்போது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அரிசி, தேங்காய் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளில் அரசாங்கம் தேவையான தலையீடுகளை மேற்கொண்டுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கே: பிரதமர் என்ற ரீதியில் உங்கள் பணிகள் எவ்வாறு அமைந்துள்ளன?
பதில்: பிரதமராகக் கடமைகளை முன்னெடுத்திருந்தாலும் பிரதமர் என்ற உத்தியோகபூர்வ பதவிக்கு அப்பால் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு நிறையப் பணியாற்ற வேண்டியுள்ளது. கல்வி அமைச்சருக்கான பொறுப்பை நிறைவேற்றுவதிலேயே நான் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளேன்.
கே: கடந்த அரசாங்க காலத்தில் நீங்கள் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்திற்கு எதிராகக் குரல்கொடுத்து பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்தீர்கள். தற்பொழுது நீங்கள் அரசாங்கம் அமைத்துள்ளீர்கள். அரசாங்கம் அமைந்து ஏறத்தாழ நூறு நாட்கள் ஆகியுள்ளன. இதுவரையான பயணம் தொடர்பில் நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?
பதில்: நாடு தொடர்பில் தொலைநோக்கு சிந்தனையொன்று இருந்தமையாலேயே இந்த நாட்டைப் பொறுப்பேற்க, அரசாங்கத்தை அமைக்க பல நாட்களாக நாம் கலந்துரையாடி திட்டங்களை வகுத்தோம். பல வருடங்களாகப் போராடியே இந்த இடத்திற்கு நாம் வந்துள்ளோம். நமக்குப் புலப்பட்ட பிரச்சினைகளை ஒவ்வொன்றாகத் தீர்ப்பதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களைக் காணும்போதே திருப்தி ஏற்படுகின்றது. இதனைப் பார்க்கும்போது ‘சிக்ஸோ’ புதிரை தீர்ப்பதைப் போன்றே எண்ணத் தோன்றுகின்றது. இதன் துண்டுகள் அனைத்துப் பக்கங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து தீர்க்க வேண்டியுள்ளது.
கே: இதனைச் செய்வது சிரமமானதா?
பதில்: நினைத்ததைவிட கடினம் எனக் கூறவேண்டியுள்ளது ஏனெனில், எனது பார்வைக்கு அமைய நாட்டில் காணப்பட்ட கட்டமைப்பின் கீழ் அரசியலுக்கு மாத்திரமே அதிகாரம் காணப்பட்டமையால், சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் தற்பொழுதுள்ள கட்டமைப்பின் கீழ் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை எடுத்துக் கொண்டால், அரசியல் அதிகாரத்துடன் இணைந்திருந்தால் மாத்திரமே வேலைசெய்ய முடியும். இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாது. இதனால் அரசாங்க நிறுவனங்கள் யாவும் வீழ்ச்சியடைந்துள்ளன. பல தசாப்தங்களாக அரசியல்வாதிகளின் ஊடாகவே வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தமையால், மக்கள் சார்பில் பணியாற்ற வேண்டிய கட்டமைப்புகள் யாவும் பலவீனமடைந்துள்ளன. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதிலேயே எமக்கு சவால் காணப்படுகின்றது. அமைச்சை எடுத்துக் கொண்டால் திட்டமிடல்களுக்கு அமைய தீர்மானம் எடுப்பதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும், அவை குறித்து பொறுப்புக் கூறுவதற்குமான சுதந்திரம் தற்பொழுதே அமைச்சின் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது. இவ்வாறான நிலைக்குக் கொண்டுவருவது பாரிய சவாலாக இருந்தது. இந்நிலைமை முற்றாக மாறவில்லை. அரசியல்வாதிகள் தீர்மானம் எடுத்து நடைமுறைப்படுத்தும் வரையில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அனைவரும் ஒன்றிணைந்தே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இதில் ஒவ்வொருவரும் பங்குதாரர்கள். பல வருடங்களாக ஏனையவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. முழுமையாக அரசியல்வாதிகள் மீது தங்கியிருக்கும் நிலையே காணப்பட்டது. தங்கியிருக்கும் நிலையிலிருந்து அவர்களை மீட்டு, தாம் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்ற நிலைக்குக் கொண்டுவருவதிலேயே சிரமம் இருந்தது.
கே: அரசாங்கத்திற்கு அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கின்றதா?
பதில்: எனக்கு ஒத்துழைப்புக் கிடைக்கின்றது. எம்முடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது என்ற நிச்சயமற்ற தன்மை ஆரம்பத்தில் அதிகாரிகளிடமிருந்த போதும், அவர்களுடனான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒத்துழைப்புக் கிடைக்கின்றது. அத்துடன், தமது திறமை குறித்த நம்பிக்கையும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சரியான தீர்மானத்தை எடுத்து மக்களுக்காகப் பணியாற்றினால் அரசியல் ரீதியாக எம்மிடமிருந்து வலுவான ஒத்துழைப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் எனக்கு அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்புக் கிடைத்து வருகின்றது. அது மாத்திரமன்றி, அவர்களும் இந்தப் பயணத்தின் ஒரு பங்குதாரர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. கல்வி அமைச்சை எடுத்துக் கொண்டால் இதுவரையில் அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அதிகாரிகளுக்கு அப்பால் எடுத்த தீர்மானங்களாக இருந்தன. இந்த நிலைமை மாறியிருப்பதுடன், எமது புதிய கலாசாரம் அவர்களுக்குப் புரியாமல் இருக்கின்றது. படிப்படியாக இது பற்றிய புரிதல் ஏற்பட்டு ஒத்துழைப்பு அதிகரித்து வருகின்றது.
கேள்வி: பொதுமக்களின் தரப்பை எடுத்துக் கொண்டால் அரிசி, தேங்காய் தட்டுப்பாடு மற்றும் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றைத் தீர்ப்பதற்குப் போதுமான காலம் இல்லையென்றாலும், இவை தொடர்பில் அரசாங்கம் உரிய தலையீடுகளை மேற்கொண்டுள்ளதா?
பதில்: அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொண்டுள்ளது என நான் நம்புகின்றேன். அரிசிப் பிரச்சினை என்பது தனியான அரசித் தட்டுப்பாடு குறித்த பிரச்சினை அல்ல. நிர்வாகம் செய்வதில் காணப்படும் பிரச்சினை. ஏதாவது ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்போது அதற்கான தகவல்கள் அவசியம். அரிசியை எடுத்துக் கொண்டால் நாட்டுக்குத் தேவையான அளவு, களஞ்சியங்களில் எந்தளவு அரசி உள்ளது போன்ற சகல தகவல்களும் திட்டமிடலுக்கு அவசியம். உண்மையில் எமக்கு இருப்பது தகவல் கிடைக்கும் பிரச்சினையே. இதனால் தீரமானம் எடுப்பதில் தாமதம்ஏற்படுகின்றது அல்லது பிரச்சினை தீவிரம் அடைந்த பின்னரே அது பற்றித் தெரியவருகின்றது. அவ்வாறான நிலைமைகளையே நாம் பார்க்கின்றோம். இதுபோன்று நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. தகவல்கள் இல்லாத சூழலில் தீர்மானங்கள் எடுக்கும் நிர்வாக முறையையே மக்கள் நிராகரித்தனர். எனினும், எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் சரியானதாக எடுப்பதற்கே நாம் எப்பொழுதும் முயற்சிக்கின்றோம். ஏனெனில், பிரச்சினையொன்றுக்கு நாம் கொடுக்கும் தீர்வு எதிர்காலத்தில் மற்றுமொரு பிரச்சினைக்கு வித்திட்டுவிடக் கூடாது என்பதில் அவதானமாக இருக்கின்றோம்.
கே: பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து நீண்டகாலம் அரசியலில் இருக்கும் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடனேயே வாக்களித்திருந்தனர். கடந்த காலத்தில் பல அரசியல்வாதிகளின் கோப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தக் கோப்புகளுக்குத் தற்பொழுது என்ன நடந்துள்ளது? இவற்றுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன?
பதில்: சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தக் கோப்புகள் குறித்து நாம் மறக்கவில்லை, மறைக்கவுமில்லை. உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் பலன்களை எதிர்காலத்தில் அறிய முடியும். நாம் வழக்குத் தாக்கல் செய்வது அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதற்கு அல்ல. இதனால் பிரபல்யம் அடைவதற்காக நாம் அவசரப்படவில்லை. உரிய நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுத்து வருகின்றோம். நாம் எதனையும் விளையாட்டாகச் செய்யவில்லையே! எனவே அவை தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுப்போம்.
கே: கல்வித்துறையின் மறுசீரமைப்பு குறித்த திட்டங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனை மேற்கொள்வதற்கு எடுத்துள்ள ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் யாவை?
பதில்: உண்மையில், கடந்த அரசாங்கத்தினால் இவ்வருடத்தில் புதிய பாடத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவிருந்தது. எனினும், அந்தப் பாடத்திட்டத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது அமைச்சைப் பொறுப்பேற்றவுடன் எனக்குப் புரிந்துவிட்டது. சிறந்த பாடத்திட்டத்தைத் தயாரிக்க ஆசிரியர்கள் இருக்க வேண்டும், அதேபோல சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைக் கட்டமைப்பும் அவசியம். இது பற்றி ஆசிரியர்களுக்கும் தெரியாது, பெற்றோருக்கும் தெரியாது, மாணவர்களுக்கும் தெரியாது. இதை நடைமுறைப்படுத்தினால் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நிறுத்தியுள்ளோம். சரியான திட்டமிடல்களுடன் தயாரிக்கப்படும் பாடத்திட்டத்தைக் கொண்டுவர தீர்மானித்துள்ளோம்.
கல்வித்துறையில் வெவ்வேறு திட்டங்கள் தனித்தனியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் இணக்கப்பாடு இல்லை. எனவே, கல்வி அமைச்சு மற்றும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்கின்றோம். இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் கல்வித்துறையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.