இலங்கை தமிழரசுக் கட்சி சமஸ்டியை இலக்காக கொண்டது. எனவே சமஸ்டி தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமாயின் அதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போமென நேற்று(18) திருகோணமலையில் கட்சியின் பேச்சாளர் ம.ஏ.சுமந்திரன் கூறினார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் மேலும் கூறுகையில்
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கட்சியின் சார்பில் கடிதம் ஒன்றை அரசாங்கத்துக்கு எழுதவுள்ளோம்.
எமது கோரிக்கையான சமஸ்டி தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால் எமது கட்சி அதனை ஆதரிக்கும். மேலும் கட்சி என்ற வகையில் எமது மக்களின் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்ட அரசியல் யாப்பு தொடர்பில் கலந்தாலோசிக்க உள்ளோம். கட்சி மட்டத்தில் இதற்கென விசேட உப குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக கட்சியின் தற்போதைய தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் செயற்படுவார். மேலும் ஆறு பேர் இக் குழுவில் அங்கம் வகிப்பர் என்றும் கூறினார் .
தொடர்ந்து மத்திய செயற்குழுவின் தீர்மானங்கள் பற்றி அவர் கூறுகையில்
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் கட்சிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் வாதி தரப்பில் கோரிய நிவாரணங்களை அவருக்கு வழங்கி வழக்கை முடிவுறுத்துவது என மத்திய குழு சென்ற முறை எடுத்த தீர்மானத்தின் படி செயற்படுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூராட்சி தேர்தலில் 2023 இல் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் இறந்தவர்கள்,வெளிநாடு சென்றோர் மற்றும் கடந்த தேர்தல்களில் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை தவிர ஏனையவர்களுக்கு மீள சந்தர்ப்பத்தை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவது.
ஏனைய வெற்றிடங்களுக்கு புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது.
இத்தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும்.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் முடிவை எதிர்த்து போட்டியிட்ட பா.அரியநேந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதே வேளை இத்தேர்தலில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒழக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சித்தலைவர் சீ்.வீ.கே.சிவஞானம் மற்றும் நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை தினகரன்