எப்போது குரல் கேட்டாலும்
ஓடோடி வந்து தன் மொழியால்
என்னை வரவேற்கும்
அலீஷாவின் செல்லப் பூனை
அது இன்று ஏனோ
என்னை வரவேற்க வரவில்லை
மகுடம் சூட்டப்பட்ட அரசனென
மீசை முறுக்கியவாறு அலைவுறும்
பூனையின் குரலற்று
மௌனம் சாதித்தது வீடு
அதனை விசாரித்த போது
யாரோ ஈவிரக்கமற்று
நஞ்சூட்டி கொன்று விட்டதாக
மழையென அழுதாள் அலீஷா
துயர் தாங்கொணாது
என் கண்களும் பனித்தன
கண் விடுக்காப் பருவத்தில்
தத்தெடுத்து வந்து
குழந்தையைப் போன்று
பாலூட்டி வளர்த்து வந்த பூனை
இரண்டு கடல் துளிகள்
அருகருகில் இருப்பதுபோல்
அதன் நீலக் கண்கள்
பட்டுக் கம்பளமென கதகதக்கும்
வெண் பஞ்சு சடை மேனி
பால் நிலவென ஒளிர்ந்து
கடந்து
செல்வோரை
சட்டென மசியவைக்கும் பேரழகு
மனசின் பெரும் பகுதியை
அடைத்து வைத்திருக்கும்
அதன் கள்ளங்கபடமற்ற அன்பை
இனிமேல் வேறெங்கு தரிசிப்பேன்
இப்போதும் இடைஞ்சல் செய்கிறது
மறக்கடிக்க முடியா
அதன் குறும்புத்தனங்கள்
பூனையின் இழப்பிலிருந்து
இன்னும் மீளாமல்
அதன் ஓவியங்களை பார்த்தேங்கும்
அலீஷாவின் அடர் கண்ணீரை
எதனைக் கொண்டாற்றிடல் தகும்
–