மின்சாரக் கட்டணத்தை 20 வீதம் குறைப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் உத்தியோகபூர்வமாக பெறப்பட்ட பின், நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, 30 அலகு மின்சார பாவனையாளர் ஒருவருக்கு முன்னர் அலகுக்கு 06 ரூபா அறவிடப்பட்ட தொகை 04 ரூபாவாகவும், 31 முதல் 60 அலகு வரை ஒரு அலகுக்கு அறிவடப்பட்ட 09 ரூபா 06 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
30 அலகு வரையிலான மாதாந்த கட்டணமும் 100 ரூபாவிலிருந்து 75 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 30 அலகு மின் கட்டணத்துக்கு அறவிடப்படும் 280 ரூபா, 195 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
90 அலகுகளுக்கு மேல் 180 அலகுகள் வரையான பானையாளர்களின் மின்சாரக் கட்டணம் 19 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, பொது நோக்கங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் 12 வீதமும், அரசு நிறுவனங்களுக்கு 11 வீதமும் சுற்றுலா ஹோட்டல்களுக்கு 31வீதமும், தொழிற்சாலைகளுக்கு 30 வீதமும், மதத் ஸ்தலங்களுக்கு 21 வீதமுமென மற்றும் தெரு மின் விளக்குகளுக்கு 11 வீதமும் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான திட்டம் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதிபொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்காக
பொதுமக்களின் கருத்தறியும் நடவடிக்கைகள் டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன்.
ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தைக் குறைக்க முடியாதென மின்சார சபை தெரிவித்திருப்பினும் மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, எழுத்து மூலமான மற்றும் வாய்மொழி மூலமான பொதுமக்களின் ஆலோசனைகள் , கருத்துக்களை கவனத்திற்கொண்டு நடத்தப்பட்ட குழு கலந்துரையாடல்களை தொடர்ந்து, மின்சாரக் கட்டணத்தை 20 வீதம் குறைக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.
கடந்த வெள்ளிக்கிழமை பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால் மற்றும் உறுப்பினர்களான பொறியாளர் பியல் ஹென்னாயக்க மற்றும் டாக்டர் சதுரி சமன்மாலி பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் ஆணைக்குழு கூடியபோது இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தவறாமல் செயல்படுத்தப்படுமென எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறுகிறார்.
03 ஆண்டுகளுக்குள் படிப்படியாக மின்சாரக் கட்டணம் குறைந்தது 30 வீதம் வரை குறைக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
17 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், மின்சாரக் கட்டணத்தில் 20 வீத குறைப்பை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரைகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது
அவசியம் அதனை செயற்படுத்தும்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அவசியம் செயல்படுத்தப்படுமென, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று (18) தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குள் படிப்படியாக மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறான கட்டணக் குறைப்பு பொது மக்களுக்கு பாரிய நிவாரணமாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 20 வீதமாக குறைப்பதற்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.