மெக்ஸ்வெல் டி சில்வா விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. ஒழுக்காற்றுக் குழு அவரை இடைநிறுத்தும்படி கோரியபோதும் அது நடப்பதாக தெரியவில்லை. கடைசியில் விளையாட்டுத் துறை அமைச்சு தலையிட்டு தேசிய ஒலிம்பிக் குழு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவரை அதிரடியாக இடைநிறுத்தி இருக்கிறது.
இது பல முனை கயிறிழுப்பின் மற்றொரு திருப்பமாகவே தெரிகிறது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார, பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவுக்கு கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதன் உள்ளடக்கம் அண்மைக் கால மௌனத்துக்கான பதிலாக இருந்தது.
“1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 39 இன் கீழ் கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, பாரபட்சமற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் எந்தவொரு கடமைகள், செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளிலிருந்தும் உங்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார் என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு எப்படியான எதிர்வினைகளைச் செய்யும் என்று இப்போதைக்கு முழுமையாக கணிக்க முடியாது என்ற போதும் இது சாதாரணமாகமுடிவு இல்லை என்பது பொதுப் புத்திக்கு தெரிகிறது.
மெக்ஸ்வெல் டி சில்வாவை இடைநிறுத்திய விரைவிலேயே தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், அவரது அலுவலக அறையை இழுத்து மூடினார். ஆவணங்கள் வெளியே செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிடுகிறார். அவர் கடமைக்காக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியையும் முடக்குவதற்கு உத்தரவிட்டார்.
மறுபக்கம் மெக்ஸ்வெல் டி சில்வா இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் தலையிடும்படி சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் அதன் பிராந்திய அமைப்பான ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலைக் கோரி 20 தேசிய விளையாட்டுச் சங்கங்கள் கடிதம் அனுப்பியது. இந்த சங்கங்களில் இலங்கை கால்பந்து சம்மேளனம், இலங்கை மெய்வல்லுனர் சங்கம், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் போன்ற பிரபலமான சங்கங்களும் அடங்கும்.
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் 29 விளையாட்டுச் சங்கங்கள் அங்கத்துவம் பெற்றிருக்கும் நிலையில் அதில் 20 சங்கங்கள் இப்படி ஒரு கடிதத்தை எழுதி இருப்பது சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியாது.
மறுபக்கம் இடைநிறுத்தப்பட்ட மெக்ஸ்வெல் டி சில்வாவும் சும்மா இருப்பதாக தெரியவில்லை. பதவியில் இருந்து தன்னை இடை நிறுத்தியதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிரான அவர் பக்க நியாயங்கள் ஏகத்துக்கு இருக்கும். நீதிமன்றத்தின் முன் அவர் முன்வைக்கும் வாதங்களை விளையாட்டுத் துறை அமைச்சு எப்படி கையாளப்போகிறது என்பது மற்றொரு பெருத்த கேள்வி. ஏனென்றால் தற்போதைய நகர்வுகள் எத்தனையோ சட்ட சிக்கல்களை கொண்டது.
அரசு ஆரம்பித்திருக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தில் விளையாட்டுத் துறையில் செய்ய வேண்டி வேலைகள் எத்தனையோ உண்டு. அதிலே ஒலிம்பிக் குழு மீதான குற்றச்சாட்டுகளை அடிக்கிக் கொண்டே போகலாம். விளையாட்டுத் துறை அமைச்சரின் தற்போதை நடவடிக்கையை இந்தத் கோணத்தில் தான் பார்க்க வேண்டும்.
தேசிய ஒலிம்பிக் குழுவில் மெக்ஸ்வெல் டி சில்வா என்பவர் கடந்த பல தசாப்தங்களில் மிகப் பரீட்சயமான ஒருவர். அவரது செல்வாக்கு தலைவரை தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமானது. ஏன், தற்போதைய தலைவராக இருக்கும் சுப்ரமணியத்தை அந்தப் பதவிக்கு கொண்டுவந்ததிலும் அவரின் பங்கு இருக்கிறது. அதற்கு தனி வரலாறும் உண்டு. அதுவல்ல கதை, மெக்ஸ்வெல் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தான் தற்போதை பிரச்சினைக்கு காரணம்.
அவரை பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அமைச்சு முக்கிய ஐந்து காரணங்களை அடையாளம் கண்டிருக்கிறது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை அடிப்படையில் தேசிய ஒலிம்பிக் குழு தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த மூன்று பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகள், மெக்ஸ்வெல் டி சில்வாவை உடன் இடைநிறுத்துவதற்கு அழைப்பு விடுத்த ஒழுக்காற்றுக் குழுவின் பரிந்துரைகள், சர்வதேச ஒலிம்பிக் குழு நிதியை இடைநிறுத்தியது மற்றும் ஒழுக்காற்று குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாதது மற்றும் கணக்காய்வு அறிக்கை, மூன்று பேர் குழுவின் அறிக்கையில் உள்ளவை தொடர்பில் நிலுவையில் இருக்கும் சி.ஐ.டி. விசாரணை இதில் அடங்கும்.
இதில் விளையாட்டு பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மெக்ஸ்வெல் டி சில்வா மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கான செலவை ஏற்கனவே பெற்ற நிலையில், தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் இருவரும் தலா 10,000 டொலர்களை பெற்றிருப்பது அரச கணக்காய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிதியை மீளச் செலுத்துவதற்கு அதிகாரிகள் தாமதித்தன் விளைவாக அதற்கான செலவை தேசிய ஒலிம்பிக் குழு இலங்கை ரூபாவில் ஈடுகட்ட வேண்டி இருந்தது. பின்னர் ஒரு வருடம் கழித்தே அது திரும்பச் செலுத்தப்பட்டது.
அதாவது தேசிய ஒலிம்பிக் குழு தலைவருக்காக 791,690 ரூபாவையும் பொதுச் செயலாளருக்காக 1,064,018 ரூபாவை செலவிட்டதாக 2016 இல் சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது. இந்தப் பணம் இறுதியில் 2017 டிசம்பரில் தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.
அதேபோன்று 2009 தொடக்கம் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகமாக இருக்கும் மெக்ஸ்வெல் டி சில்வா, அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி சர்வதேச நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆறு பேரை அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டதாக மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது மாத்திரமல்ல தேசிய ஒலிம்பிக் குழுவின் நிதியை முறையற்று பயன்படுத்தியது, அதன் பெயரைப் பயன்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபட்டது, சட்டவிரோத விளையாட்டு சங்கங்களை அமைத்தது என மேலும் பல எண்ணில் அடங்காத குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இதனைக் கூறிய தேசிய ஒலிம்பிக் குழுவின் ஒழுக்காற்றுக் குழு மெக்ஸ்வெல் டி சில்வாவை இடைநிறுத்தும்படி அண்மையில் பரிந்துரைத்திருந்தது. சர்வதேச ஒலிம்பிக் குழுவும் இதனை வலியுறுத்தியது. என்றாலும் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது சாத்திமற்றது. தேசிய ஒலிம்பிக் குழுவில் மெக்ஸ்வெல் டி சில்வாவுக்கு விசுவாசமான தரப்பு கணிசமானது. நிர்வாக முடிவுகளில் தீர்மானங்கள் எடுக்கும் அளவுக்கு அதிகமானது.
எனவே, மெக்ஸ்வெல் டி சில்வாவை இடைநிறுத்துவதற்கு பதில் முன்கூட்டிய தேர்தல், பொதுக் குழு கூட்டம் என்று காலம் கடத்தியது. எனவே, விளையாட்டுத் துறை அமைச்சு அதிரடி காட்டியது இந்த நகர்வை விரைவுபடுத்தும் முயற்சியாக இருந்தது. என்றாலும், இது எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் தற்போதிருக்கும் பிரச்சினை.
விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒப்புதலைப் பெற்றே, மெக்ஸ்வெல் டி சில்வாவை பணியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை எடுத்திருக்கிறார். எனவே, சட்டத்தில் எந்த ஓட்டையும் விழாமலேயே இந்த நடவடிக்கையை செய்திருப்பார் என்று நம்பலாம்.
அதேபோன்று இது பற்றி அவர் சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலை மூன்கூட்டியே அறிவுறுத்தி இருக்கிறார். இந்த இரு அமைப்புகளுக்கும் இரண்டு பக்க கடிதம் ஒன்றை அவர் கடந்த டிசம்பர் 6 ஆம் திகதியே அனுப்பி இருந்தார்.
“பாரபட்சமற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வற்காக இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு சார்ந்த ஒழுக்காற்றுக் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு இந்த அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு முழு பொறுப்பைப் பெற்றிருப்பதாகவும், என்றபோது அது செயற்படத் தவறிய நிலையில், இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் சுதந்திரத்தை நிலைநிறுத்தும் அதேநேரம் அரசின் தலையீட்டை குறைப்பதற்கு குற்றவியல் விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி.) உட்பட சட்ட அமுலாக்கல் நிறுவனங்களின் நடவடிக்கையை அமைச்சு நாடியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் விளையாட்டுத் துறை அமைச்சு கவனமாக கையாண்டிருப்பது தெரிகிறது. ஏனென்றால் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு என்பது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கீழ் இயங்கும் சுயாதீனமான நிறுவனமாகும். அதில் அரசின் தலையீடுகள் அனுமதிக்கப்படுவதில்லை. சர்வதேச ஒலிம்பிக் குழு அதுபற்றி கண்டிப்பான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.
அதுவே மெக்ஸ்வெல் தரப்பின் கையில் இருக்கும் துருப்புச்சீட்டு. அரசின் தலையீடு என்ற கோணத்தில் தர்க்கித்தால் அது இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு மீது தடை வரை இட்டுச் செல்லக் கூடும். இவ்வாறான சூழலை இலங்கை விளையாட்டுத் துறை இதற்கு முன்னர் பல தடவைகள் சந்தித்திருக்கிறது.
இலங்கை கால்பந்து மீது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அண்மையில் தடை விதித்ததாகட்டும், இலங்கை கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் எச்சரிக்கை விடுத்ததாகட்டும் எல்லாமே இந்த அரச தலையீடு என்ற பின்னணியிலேயே பூதாகாரமாக வெடித்தன.
எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, விளையாட்டை சுத்தம் செய்வது என்று அதிரடியாக நடவடிக்கைகள் எடுக்கும்போது, அரச தலையீடு என்ற இந்த மெல்லிய கயிற்றில் கவனமாகவே சாகசம் புரிய வேண்டும். இல்லாவிட்டால் அது ஒட்டுமொத்த விளையாட்டையுமே பாதிக்கும்.
எஸ்.பிர்தெளஸ்