8 கோடி ரூபா பெறுமதியான கொட்டகலை பிரதேச சபை கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்திசெய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது.
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டட நிர்மாணப் பணிகள் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்படாமை கள ஆய்வின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத சபை அதிகாரி குறிப்பிடுகையில் ஒப்பந்தகாரர்களுக்கு இடையிலான ஒரு பிரச்சினை காரணமாக தற்பொழுது இந்த கட்டட நிர்மாணப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாமல் இந்த கட்டட தர நிர்ணயம் தொடர்பான அறிக்கை ஒன்றை நாம் பேராதனை பல்கலைக்கழகம் ஊடாக பெற்றுக் கொண்டோம். அதில் இதன் தரம் இரண்டாம் மாடிக்கு மேல் மிகவும் குறைவாக இருப்பதாகவே உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக 641,000 ரூபா நிதியை நாம் நுவரெலியா பிரதேச சபை காலப்பகுதியில் சபையின் ஊடாக செலுத்தியிருக்கின்றோம்.
இதன் முதற்கட்டமாக வரைபடம் ஒன்றை வரைவதற்கு நபர் ஒருவரை தெரிவு செய்து இதற்கான பொறுப்பு கையளிக்கப்பட்டது. இதற்காக 8 மில்லியன் ரூபா (81,476,575.04) தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டிருந்தது. எமது சபையில் இதற்காக நாம் நிலையான வைப்பில் சேமித்திருந்த 4 மில்லியன் ரூபா கைவசம் இருந்தது. மிகுதி தொகையை வங்கிக் கடனாக பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. கட்டடம் அமைப்பதற்கு திறந்த விலை மனு கோருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
சிறந்த ஒப்பந்தகாரர் ஒருவரை தெரிவு செய்வதற்காக மதிப்பாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் கணக்காய்வாளர், பொறியியலாளர் உட்பட பலரும் இருந்தனர். இந்த குழுவினர் நுவரெலியாவில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தை தெரிவு செய்தனர்.
கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனமானது நிறைவு செய்யப்பட்ட வேலைகளுக்காக 27 இலட்ச ரூபா செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றது.
தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி கொட்டகலை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தகவல் வழங்கும் அதிகாரி இறுதியாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது.
இக்கட்டட நிர்மாணப்பணிகளில் எற்பட்ட அனைத்து பிரச்சினைகளும் நுவரெலியா பிரதேச சபை ஆட்சிகாலத்திலேயே ஏற்பட்டுள்ளது. அதற்கமைய இவ்விடயம் தொடர்பாக அப்போதைய நுவரெலியா பிரதேச சபையின் தலைவர், அப்போதைய செயலாளர் ஆகிய இருவருமே பொறுப்பு கூற வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இக்கட்டட நிர்மாணப் பணிகளுக்காக மத்திய அரசின் ஊடாக அல்லது மத்திய மாகாணத்தின் ஊடாக அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் நிதி கிடைக்கும் பட்சத்தில் இதனை முன்னெடுக்க முடியும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் குறிப்பிடுகையில் குறித்த கட்டடமானது தரமானதல்ல. அது மாத்திரமல்லாமல் குறைந்த விலைமனுக் கோரியவருக்கு அது கொடுக்கப்படாமல் அதிக விலை கோரியவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை கட்டிய ஒப்பந்தக்காரருக்கு நான் தலைவராக இருந்த காலப்பகுதியில் 30 முதல் 40 மில்லியன் ரூபா வழங்க வேண்டியிருந்தது. அந்த தொகை தற்பொழுது அதிகரித்திருக்கலாம். மேலும் இதனை பிரதேச சபை தொடர்ந்து முன்னெடுக்க நினைத்தாலும் அதனை எமக்கு செய்ய முடியாது. காரணம் எமக்கு வருடத்திற்கு 10 மில்லியன் ரூபா வருமானம் கூடக் கிடைப்பதில்லை.
இந்த கட்டட வேலைகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் மத்திய அரசிடம் நிதி கோரியிருந்தோம். ஆனால் அவர்களுக்கும் அதனை வழங்க முடியவில்லை. காரணம்; கொரோனா பிரச்சினை, அதன் பின்னர் பொருளாதார நெருக்கடி இப்படி பல பிரச்சினைகள்.
அது மட்டுமல்லாமல் கணக்காய்விலும் பிரச்சினைகள் இருக்கின்றன. இதன் காரணமாக அங்கிருந்த செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் எனவும் பிரதேச சபைத்தலைவர் குறிபிடுகின்றார்.
குறித்த கட்டடம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 10 வருடங்களாக நிறைவுறாத நிலைமை நீடிக்கின்றது.
விலை மனுக் கோரல் ஒப்பந்தக்காரர்களுடனான முறுகல் நிலை, தர நிர்ணயம் என பல்வேறுவிதமான சர்ச்சைகளும் காணப்படுகின்றன.
நுவரெலியா பிரதேச சபையாக இருந்த காலகட்டத்தில் அடிக்கல் நாட்டிய சபைத் தலைவராக இருந்த சதாசிவன் கூறுகையில்,
இந்த பிரதேச சபையின் பழைய கட்டடத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. மழைக்காலங்களில் உள்ளே இருந்து வேலை செய்ய முடியாத ஒரு நிலைமை. இது தொடர்பாக நாம் சபையில் கலந்துரையாடி புதிய கட்டடம் ஒன்றை எமது சபையின் நிதியின் மூலமாக அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக நான் தலைவராக இருந்த பொழுது 15.05.2015 அன்று புதிய கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நாட்டப்பட்ட பின்பு பிரதேச சபைகள் கலைக்கப்பட்டன. அதன் பின்பு செயலாளர் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது பலராலும்; இதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பின்பு பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, இந்த கட்டடத்திற்காக நிலையான வைப்பில் இருந்த நிதியானது புதிதாக அமைக்கப்பட்ட நுவரெலியா பிரதேச சபைக்கும், அக்கரபத்தனை பிரதேச சபைக்கும், கொட்டகலை பிரதேச சபைக்கும், சமனாக பகிரப்பட்டது. இதன் காரணமாக புதிய கட்டட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதுதான் நிர்மாணப் பணிகள் தடைப்பட்டமைக்கு முக்கிய காரணம். அது தவிர ஒப்பந்தக்காரருக்கு இரண்டு தவணையாக மொத்தமாக 16.2 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்பார்வையாளருக்கு ஒரு மில்லியன் ரூபாவும், தற்பொழுது காரியாலயம் அமைந்துள்ள குத்தகை கட்டடத்திற்கு குத்தகையாக மாதாந்தம் 25,000.00 ரூபா செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இது தவிர மேற்பார்வை செய்த குழுவினருக்கு ஆலோசனை கட்டணமாக நுவரெலியா பிரதேச சபையால் ஒரு மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல கோடிகள் செலவு செய்யப்பட்ட இந்த கட்டடமானது இடைநடுவில் கடந்த 10 வருடங்களாக கைவிடப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கட்டடம் தொடர்பாகவும் புதிய அரசாங்கம் உரிய முறையில் கணக்காய்வொன்றை செய்து இந்த கட்டடம் நிறைவு பெறாமைக்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றார்கள். இது தொடர்பாக புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
இந்தக் கட்டடத்தின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் மலையத்தில் இருக்கின்ற அரசியல் போட்டியும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுப்பதுதான்.
அவர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் பொது மக்கள் பணத்தை வீண் விரயமாக்கி தமது தேவைகளுக்காகவும் தமது வருமானத்திற்காகவும் உரிய திட்டமிடல் இல்லாமல் இவ்வாறான பல திட்டங்களை இடைநடுவில் கைவிட்டுள்ளனர்.
எஸ். தியாகு