ஐக்கிய அமெரிக்காவில் ஜனவரி ஏழாம்; திகதி காலையில் லொஸ் ஏஞ்சல்ஸ்சுக்கு மேற்காக பசுபிக் கரையோரத்தில் உள்ள பாலிகேட்ஸ் சுற்றுப்புறத்திலுள்ள குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்கு எதிர்ப்புறத்திலுள்ள மலைச் சாய்வுகளிலிருந்து புகைமூட்டம் ஒன்று மேற்கிளம்புவதை அவதானித்துள்ளனர். குடியிருப்பாளர்கள் அவதானிப்பதற்கு முன்னரே அப்பகுதியில் ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பகுதியில் தீ பரவியிருந்தது. ஆனால் இதன் பின்னரான 25 நிமிடத்தில் தீ வளர்ச்சியடைந்து சுவாலை விட்டெரிந்து 200 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன் மோசமான வேகத்தில் தீ பரவத் தொடங்கியது.
தீச்சுவாலை கொழுந்து விட்டு எரிந்து ஒரு சில மணித்தியாலத்தில் வீடுகள், தியேட்டர்கள், உணவு விடுதிகள், கடைகள், படப்பிடிப்பு மையங்கள், பாடசாலைகள் மற்றும் முழுச் சமூகங்களையும் தீ சூழ்ந்து கொண்டது. ஜனவரி 9 அதிகாலையில் பாலிசேட்ஸ் பகுதியில் 17,234 ஏக்கர் நிலத்தில் தீ பரவி விட்டது. தீச் சுவாலைகள் லொஸ் ஏஞ்சல் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்தது. லொஸ் ஏஞ்சலின் வரலாற்றில் மிக மோசமான தீ பரவலாக இது கருதப்படுகின்றது. இத் தீயினால் ஏற்பட்ட சேதம் பற்றிய ஆரம்ப மதிப்பீடுகள் 13 கோடி இலட்சம் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டாலும் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பசுபிக் கரையோரத்தினை அடுத்து அழகும் பொலிவும் கொண்ட ஹொலிவூட்டின் தலைநகரமான லொஸ் ஏஞ்சல்ஸ் பிரபலமான ஹொலிவூட் நடிகர்களின் வாழிடங்களைக் கொண்டது. ஹொலிவூட் தொடர்பான பல ஞாபகச்சின்னங்களைத் தன்னகத்தே கொண்டது. இவை யாவும் சுட்டெரிக்கும் காட்டுத் தீயினால் அழிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை கானல் நீராகிவிட்டது.
காட்டுத் தீ பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வெப்பமான காலங்களில் இடிமின்னல் தாக்கம் ஏற்படும் பொழுது மரங்களில் தீ பரவுகின்றதுடன் ஏனைய எரிபொருட்களிலும் தீ பற்றிக் கொள்கின்றது. எரிமலை வெடிப்புகள் ஏற்படும் பொழுது அதிலிருந்து வெளியே வீசப்படும் தீக்கதிர்களினால் நெருப்பு பரவுகின்றது. முகாமிட்டு தங்கியிருக்கும் மக்கள் கவனமில்லாமல் இருந்தால், முகாமில் தாம் மூட்டிய நெருப்பினால் அருகில் உள்ள தாவரப் போர்வைகளில் நெருப்பு பரவுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. சிகரெட்டுகளைப் பாவித்த பின்னர் அவற்றை அணைத்து விடாமல் எறிந்து விடும்போது, அதிலிருந்து நெருப்பு பரவும். மனிதனால் கழிவுகள் தீ மூட்டி எரிக்கப்படும் போது அதிலிருந்து காட்டுத் தீ பரவுகின்றது. எரிக்கப்பட்ட சிதைவுகளிலிருந்து பறந்து செல்லும் தீக்கதிர்கள் (Embers) நீண்ட தூரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காட்டுத் தீயை உருவாக்கி விடுகின்றது. காலநிலை மாற்றம் மற்றும் வரட்சியினால் காட்டுத் தீ பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. துப்பாக்கி சுடுதல் பயிற்சி, வேட்டையாடுதல் போன்ற செயற்பாடுகளினால் காட்டு தீ பரவும் அபாயம் காணப்படுகின்றது. அமெரிக்காவின் இடாகு மாநிலத்தில் இத்தகைய காட்டுத் தீ கடந்த காலங்களில் அடிக்கடி ஏற்பட்டுள்ளது.
தேவையற்ற பொருட்களைத் தவறுதலாகவோ விருப்பத்துடனோ எரியூட்டுதல் என்பது ஐக்கிய அமெரிக்காவில் 25 சதவீதமான காட்டு தீ பரவுவதற்குக் காரணமாக இருக்கிறது. எரியூட்டுதல் என்பது தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். காட்டுத் தீ பரவும் போது அது கட்டுப்பாடற்ற முறையில் பல்வேறு வகையான அழிவு தரும் தாக்கங்களை மனிதர், விலங்குகள் மற்றும் தாவரங்கள் மீது ஏற்படுத்தும். பெரியளவான தீயில் இருந்து எழும் புகை மூட்டங்கள் எதிர்மறையான தாக்கங்களை வளியின் தரத்தில் ஏற்படுத்தும். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மக்களின் நுரையீரலில் சேதத்தை ஏற்படுத்தும். நீரின் தரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். விலங்குகளின் வாழிடங்கள் அழிந்துவிடும். எரியூட்டப்பட்ட நிலங்கள் காட்சிப் பொருளாக, சாம்பல் மேடுகளாகக் காட்சியளிக்கும். இதனால் அப்பகுதியில் அரித்தல் செயற்பாடுகள் தூண்டப்பட்டு மண் சரிவும் ஏற்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் கணிப்பீட்டின்படி உயிர்ப்பல்வகைமை, சூழல் தொகுதிகள் மற்றும் நகரக் குடியிருப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான பல காட்டுத் தீ பரவல்கள் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ளன. 1919 இல் கனடாவில் ஏற்பட்ட பாரிய காட்டு தீயினால் 5 மில்லியன் ஏக்கர் நிலம் அழிந்ததுடன் அல்பேட்டா மற்றும் சஸ்கஸ்ச்சுவான் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 1939 இல் கறுப்பு வெள்ளி காட்டு தீயினால் அவுஸ்திரேலியாவில் 5 மில்லியன் ஏக்கர் அழிந்தது. பல வருடங்களாக நிலவி வந்த வரட்சியும், உலர் வெப்ப நிலைகளும், வலிமையான காற்றுக்களும் இதற்குக் காரணமாக இருந்தது. இந்த அனர்த்தம் காரணமாக 700 வீடுகள் 69 மரம் அரியும் ஆலைகள் மற்றும் பண்ணைகள், வியாபாரத் தலங்கள் என்பன அழிவுக்குட்பட்டன.
2003 இல் சைபீரியாவின் தைக்கா காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 55 மில்லியன் ஏக்கர் பகுதிகள் அழிவடைந்தன. இக்காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டங்கள் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஜப்பானில் உள்ள கியாட்டோவை சென்றடைந்தது. 2004 அலாஸ்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 7 மில்லியன் ஏக்கர் நிலப் பகுதி அழிக்கப்பட்டது. இங்கு 701 தீ பரவல்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் 462 தீப்பரவல்கள் மனித நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2014 இல் கனடாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட தீயினால் 8.5 மில்லியன் ஏக்கர் நிலம் அழிந்தது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டங்கள் போத்துக்கல் வரை பரவியிருந்தது. ஏறக்குறைய 8.5 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகள் முற்றாக அழிந்ததுடன் தீயணைப்புப் படைகளுக்கான அரசாங்க செலவு 44 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. 2024 இல் டெக்சாஸிலும் காட்டுத்தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2019–2020 இல் ஏற்பட்ட அவுஸ்திரேலிய காட்டு தீயினால் 42 மில்லியன் ஏக்கர் நிலம் அழிவடைந்தது. ஆயிரக்கணக்கான கட்டடங்கள், 3 மில்லியன் வரையான விலங்குகள், 61,000 கோலா மரக்கரடிகள் என சாம்பலாகி போயின.
உலகின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ இடம் பெற்று வருகின்றது. வரலாற்று ரீதியாகக் காட்டுத் தீயின் நிகழ்வுகள் இடம்பெற்றிருத்தல், வரண்ட காலநிலைகள் மற்றும் அடர்த்தியான தாவரப் போர்வை என்பன பொதுவாக காட்டுத் தீ ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன. காட்டுத் தீ பொதுவாக நிகழும் சில பகுதிகளை இனங்காண முடியும். அவை: (1) மேற்கு ஐக்கிய அமெரிக்கா: இங்கு கலிபோர்ணியா, ஒறேகன், வாஷிங்டன், நெவாடாவின் சில பகுதிகள் மற்றும் அரிசோனா ஆகிய பகுதிகளின் வரட்சியான கோடைகள், வலிமையான காற்று, பரந்தளவிலான காடுகள் என்பன காட்டுத் தீயின் பாதிப்புக்கு சாதகமாக உள்ளன.
(2) அவுஸ்திரேலியா: அவுஸ்திரேலியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் விசேடமாக, வெப்பமான மற்றும் வரண்ட கோடை மாதங்கள் மோசமான காட்டுத் தீயின் பாதிப்பு அனுபவத்தினைக் கொண்டுள்ளன. இங்கு காட்டுத் தீயின் தாக்கத்தினால் நாட்டுக்கு ஏற்படும் அழிவு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. (3) ஐரோப்பாவின் மத்திய தரைக் கடற் பகுதி: ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் வெப்ப வரண்ட கோடைகளையுடைய மத்திய தரைக் காலநிலைப் பண்புகளைக் கொண்டதனால்; குறிப்பிடத்தக்க அளவில் காட்டுத் தீ ஏற்படுகின்றது.
(4) அமேசன் மழைக்காடுகள்: அமேசன் வடிநிலத்தின் சில பகுதிகள் பிரதானமாக பிறேசில் பகுதிகள் காடழித்தல் மற்றும் நிலத்தினைத் துப்புரவு செய்தல் போன்ற மனித நடவடிக்கைகளினால் காட்டுத் தீ உருவாக்கப்படுகின்றது. (5) சைபீரியா மற்றும் ரஷ்யா: சைபீரியா மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளில் பாரிய அளவில் காட்டுத்தீ ஏற்படுகின்றது.
குறிப்பாக காட்டுப் பிரதேசங்களின் உட்பகுதிகளில் தாவரப் போர்வை வரட்சியாகக் காணப்படும் கோடை மாதங்களில் காட்டுத் தீ உருவாகின்றது. (6) தென்கிழக்கு ஆசியா: இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்தின் சில பகுதிகள், வியட்னாம் போன்ற நாடுகளில் விவசாயத்துக்காக நிலம் துப்புரவாக்கப்படும் போதும் எரியூட்டப்படும் போதும் காட்டு தீ ஏற்படுகின்றது.
லொஸ் ஏஞ்சல்ஸ் பிரதேசத்தில் நெருப்பு ஏன் செறிவாகக் கொழுந்து விட்டு எரிந்து வேகமாகப் பரவியது? காட்டுத் தீயின் தீவிரத் தன்மைக்கு தாவரங்களே மறைமுகமாக எண்ணெய் வார்த்தன. இப்பிரதேசத்தில் 2024 இல் ஏற்பட்ட கடும் மழைவீழ்ச்சிப் பருவம் எல்நினோவுடன் தொடர்பு பட்டதாகக் காணப்பட்டது. இதனால் மாரி காலத்தில் தீ பரவுவதற்கான அதிகளவிலான ஆபத்துக்கள் இருக்கும் எனக் கருதப்பட்டது. மழைவீழ்ச்சி என்பது பொதுவாகத் தீயின் தாக்கத்துக்கு மோசமான சூழலை ஏற்படுத்தும். காட்டுத் தீ ஏற்படுவதற்கு முன்னர் மழைவீழ்ச்சி ஏற்பட்டால் பெருமளவான தாவர வளர்ச்சியை அது ஊக்குவித்து எரிபொருளுக்கான உள்ளார்ந்த ஆற்றலை உருவாக்கும். இதற்குப் பின்னர் வரண்ட வானிலை ஏற்படும்போது தாவரப் போர்வை மிக விரைவாக வரட்சிக்குட்பட்டு காய்ந்த சருகு கொண்ட நிலப் பகுதியாக மாற்றமடைவதனால் காட்டுத் தீயை ஊக்குவிப்பதற்கான அதிக எரிபொருள் கொண்ட பகுதியாக மாறும்.
எனவே லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 2024 இல் ஏற்பட்ட ஈரமான வானிலைப் பருவத்தின் பின்னர் உருவாகிய வரண்ட பருவம் காட்டுத் தீ பரவுவதற்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கி விட்டது. அதிக ஈரமான நிலையிலிருந்து அதிகளவு வரண்ட வானிலைக்கான மாற்றத்தினை அடைந்து மீண்டும் ஈர நிலைக்கு மாறும். அதாவது ஈரத்திலிருந்து வரட்சியும் பின் வரட்சியில் இருந்து ஈரமும் என மாற்றம் ஏற்பட்டது. இச்செயல் முறையானது “Hydro-Climate whiplash” என அறியப்படும். 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து பூகோள ரீதியாக இச் செயல்முறையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது. நெருப்பானது மிகச் சக்தி வாய்ந்த காற்றுப் புயலினால் (Wind Storm) விசிறலுக்கு உட்பட்டது. இத்தகைய வலிமையான காற்று மலைப் பகுதிகளில் பரவிய தீச் சுவாலைகளை லொஸ் ஏஞ்சல்ஸ்சின் மேற்குப் பக்கமாக மிக வேகமான நகர்வினைக் கொண்ட காட்டுத் தீயாக நகர்த்தியது. ஏலவே வரட்சியான தாவரப் போர்வைகளைக் கொண்டிருந்த பகுதிகளினூடாக இவை பரவி சாந்தா மோனிகாவுக்கு அருகிலுள்ள பசுபிக்கின் பாலிசேட்ஸ் சுற்றுப்புறங்களைச் சூழ்ந்து கொண்டது. காற்று வெப்பமாகவும் வரட்சியாகவும் இருந்ததனால் தாவரப் போர்வையின் ஈரப்பதனும் குறைவடைந்து தீப்பரவலுக்கு உதவியது.
எந்தவொரு காட்டுத் தீயின் உருவாக்கத்திற்கும் தீயினைப் பற்ற வைத்தல், எரிதல், வளியிலிருந்து கிடைக்கக்கூடிய ஒட்சிசன் ஆகிய அம்சங்கள் முக்கியமானவை. ஆனால் இந்த காட்டுத் தீயை உருவாக்குவதற்கு கலிபோர்ணியாப் பாலைவனத்தின் மையப் பகுதியிலிருந்து வந்த வேகமான வரண்ட காற்றே காரணமாக இருந்தது. இவை சாந்தா அனா அல்லது போன் காற்று என அறியப்படும். இவை அடிக்கடி காட்டுத் தீயை உருவாக்கும். இக்காற்று மிக மிக வரட்சியானது. மிக மிக வேகமாக நகரும் தன்மை கொண்டது. இதனால் தீச்சுவாலை கிளர்ந்து எரியும். இக்காற்றின் வேகம் குறைவடையும்போது தான் (ஐந்து நாட்களின் பின்னர்) தீயின் உக்கிரம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
காட்டுத் தீயினால் மரங்கள் மற்றும் மண்ணில் சேமித்து வைக்கப்பட்டுள்ள காபன் எரியும் பொழுது பெருமளவான புகை, மெதேன் மற்றும் காபனீரொட்சைட் ஆகியவற்றை வளிமண்டலத்திற்கு வெளியேற்றும். இதனால் ஒட்டுமொத்தமாக வெப்ப நிலைகளில் அதிகரிப்பு ஏற்படும். கீழ் தட்டுகளில் நெருக்கமான இடைவெளிகளில் அமைந்திருக்கும் மரங்கள் மற்றும் கிளைகள் என்பன நெருப்பினை மேற்கட்டுமானத்திற்கு இலகுவாகப் பரவச் செய்து விடுகின்றது. இவ்வாறு தாவர மேற்கட்டுமானத்தின் முடிப் பகுதியில் பரவும் தீயானது சில காட்டு வகைகளிலும் வானிலை நிலைமைகளிலும் மிகக் கடுமையாக இருக்கும். லொஸ் ஏஞ்சல்ஸ்சில் காற்று மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது. இதனால் தீ எந்த இடத்தில் ஆரம்பித்ததோ அந்த இடத்தில் இருந்து மிக விரைவாக ஏனைய பகுதிகளுக்கு தீயின் கதிர்களைக் காற்று எடுத்துச் சென்றது. சில இடங்களில் இந்தக் காற்றுப் புயல்களும் தீ பரவுவதற்கு காரணமாக இருந்தது. வேகமான காற்றினால் மின்சார வயர்கள் சேதமாக்கப்பட்டதனால் அவ்விடங்களில் விழுந்த வயர்களினால் தாவரங்களில் நெருப்பு பற்றிக் கொண்டது. எரிந்து கொண்டிருக்கும் தாவரங்களிலிருந்து தீக்கதிர்கள் காற்றினால் முன்னோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.
காட்டுத் தீ முதன் முதலில் பசிபிக் சமுத்திரத்தின் கரையில் அமைந்துள்ள பாலிசேட்ஸ் பகுதியில் பகுதியாக ஆரம்பித்து அங்கிருந்து தீக்கதிர்கள் ஏனைய சுற்றுப் புறங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு 49,367 ஏக்கர் நிலப்பகுதி அழிக்கப்பட்டது. இரண்டாவது காட்டுத் தீ ஈற்ரன் பகுதியில் ஏற்பட்டதுடன் 33,829 ஏக்கர் நிலம் தீயினால் அழிந்தது. மூன்றாம் கட்டமாக லொஸ் ஏஞ்சல்ஸ்சுக்கு வட மேற்கிலுள்ள சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கின் சுற்றுப் பகுதிகளிலுள்ள கேர்ஸ் மற்றும் சில்மார் பகுதிகளில் காட்டுத் தீ பரவியதுடன் 1905 ஏக்கர் நிலம் சாம்பலானது. கலிபோர்னியாவில் புதன்கிழமை மேலும் 5 காட்டுத் தீ குறிப்பாக லிடியா, சன்செட் வூட்லி, வெந்துரா, மற்றும் றிவர் சைட் ஆகிய பகுதிகளில் ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை அன்று ஹெனத் பகுதியிலும் மேற்கு ஹில்ஸ் பகுதியிலும் காட்டுத் தீ புதிதாக பரவியது. கெனத் பகுதியில் 2372 ஏக்கர் நிலம் எரிந்து விட்டது. காட்டுத் தீயின் வேகம் என்பது காற்றின் வேகம், தரையமைப்பு, தாவர போர்வையின் வகைகள் மற்றும் வானிலை நிலைமை ஆகிய காரணிகளில் தங்கி இருக்கின்றது. ஒரு காட்டுத் தீயின் வேகம் காடுகள் மற்றும் புல்நிலப் பகுதிகளில் சராசரியாக மணிக்கு 10–23 கிலோ மீற்றர்களுக்கு இடையில் காணப்படும். ஆனால் இப் பகுகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோ மீற்றர்களுக்கு மேல் காணப்பட்டதினால் காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது. எரிந்து கொண்டிருக்கும் தாவரங்களில் இருந்து சிதறிப் பறக்கும் தீக்கதிர்களை காற்று சில மீற்றர் தூரத்துக்கு காவிச் சென்று அப்பகுதியில் உள்ள பொருட்களில் தீயைப் பற்றவைத்து விடுகின்றது. அத்துடன் பல மைல்கள் தவளைப் பாய்ச்சலாகச் சென்று புதிய தீயைப் பற்ற வைக்கின்றது. ஏறக்குறைய 10 கிலோ மீற்றர்கள் வரை இவை கடந்து சென்று அப்பகுதி வீடுகளுக்கு இடையில் உள்ள அலங்காரத் தாவரங்களுள்ள பகுதிகளில் விழுந்து நெருப்பை மூட்டி விடுவதினால் வீடுகளும் பற்றி எரியத் தொடங்குகின்றன. தீக் கதிர்களினால் தனியொரு வீடு பற்றி எரியும் போது தீயணைப்பு படையினரால் அதனை இலகுவில் அணைத்து விட முடியும். ஆனால் பத்துக்கு மேலான வீடுகளில் நெருப்பு பற்றி எரியும்போது எதுவுமே செய்ய முடியாது திணறுவதைக் காணமுடிகின்றது. அத்துடன் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதி மலைப் பாங்கான இடவிளக்கவியலைக் கொண்டிருப்பதனால் தீ மிகச் செறிவாக பரவியிருந்தது.
தீக்கதிர்கள் சுழற்சியாக சுழன்றடித்துக் கொண்டு செல்கின்றது. வளியில் ஒட்சிசன் இருக்கவில்லை. குன்றுகளின் மேற்பகுதி நோக்கி நெருப்பு மிக விரைவாகப் பரவுகின்றது. பிரதேசத்தின் புவியியல் அம்சங்களான ஆற்றுக்குடைவுகள், மலை இடுக்குகள் ஆகியன தீயின் போக்குகளை எவரும் போராடி அணைக்க முடியாத அளவு மிக மோசமான நிலைக்கு அதிகரித்து செல்கின்றது. தீயின் பரவலினால் ஏற்படும் அபாயங்களை இடவிளக்கவியல் அதிகரித்துச் சென்றதனால் மக்களை வெளியேற்றுவது மிகக் கடினமாக மாறியது.
கலாநிதி எஸ். அன்ரனி நோர்பேட் மேனாள் சிரேஷ்ட பேராசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகம்