தட்டாரப் பூச்சி, தட்டான், தும்பி என அழைக்கப்படும் உயிரினம் கொன்றுண்ணி வகையைச் சேர்ந்தது. மெல்லிய கம்பி போல் பறக்கும். வலை போல் நான்கு இறக்கைகள் உடையது. அவை கண்ணாடி போல் ஒளி ஊடுருவும் வகையில் காணப்படும்.
இதற்கு இரண்டு பெரிய கூட்டு அடுக்கு கண்களும், ஆறு கால்களும் உண்டு. கால்களில் மெல்லிய ரோமம், இழை போன்று இருக்கும். கொசு போன்ற பறக்கும் பூச்சிகளை உண்ணும்.
தட்டான் பூச்சிகள் உலகம் முழுக்க 6,000 வகைகள் உள்ளன. மிகவும் தொன்மை காலம் தொட்டே பூமியில் வாழ்கின்றன.
பெண் பூச்சி; 1,000 முட்டைகள் வரை நீரிலோ, நீரருகே மண்ணிலோ, நீர்ச் செடிகளிலோ இடும். முட்டையில் இருந்து பிறக்கும் இளவுயிரி தட்டான், நீருக்குள் ஐந்தாண்டுகள் வரை வாழும். அப்போது இறக்கை இருக்காது. இதற்கு நல்ல பார்வை திறன் உண்டு, பெரிய கீழ்வாய்த் தாடை உண்டு. செவுள்கள் வழியாக சுவாசிக்கும். நீர்வாழ் உயிரினங்களையும், கொசுக்களையும் உண்டு வாழும். முழு வளர்ச்சி அடைந்த பின் பறக்கும்.
பறந்தவாறு நுளம்பு, ஈ, பட்டாம்பூச்சி போன்றவற்றை பிடித்து உண்ணும். பறக்கும் போது, ஆறு கால்களையும் சிறு கூடை போல் வைத்திருக்கும். அதில் சிக்கும் பூச்சிகளையும் உண்ணும். அசையாத பொருளை, 2 மீற்றர் தொலைவில் இருந்து காணும் திறன் பெற்றது. நகரும் பொருட்களை, 46 மீற்றர் தொலைவில் இருந்தும் பார்க்க இயலும்.
ஆண்டுக்கு, 18 ஆயிரம் கி.மீ., வரை பறக்கும் திறன் உடையது. பறந்தவாறு ஒரே இடத்தில் நிற்கும். இதை தமிழில், ‘ஞாற்சி’ என்பர். பறந்தபடி, திடீரென 180 டிகிரி திரும்பும். இதனால் பின்னோக்கி பறக்கவும் இயலும். நீண்ட பயணம் செய்து, பெருங்கடலைக் கடந்து, வேறொரு நிலப்பரப்பை அடையும். ஒரு இடத்தில் தட்டான் பூச்சி அதிகம் இருந்தால், அங்கு சுற்றுச்சூழல் சிறப்பாக உள்ளதாக உணரலாம்.