ஜேர்மன் அபிவிருத்தி அமைச்சின் சார்பில், Deutsche Gesellschaft for Internationale Zusammenarbeit (GIZ) மற்றும் கொகா-கோலா, நெஸ்லே, யூனிலீவர் ஆகிய இலங்கையில் விரைவாக விற்றுத் தீரும் நுகர்வோர் பொருட்கள் சார்ந்த மூன்று முன்னணி நிறுவனங்கள், பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அதிகார சபைகள் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான அரச-தனியார் கூட்டாண்மையொன்றுடன் (PPP), பிளாஸ்திக் மாசுபாடு தொடர்பான தற்போதைய பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ‘கழிவிலிருந்து மதிப்பு’ என்ற பெயர் கொண்ட முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரச-தனியார் கூட்டாண்மையின் பிரதான நோக்கம், பிளாஸ்திக் கழிவுகளை சேகரித்து, தரம் பிரித்து, மீள்சுழற்சி செய்து மற்றும் மீள்பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் அதேசமயம், பொறுப்புணர்வுடன் கழிவுகளை அப்புறப்படுத்துவது வாழ்வாதாரங்களுக்கும், சூழலுக்கும் எவ்வாறு மதிப்பைச் சேர்ப்பிக்கின்றது என்பது குறித்த விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதன் மூலமாக, சுழற்சிப் பொருளாதாரத்தை நோக்கிய நடத்தை மாற்றத்தை முன்னெடுப்பதாகும்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அதிகார சபைகள் அமைச்சின் கூட்டாண்மையுடன், மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகள் மத்தியில் பிளாஸ்திக் கழிவுகளின் பரிமாணத்தை விளங்கிக் கொள்வதற்காக, 49 உள்ளூராட்சி சபைகளில் அடிப்படை ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது. முழுமையான ஆய்வைத் தொடர்ந்து, கம்பஹா, கெஸ்பாவ, ஹோமாகம மற்றும் தெஹிவளை ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு முக்கிய உள்ளூராட்சி அதிகார சபைகள் இச்செயற்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு இப்பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை பேண உதவுவதற்காக விரிவான கழிவு முகாமைத்துவத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.