ஹட்டன் பேருந்து விபத்து ஏன் நடந்தது? உண்மையில் நடந்தது என்ன? சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு பேருந்து செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதா? அல்லது பேருந்தின் பிரேக் உடைந்ததன் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதா? அல்லது வேறு இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதா? இப்படிப் பல சந்தேகங்கள் மக்கள் மனதில் இருக்கின்றன. ஆனால் உண்மை என்ன?
இது தொடர்பாக நாம் உண்மையை கண்டறிவதற்கு முயற்சி செய்தோம் அதன் அடிப்படையில் பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொண்டு அவற்றை உறுதி செய்த பின்பே இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. பொதுப் போக்குவரத்திற்கு எந்த வகையிலும் தகுதியற்ற பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் துமிந்த சேனாநாயக்க குறித்த விபத்திற்குள்ளான பேருந்தை ஆய்வு செய்தபின்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.20 மணியளவில் ஹட்டன் மல்லியப்பு சந்திக்கு அருகாமையில் கொழும்பு வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து விபத்திற்குள்ளானதில் கண்டி யட்டிநுவர பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் ஹட்டன் நோர்வுட் அப்கொட் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும் ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்து ஹட்டன் கிளன்கன் வைத்தியசாலையிலும் மேலும் 13 பேர் கண்டி நாவலப்பிட்டிய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து இடம்பெற்ற சந்தரப்பத்தில் பேருந்தின் சாரதி பேருந்தின் உதவியாளர் உட்பட 54 பேர் பயணம் செய்துள்ளதை ஹட்டன் பொலிசார் உறுதிப்படுத்துகின்றனர்.
பேருந்தின் உரிமையாளரின் கவனயீனம் பொறுப்பற்ற தன்மை விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்படாமை போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு பேருந்தின் உரிமையாளருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ஹட்டன் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த பேருந்தில் சாரதியின் பக்கத்தில் இருக்கின்ற கதவு நீண்டகாலமாக முறையாக செயற்படாமல் இருந்துள்ளது. இதனை பேருந்தின் சாரதியோ அல்லது பேருந்தின் உரிமையாளரோ திருத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கதவு திறந்து சாரதி வெளியில் தூக்கி எறியப்பட்டுள்ளமையை இதுவரை வெளியான சீ.சீ.டிவி காட்சிகள் தெளிவாக காட்டுகின்றன. ஆனால் மேலும் சில சீ.சீ.டிவி காட்சிகளை விபத்து இடம்பெற்று ஒரு சில நிமிடங்களில் யாரோ ஒரு நபர் அகற்றியுள்ளமையும் தெரியவந்துள்ளது. அது தொடர்பாக ஹட்டன் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கணனி நுணுக்கம் தெரிந்த ஒருவரே இதனைச் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருக்கின்றது. இது தொடர்பாக நாம் எதனையும் கற்பனை செய்ய முடியாது. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். பேருந்தின் சாரதி ஆசனப்பட்டியை அணியவில்லை என்பதும் இங்கு தெளிவாக தெரிகின்றது. அந்த காட்சிகள் சீ.சீ.டிவியில் இருக்கின்றன. பயணிகள் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் அரச பேருந்துகளில் சீ.சீ.டிவி கமராக்கள் பொருத்தப்படுவது எந்தளவிற்கு முக்கியமானது என்பதை இந்த விபத்து நிரூபித்துள்ளது.
இனியாவது அனைத்து அரச தனியார் பேருந்துகளிலும் சீ.சீ.டிவி பொருத்தப்பட வேண்டும். அவை முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றுக்கு மத்திய மாகாண பயணிகள் போத்துவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? இல்லை இதுவும் இன்னுமொரு விபத்து மட்டுமே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்வார்களா?
ஹட்டன் நிலைய பொலிசாரின் வேண்டுகோளுக்கு இணங்க விபத்துக்கு உள்ளான பேருந்தை நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் துமிந்த சேனாநாயக்க முழுமையான பார்வையிட்டார். இதன்போது அவர் கருத்து வெளியிட்ட பொழுது
பேருந்தின் சாரதியின் பக்கத்தில் இருந்த கதவு முறையாக செயற்படவில்லை என்பதையும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலேயே இந்த கதவு திறக்கப்பட்டு சாரதி வெளியில் தூக்கி எறியப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். மேலும் இந்த பேருந்து பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத தரமற்ற நிலையில் இருந்துள்ளதாகவும் சாரதியில் ஆசனப்பட்டி இல்லாமல் இருந்துள்ளதாகவும் மேலும் பேருந்தின் உட்பகுதியில் தேவையற்ற வித்தத்தில் இரும்பு கம்பிகள் பேருந்தை அழகுபடுத்த பொருத்தப்பட்டிருந்தமையும் ஆசனங்கள் அனைத்து தரமற்ற வகையில் பொருத்தப்பட்டிருந்தமை காரணமாகவுமே பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
மேலும் பேருந்தின் பிரேக் பகுதியோ அல்லது வேறு இயந்திர கோளாறு காரணமாகவோ இந்த விபத்து இடம்பெறவில்லை என்பதையும் தெரிவித்துள்ளதுடன் சாரதியின் கவனயீனம் மற்றும் பேருந்து உரிமையாளரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் ஹட்டன் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு பேருந்தின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஹட்டன் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தினைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல கேள்விகள் எழுகின்றன
புயணிகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற இந்த பேருந்திற்கு அதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கியவர்கள் யார்? உரிய முறையில் பரிசோதனை செய்யப்பட்டு இதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகின்றது. மேலும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அரச தனியார் பேருந்துகளை யார் பரிசோதனை செய்வது? இதற்கான நடைமுறை என்ன என்பதும் கேள்விக்குறியே?. ஆனால் இதற்காக இயற்றப்பட்ட பயணிகளை பாதுகாக்கின்ற சட்டங்கள் இருக்கின்றன. அவை நடைமுறைபடுத்தப்படுகின்றனவா?
இந்த பேருந்தை செலுத்திய சாரதி தொடர்பாகவும் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. குறித்த சாரதி கினிகத்தேனை பகுதியில் ஏற்கனவே விபத்து ஒன்றை ஏற்படுத்தியால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நாவலப்பிட்டிய பகுதியிலும் விபத்துக்குள்ளானதாகவும் இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான ஒருவரை பேருந்தின் உரிமையாளர் எவ்வாறு வேலைக்கு அமர்த்தினார் என்பது தெரியவில்லை. விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் காயமடைந்த பயணிகளுக்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? அவர்களுக்கான நட்ட ஈடு வழங்கப்படுமா? இவை அனைத்தும் கேள்விகளாக மாத்திரமே உள்ளன.
புதிய அரசாங்கம் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய போக்குவரத்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா என்பது மீண்டும் ஒரு கேள்விக்குறியே. ஏனெனில் அதிகாரிகளின் அசமந்த போக்கும் இந்த விபத்திற்கு முக்கிய காரணம்.
இதேநேரம் விபத்து சம்பவித்த தினத்தில் டிக்கோயா கிளன்கன் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட அனைத்து சேவையாளர்களும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கியதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை எதிர் கொள்கின்ற பொழுது வைத்தியசாலையின் கட்டட வசதிகளும் ஏனைய வசதிகளும் அதிகரிக்கப்படுமாக இருந்தால் இங்கிருந்து ஏனைய வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை மாற்றாது அங்கேயே அனைத்து சிகிச்சைகளும் வழங்க முடியும். இது தொடர்பாக புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சிரேஷ்ட வைத்தியர் டாக்டர் ஜெயபிரகாசம் அருள்குமரன் தெரிவிக்கின்றார். மேலும் தற்பொழுது இந்த வைத்தியசாலையில் பல புதிய பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வைத்தியசாலையை பயன்படுத்துகின்ற நோயாளிகளின் தொகையானது வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், எனவே இதனை தரமுயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் குறிப்பிடுகின்றார்.
இந்த வைத்தியசாலையின் தரம் உயர்த்தப்பட வேண்டுமானால் இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தான் இது தொடர்பாக மிக விரைவில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் தனியார் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பேருந்துகளை முறையாக ஆய்வு செய்வதற்கான நடைமுறை ஒன்று இல்லாமை இங்கு பெரும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. குறிப்பாக அரச பேருந்துகளை ஆய்வு செய்வதற்கும் அதனுடைய தரத்தை கவனிப்பதற்கும் ஒவ்வொரு போக்குவரத்து பிரிவிலும் அதற்கென பரிசோதகர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பேருந்தை அன்றாடம் ஆய்வு செய்து பேருந்து பயணிகள் போக்குவரத்திற்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்த பின்பே அவை பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும். ஆனால் அந்த நடைமுறை தனியார் துறையில் இயங்குகின்ற பேருந்துகளுக்கு இல்லாமை ஒரு பெரும் குறைபாடாகும். எனவே இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் முன்வைக்கின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அல்லது இதுவும் இன்னும் ஒரு விபத்தாக மட்டுமே பார்க்கப்படுமா என்பது தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நுவரெலியா தினகரன் எஸ்.தியாகு