மிகுந்த எதிர்பார்ப்புகளோடு 2025 வருடம் பிறந்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து மக்களின் எதிர்பார்க்கைகள் அதிகரித்திருக்கின்றன. இதுவரைகாலமும் நிலவிய சம்பிரதாயபூர்வ பிரபுத்துவ குடும்பங்களுக்கிடையிலான பரஸ்பரம் நிகழும் ஆட்சி மாற்றங்கள் பாமரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவினரிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தியாவிலும் அதே போன்றதொருமாற்றம் நரேந்திர மோடியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியபோது உருவானது. கடந்த தேர்தல்களில் மோடி அசைக்க முடியாத ஒரு தலைவராக தொடர்ந்தும் ஆட்சிக்கட்டிலில் நீடித்தமைக்கு பலகாரணங்கள் இருந்தாலும் சரியான நபர்களை சரியான பதவிகளில் அமர்த்தும் சாமர்த்தியம் அத்துடன் இந்திய சிவில் சேவை அதிகாரிகளை இனங்கண்டு பொறுப்புக்களை ஒப்படைத்தமையையும் பிரதானமாகக் குறிப்பிடலாம். ஆகவே ஒரு தலைவர் மெத்தப்படித்தவராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் தீட்சண்ய புத்தியுடன் தனது குழுவைத் தெரிவு செய்வதிலும் அவர்களுக்குரிய சுதந்திரத்தையும் புலத்தையும் உருவாக்கிக் கொடுத்து கூட்டாகச் செயற்படுவதிலுமே ஒரு ஜனநாயக ஆட்சிமுறை சிறப்பாகச் செயற்பட ஏதுவாகும். இலங்கையில் அப்படியான தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை சிவில் சமூகமும் அதன் அங்கத்தவர்களாகிய புலமைசார் நிபுணத்துவக் குழாத்தினரும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். புதிய அரசாங்கத்தின் செயற்திட்டமாகிய கிளீன் சிறிலங்கா செயலணியில் இடம் பெறத்தகுதியான ஒருவர் கூடவா சிறுபான்மைத் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இல்லை என்ற வினாவை நடுநிலையாகச் சிந்திக்கும் ஒருவர் தவிர்த்துச் செல்ல எந்த நியாயமான காரணங்களும் இல்லை. ஒரு அரசாங்கம் சரியானவற்றை செய்கிறபோது அவற்றை பாராட்டி உறுதுணையாக இருக்கும் அதேவேளை பலவீனங்களையும் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் சிவில் சமூகத்திற்கு உண்டு. முன்னைய அரசாங்கங்கள் செய்த அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் பதவிக்கு வந்த சந்தர்ப்பத்தில் இலங்கைப் பொருளாதாரம் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்ட்டிற்கு மாற்றப்பட்டிருந்தது.
மருந்துகள் வழங்கப்பட்டு நோயாளி அவற்றை முறையாகக் கடைப்பிடிக்கும் நிலையில் தான் புதிய வைத்தியரிடம் நோயாளி ஒப்படைக்கப்பட்டார். ஆகவே புதிய வைத்தியர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளியை கையேற்கவில்லை. அது ஒரு ஆறுதலான விடயம். புதிய வைத்தியருக்கு முன்பு இரண்டு தெரிவுகள் இருந்தன ஒன்று ஏற்கெனவே வழங்கப்பட்ட சிகிச்சை முறையை தொடர்ந்தவண்ணம் சாத்தியமான வேறு சிகிச்சை முறைகளுக்கு மாறுவது குறித்து சிந்திக்க கால அவகாசத்தை எடுத்துக் கொள்வது. இரண்டாவது வழங்கப்பட்டுவந்த சிகிச்சை முறையை உடனடியாக நிறுத்தி புதிய சிகிச்சை முறையை ஆரம்பத்தில் இருந்து தொடங்குதல். ஆனால் இது இடரபாயம் நிறைந்தது.
மறுபுறம் அவ்வாறு சிகிச்சையை நிறுத்தி ரிவர்ஸில் செல்லக் கூடிய நிலையில் நோயாளியின் உடல் நிலை தேறவில்லை. எனவே புதிய வைத்தியர் பதவிக்கு வரமுன்னர் ஏற்கெனவே வழங்கப்பட்ட சிகிச்சை முறையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தாலும் கூட நோயாளியின் உடல் நிலையைக் கருத்திற் கொண்டு ஏற்கெனவே விதந்துரைக்கப்பட்ட சிகிச்சையை சிலகாலம் தொடரும் முதலாவது முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
2024 ஆண்டு முடிவடையும் போது இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியாக 15 மாதங்கள் வளர்ச்சியடைந்து சென்றிருக்கிறது. 2022 ஆண்டிலிருந்து 2023 இன் ஜூன் மாதம் வரையிலான 18 மாதகாலம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து சென்றபின்னர் இந்த மீண்டெழுதல் இடம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக 2024 இன் ஜூலை தொடக்கம் செப்டெம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இலங்கையின் விவசாயத்துறை 3 சதவீத விரிவாக்கத்தையும் கைத்தொழிற்துறை 10.8 சதவீத விரிவாக்கத்தையும் சேவைகள் துறை 2.6 சதவீத விரிவாக்கத்தையும் கண்டிருக்கின்றன. ஆகவே இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பது தெரிகிறது. அதேவேளை விலை மட்டங்கள் 2024 ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் தொடர்ச்சியாக குறைவடைந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டு வருகிறது. 2024 செப்டெம்பர் தொடக்கம் டிசம்பர் வரையில் பணவீக்கம் மறைப்பெறுமதியில் முறையே 0.8%, 2.1%, 1.7% ஆகக் காணப்பட்டது. 2022 ஒக்டோபரில் 69 வீதம் வரையில் அதிகரித்த உள்நாட்டுப் பணவீக்கம் தொடர்ந்துகுறைவடைந்து சென்று பூச்சியத்தை அடைந்து இப்போது மறைப்பெறுமதியில் உள்ளது. விலைகள் குறையவில்லையே என்று அங்கலாய்த்த மக்களுக்கு இப்போது உண்மையிலேயே விலைகள் குறைவடைவதைக் காணக் கூடியதாக இருக்க வேண்டும். இது பொதுமக்களுக்க சற்று ஆறுதல் தரும் விடயமாகப் பார்க்க முடியும். இந்த நிலைமை 2025 நடுப்பகுதி வரையில் தொடரலாம் என மத்திய வங்கி குறிப்பிட்டது.
மறுபுறம் இலங்கையில் முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருதுகின்றனர். கடன் தரமிடல் நிறுவனங்கள் இலங்கையின் நிலையை சற்று உயர்த்தி உள்ளமையும் இலங்கைக்குள் உள்வரும் முதலீடுகளில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் காணமுடிகின்றமையும் இதனைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும். அத்துடன் 2025 ஜனவரி 2 இல் இலங்கையின் பங்குச்சந்தையில் அனைத்துப் பங்குவிலைச் சுட்டெண் முதல் முறையான 16000 என்ற மட்டத்தை கடந்தமையும் இங்கு குறிப்பிடலாம். அதே போல கடந்த டிசம்பரில் இலங்கை இருபது இலட்சம் சுற்றுலாப் பயணிகளின் உள்வருகையைக் கடந்தது. 2017, 2018 காலப்பகுதியின் பின் இவ்வாண்டு இந்த இலக்குமீண்டும் எய்தப்பட்டிருக்கிறது. 2025 இல் இவ்வெண்ணிக்கையை முப்பது இலட்சமாக அதிகரிக்க இலக்கிடப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் இத்துறையின் மூலம் சுமார் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகவருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் வரையிலான 11 மாத காலப்பகுதியில் இலங்கை ஏற்றுமதிகள் ஊடாக 14.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகப் பெற்றிருந்தது.
மறுபுறம் புலம் பெயர் இலங்கையர்கள் உழைத்தனுப்பும் பண அனுப்பல்கள் 2024 இன் முதல் 10 மாத காலப்பகுதியில் சுமார் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தன. ஆகவே 2024 ஆண்டில் இந்த டொலர் உள்வருகைகளின் அளவு சுமார் 24 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் இருக்கலாம் எனக்கருத முடியும். இந்த உள்வருகைகளே அமெரிக்க டொலரின் பெறுமதியை 295ரூபாவுக்கு கீழ் பேணக் காரணமாகியது.
(அடுத்தவாரம் தொடரும்)