Home » அங்கலாய்ப்பு

அங்கலாய்ப்பு

by Damith Pushpika
January 5, 2025 6:00 am 0 comment

அன்று வெள்ளிக்கிழமை. ஜூம்ஆத் தொழுகையை முடித்துவிட்டு வந்த அஸீம் ஏதோ பேப்பர் கட்டு ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு முன் சோபாவில் அமர்ந்து கொண்டார்.

‘இஞ்ச பாருங்க என்ன வேல செய்றதா இருந்தாலும் சாப்பாட்ட முடிச்சிட்டு செய்ங்க. சாப்பாட போட்டு வச்சிட்டு என்னால காத்துட்டு இருக்க ஏலா’ மனைவி சபாவின் கண்டிப்பான குரல் அவரைக் கொஞ்சம் கோபப்பட வைத்தாலும் அதை அப்படியே தனக்குள் அடக்கிக்கொண்டார்.

‘சரி..சரி சும்மா கத்தாம சாப்பாட்ட எடுத்து வைங்க. இப்ப வந்துட்றன்’ என்று சொன்னவராய் பதிலுக்குக் காத்திருக்காமல் சாப்பாட்டு அறையை நோக்கி நடந்தார். அப்போதுதான் பாயை விரித்து உணவுப் பண்டங்களை பரத்திக்கொண்டிருந்தாள் மனைவி. ‘என்னமோ நான் லேட்டாகின மாதிரி அந்த கத்து கத்தினீங்க. எப்ப எங்க சாப்பாடு’ என தனது மனைவியை இலேசாக சீண்டிப்பார்த்தார் அஸீம்.

‘ஆ..ஆ.. பொறுங்க.. பொறுங்க நான் இந்த ரெண்டு கையால எத்தன வேலயதான் செய்ற. இந்த பாய கூட நான்தான் போடனும். செல்லமாக சண்டைக்கிழுக்கும் மனைவியை தோளைப்பிடித்து அமரச்செய்தார் அஸீம். கணவனின் கைபட்டதும் மனைவியின் கோபம் தணிந்தது. ‘ஆ…ஆ.. நீங்கதான் கவுன்ஸலராச்சே. அதனால நல்லா ஐஸ் வைப்பீங்க. உங்களபத்தி எனக்கு நல்லா தெரியும். சும்மா நடிக்காம நல்லா சாப்பிடுங்க’ கூறிக்கொண்டே பரிமாறத் தொடங்கினாள் மனைவி. அவளின் அன்பில் நனைந்த அஸீம் திருப்தியாக சாப்பிட்டார்.

‘சும்மா சொல்லக் கூடாது சபா. இன்னக்கி உங்க சாப்பாடு ரொம்ப தூக்கலா இருந்திச்சு. இன்னும்; கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாம் போல இருக்கு. உங்கட கோழி டெவல் வேற லெவல்’ மனம் திறந்து பாராட்டிய அஸீமை நன்றியுடன் பார்த்தாள் சபா.

‘இல்லேங்க எனக்குத் தெரியும் அந்த கோழி டெவலுக்கு கொஞ்சம் உப்பு கூடி போச்சு. அதபோய் நல்லா இருக்குன்னு பொய் சொல்றீங்க?’ தலையை சொறிந்து கொண்டிருந்த மனைவியை ‘அப்படி ஒண்ணுமில்ல அந்த உப்பு ருசி நல்லாவே இருக்கு. அதனாலதான் இன்னக்கி நிறைய சாப்பிட்டிருக்கேன்’ என்று அன்பாக ஆறுதல்படுத்தினார் அஸீம்.

மனைவியின் அன்பு கலந்த சுவையான பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்ட அஸீம், மீண்டும் அதே சோபாவில் வந்தமர்ந்து கொள்கிறார். அவருக்கு முன்னாலிருந்த சிறிய மேசை மீது வைக்கப்பட்ட கடிதக் கட்டை எடுத்து வாசித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரை அவசரப்படுத்தியது. ஆமாம் அஸீம் ஒரு உளவளத் துறை ஆலோசகர். ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்று அனைவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்குவதை பிரதான தொழிலாகக் கொண்டிருந்தார்.

ஆனால் பாடசாலைகளில் இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்தும்போது அவர் எந்த கட்டணங்களையும் அறவிடுவது இல்லை. இன்றும் அப்படித்தான் பிரபல பாடசாலையொன்றிலிருந்து இவ்வருடம் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்குமான ஒரு ஆலோசனை வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். இப்படியான நிகழ்ச்சிகளை நடத்திய பின்னர் அதில் கலந்து கொண்ட அனைத்து நபர்களினதும் கருத்துக்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஒரு தாளிலே எழுதி எடுக்க மறக்க மாட்டார். எழுதுபவர்களின் பெயர்களைக் குறிப்பிடாது கருத்துக்களை மட்டுமே எழுதி எடுப்பதால் அனைவரும் விருப்பத்துடன் தங்கள் பிரச்சினைகளை முன்வைப்பர். இன்றும் அப்படித்தான். அந்த பாடசாலையில் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அதில் கலந்துகொண்ட மாணவர்கள், பெற்றார்கள் ஆகியோரிடம் கருத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டார். அந்த கருத்துக்களை உள்ளடக்கிய கடிதக் கட்டே மேசை மீதிருந்து அவரின் ஆர்வத்தை தூண்டிக்கொண்டிருந்தது. அவற்றை மெதுவாகப் பிரித்து ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினார். முதல் கடிதமே அவரை நிலைகுலையச் செய்தது.

‘சேர்… எங்கட ஸ்கூல்ற இருக்கிற டீச்சர்மார் சரியே இல்ல சேர். குறிப்பா……… அந்த டீச்சர அந்த குப்பய எங்கட ஸ்கூல்ற இருந்து தூக்கி வீசணும் சேர். முடியும்னா இதுக்கு எங்களுக்கு ஹெல்ப்பண்ணுங்க சேர்’ அந்த கடிதத்தை அப்படியே மூடிவைத்து விட்டு அடுத்த கடிதத்தைத் திறக்கிறார்.

‘சேர் எனக்கும் நல்லா படிக்கணும் பெரிய ஆளா வரணும்னு ஆசதான் சேர். ஆனா இங்க எங்களுக்கு எந்த வழிகாட்டலும் இல்ல சேர். டீச்சர்ஸ் எங்களோட எரிஞ்சு எரிஞ்சு விழுறாங்க சேர். மத்த ஸ்கூல் புள்ளைகளோட ஒப்பிட்டு பேசி மட்டம் தட்றாங்க. ஒழுங்கா படிப்பிக்கிறதும் இல்ல. எங்களுக்கு எதுவுமே ஏலாதாம் சேர். ஏதாவது கைத்தொழில் பழக போகட்டாம் சேர். எனக்கு ஸ்கூலுக்கு வர விருப்பமே இல்ல. உம்மாடயும் வாப்பாடயும் கரச்சலுக்காத்தான் ஸ்கூல் வார. எனக்கு நிம்மதியே இல்ல சேர்’ ஒரு பெருமூச்சை விட்ட அஸீம் அடுத்த கடிதத்தை விரிக்கிறார்.

‘சேர் உங்கட எட்வைஸ் நல்லா இருன்ச்சி சேர். படிக்கணும், சாதிக்கணும்னு தோணுது சேர். ஆனா எங்கட வீட்டயும் ஸ்கூலயும் நெனச்சா பயமா இருக்கு சேர். நான் படிக்க நெனக்கிற ஆனா அது முடியல சேர். ஏன்னா எங்கட வாப்பாக்கு கொஞ்ச நாளா வேல இல்ல. சாப்பாட்டுக்கும் கஷ்டம். இதனால உம்மா எந்த நாளும் வாப்பாவோட சண்ட. அவங்கட சண்டய என்னால பொறுக்க முடியல சேர். கவலையோட ஸ்கூல் வந்தா இங்க இல்லாதவங்களுக்கு ஒரு சட்டம், பணக்கார புள்ளேங்களுக்கு இன்னொரு சட்டம். என்னய இங்க யாரும் கண்டுக்கவே இல்ல சேர்.

என்ட கிளாஸ்ல நல்லா படிக்கிறன்டு சொல்லி ஒரு புள்ளய மட்டும் எல்லா டீச்சரும் தூக்கி வச்சி கொண்டாட்றாங்க சேர். எங்கட கிளாஸ் டீச்சர் அந்த புள்ளய டேய்லி ஹக் பண்ணிட்டுத்தான் போவா. அதனால அந்த புள்ளயும் கிளாஸ்ல யாரயும் கணக்கெடுக்குற இல்ல. எல்லாத்து லயும் அவள்தான் முதலாவது வரணும்னு நெனக்கிறாள். டீச்சர் மாரும் அவளுக்குத்தான் எல்லா இடத்தயும் கொடுக்குறாங்க. எனக்கு இப்ப ஸ்கூல் வர விருப்பமே இல்ல சேர்’

மூன்று கடிதங்களை வாசித்து முடித்த அஸீம் திக்குமுக்காடிப் போனார். பலபேர் சேர்ந்து இதயத்தைக் கீறிக்கிழிப்பதைப் போன்ற ஒரு உணர்வு அவரில் மேலிட்டது. இனியும் இவற்றை வாசிக்கத்தான் வேண்டுமா என்ற வினா அவரைக் குடைந்தது. இதற்குமேல் எதையும் வாசிக்கும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. கண்களை மூடி கவலையில் திளைத்தபோது யாரோ வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. மெதுவாக எழுந்து சென்று கதவைத் திறக்கிறார்.

‘அஸ்ஸலாமு அலைக்கும் சேர்.’ என சொல்லிக் கொண்டே வாசலில் நின்றிருந்தார் அந்த பாடசாலையின் பிரதி அதிபர். அவரைக் கண்ட அஸீம் ஒரு கணம் ஆடிப்போனார். ஒருவாறாக தன்னை சுதாகரித்துக் கொண்டு ‘வ அலைக்கும் ஸலாம் உள்ள வாங்க சேர்’ என வரவேற்று சோபாவில் அமரச் செய்தார்.

அந்த மேசை மீதிருந்த கடிதங்களை சுருட்டி அருகிலிருந்த ஒரு பேக்கில் போட்டுக்கொண்டார். ஒரு சிறிய மௌனத்திற்குப் பின்னால் பிரதி அதிபர் பேச்சைத் தொடங்குகிறார்.

‘சேர் இன்டக்கி உங்கட புரோகிராம் நல்லா இருன்ச்சி சேர். நிறையபேருக்கு பிரயோசனமா இருந்திருக்கும் சேர்.’ இது மாதிரியான வார்த்தைகளைக் கேட்டு சலித்துப்போன அஸீம் மேலும் அவரைப் பேசவிடாமல் இடைமறித்தார். ‘ஆ..அப்படியா ரொம்ப சந்தோஷம். ரெண்டொருத்தராச்சும் மாறினா அது போதும் சேர்.’ அஸீம் முடிப்பதற்குள் பிரதி அதிபர் வந்த காரணத்தை விளக்கினார்.

‘சேர் நான் இந்த இன்விடேஷன தந்துட்டுப் போகத்தான் வந்தன். நெக்ஸ்ட் சன்டே எங்கட ஸ்கூல்ற மாணவத் தலைவர் தினவிழா இருக்கு சேர். அதுக்கு நீங்களும் கட்டாயம் வரணும் சேர்’ பிரதி அதிபர் நீட்டிய அழைப்பிதழை வாங்கிக் கொண்டே ‘இத இன்டக்கி காலையில உங்கட ஸ்கூலுக்கு வந்தப்போ தந்திருக்கலாமே’ என்று சாதாரணமாகச் சொன்னார் அஸீம்.

‘இல்ல சேர் அப்படி தாரது மரியாத இல்ல. வீட்டுக்கே கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி பிரின்ஸிபல் சொல்லிட்டாரு. அதனால இதுக்கு நீங்க அவசியம் வரணும் சேர்’ எனச் சொல்லி எழும்ப எத்தனித்தவரை மீண்டும் கதிரையில் அமரச் செய்தார் அஸீம். அந்த அழைப்பிதழை கண்களால் மேய்ந்து கொண்டே சில கேள்விக் கணைகளைத் தொடுக்கலானார்.

‘ஆ… இந்த விழாவ ஸ்டார் ஹோட்டல்ற நடத்துறீங்க. அப்படீன்னா ஒரு பெரிய செலவு போகுமே. அதுக்கு யாராவது ஹெல்ப் பண்றாங்களா?’

‘இல்ல சேர். அந்த ஹோட்டல் ரேட் எல்லாம் மிச்சம் ச்சீப் சேர். ஒருத்தருக்கு எட்டாயிரம் ரூபாத்தான் கொஸ்ட் ஆகும். நாங்க ஸ்டாப், மாணவத் தலைவர்கள், அவங்களோட பேரன்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து ஒரு இருநூறு பேர மட்டும்தான் கூப்பிட்றம் சேர். இது வரைக்கும் ஸ்பொன்ஸர் யாரும் இல்ல சேர்.’

‘நீங்க சொல்றதப் பார்த்தா குறைஞ்சது ஒரு ரெண்டு லட்சமாவது தேவப்படும். ஸ்பொன்ஸரும் யாரும் இல்லன்னு சொல்றீங்க. அப்ப இந்த செலவ எப்படி சமாளிக்க போறீங்க?’ இந்த கேள்வி பிரதி அதிபரை சங்கடப்படுத்தி இருக்க வேண்டும். அவருடைய நாவு தடுமாறியது ‘ஆ… அது வந்து சேர்.. நாங்க இந்த வருஷம் இருபத்தஞ்சு பேர மாணவத் தலைவர்களா தெரிவு செஞ்சி இருக்கோம். அவங்க ஒவ்வொருத்தரும் பத்தாயிரம் ரூபா வீதம் தார்ரதா சொல்லி இருக்காங்க. அத வச்சுதான் விழாவ நடாத்தலாம்னு நெனச்சி இருக்கோம் சேர்’ இந்த பதிலைக் கேட்ட அஸீம் ஆடிப்போனார்.

‘நீங்க என்ன சேர் சொல்றீங்க..? புள்ளைகள்ட்ட சல்லி சேர்க்குறது அவ்வளவு நல்லம் இல்லயே. அதோட உங்கட ஸ்கூல் புள்ளைகள்ற நிறைய பேர் மிச்சம் கஷ்டத்துல வாழ்றாங்க. நிறைய பேருக்கு ஒழுங்கா சாப்பிடவே வசதியில்ல. அதுக்குள்ள பத்தாயிரம் ரூபா கேட்குறது அவ்வளவு நல்லதா படல. அப்படீன்னா இத ஸ்கூல் உள்ளுக்கே சிம்பலா முடிச்சிருக்கலாமே?’ அஸீமின் பேச்சு பிரதி அதிபரை இலேசாக தாக்கியது போலிருந்தது.

‘என்ன சேர் நீங்க இந்த காலத்துல இதெல்லாம் பெரிய சல்லியா. இத புள்ளைகள்ற நன்மக்கித்தானே செய்றம். அதோட இதுமாதிரி விழாக்கள கொஞ்சம் கலர்புல்லா செஞ்சாதானே ஸ்கூலுக்கு பெரும. இது ஒரு நெஷனல் ஸ்கூல் சேர் அதனால இதுலயெல்லாம் கஞ்சத்தனம் பார்க்கக்கூடாது இந்த பிரச்சின எல்லாம் வரும்னு எங்களுக்குத் தெரியும் சேர். அதனாலதான் இந்தமுற நாங்க வசதியான பிள்ளைகளா பார்த்து மாணவத் தலைவர்களா தெரிவு செஞ்சு இருக்கிறம்.’’ பிரதி அதிபரின் பேச்சு மீண்டும் அஸீமை சீண்டியது.

‘என்ன சேர் நீங்க தப்புக்கு மேல தப்பு செய்றீங்க. மாணவத் தலைவர்னா சும்மாவா. அது தகுதி, தராதரம், ஒழுக்கம், கல்வி, சாதன இதுகளப்பார்த்து கொடுக்க வேண்டிய ஒண்டு. நீங்க என்னடான்னா பணக்கார புள்ளேங்களுக்கு கொடுத்திருக்கீங்க. அப்படீன்னா இப்பவே சல்லிய கொடுத்து தலைமைத்துவத்த வாங்க அவங்களுக்கு வழி காட்டப் போறீங்க’ அஸீம் தனது கருத்தைச் சொல்லச் சொல்ல பிரதி அதிபரின் முகம் சிவந்தது. அவரும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்தார்.

‘நீங்க ஒரு சைட்ட மட்டும் பார்க்குறீங்க சேர். இந்த விழாவப்பத்தி கல்வி திணைக்களத்திற்கும் தெரியும். அவங்களே ஒண்டும் சொல்ல இல்ல.

இந்த பங்கஷன்ல பிரதான வளவாளரா அந்த கல்விப் பணிப்பாளர்தான் வாறாரு. இதப்பத்தி அவரு நிறைய ஐடியா சொல்லி இருக்காரு. இதுமாதிரி விழாக்கள ஸ்கூலுக்கு வெளிய இப்படியொரு ஹோட்டல்ற நடத்துறதால புள்ளைகள்ட்டயும் பேரன்ட்ஸ்டயும் பெரிய மாற்றம் வரும்னு அவரும் சொல்றாரு சேர் அதனாலதான் நாங்க இந்த விழாவ கொஞ்சம் வித்தியாசமா செய்ய நெனச்சம் சேர்’ பிரதி அதிபரின் தொனியில் இலேசான எரிச்சல் இருந்தது. இதை உணர்ந்துகொண்ட அஸீம், அவரை கொஞ்சம் அமைதிப்படுத்த விரும்பினார்.

‘ஆ… அப்படீன்னா சந்தோஷம். விழாக்கு ஐடியாவும் அனுமதியும் தந்ததுமில்லாம எந்தவொரு கட்டணமும் எடுக்காம அந்த பணிப்பாளரே பிரதம வளவாளரா வாறாருன்னா ரியல் கிரேட்’ அஸீம் சொல்லி முடிப்பதற்கு முன்பே குறுக்கிட்டார் பிரதி அதிபர்.

‘இல்ல சேர் இல்ல அவரு எவ்வளவு பெரிய ஆளு. சும்மா கூப்பிட்றது நல்லம் இல்லயே. அதனால அவருக்கு ஒரு முப்பதாயிரம் கொடுக்கலாம்னு இருக்கிறம். அவர் சாதாரணமா ஒரு நாளுக்கு ஐம்பதாயிரத்துக்கு மேல எடுக்குற. ஆனா எங்களுக்குத்தான் இந்த எமௌன்டுக்கு வாறாரு’ இதுக்கு மேல் அஸீமால் எதுவும் பேச முடியவில்லை. பேசினாலும் எடுபட போவதுமில்லை. இதனால் சமூத்தின் தலைவிதியை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே ‘சரி சேர் உங்கட புரோக்கிரேம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

ஆனால் அதுல என்னால கலந்துக்க முடியாது. ஏன்னா எனக்குன்னு ஒரு பொலிசி இருக்கு சேர். வசதி இல்லாத புள்ளைகள்ற காசுல நடக்கும் எந்த விழாவுக்கும் இனி போறதில்லன்னு நான் முடிவு பண்ணி இருக்கேன். என்ன அழைச்சதுக்கு தேங்ஸ். ஆனா என்ட சின்ன ரிக்குவெஸ்ட் ஒன்னு என்னான்னா உங்கட ஸ்கூல் புள்ளைகள் நிறைய பிரச்சினைகளோடு இருக்காங்க. தயவு செஞ்சு அதுகள கொஞ்சம் தேடிப்பாருங்க. ஒவ்வொரு புள்ளயையும் விளங்கி, பாரபட்சம் காட்டாம வழிநடத்த சொல்லுங்க. ஒரு ஸ்கூலோட வெற்றி கலர் புல்லான விழாக்கள்ற இல்ல சேர். புள்ளைகள் சந்தோஷமா ஸ்கூல் வரணும். நல்லா படிக்கணும் ஒழுக்கப் பண்புகள்ற உயரணும். முடியும்னா எல்லாருமா சேர்ந்து அதுக்கு வழிகாட்டுங்க’ அஸீமின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் பிரதி அதிபரின் இதயத்தை வருடியது.

‘நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சேர். இதயெல்லாம் நாங்க சொன்னா எடுபடாது சேர். ஏன்னா எங்கட ஸ்கூல்ற பிரின்ஸிபெல்லும் இன்னும் கொஞ்சப்பேரும் இருக்காங்க. அவங்கள எதிர்த்து எதுவும் செய்ய ஏலாது. முதல்ற இப்படி ஹோட்டலுக்கெல்லாம் போக நானும் விரும்பல. ஆனா நிறையப் பேர் அதத்தான் விரும்புறாங்க எல்லாருக்கும் ஒரு மாற்றம் வேணுமாம்.

அதனால இடத்த மாத்திக்க நெனக்கிறாங்க ஆனா மனச மாத்திக்க யாருமே நெனக்கிறாங்க இல்ல சேர். நான் உங்கட பொலிசிய மதிக்கிறன். ஏலும்னா நீங்களும் வந்தா சிறப்பா இருக்கும்’. உணர்வுபூர்வமாக பேசிய பிரதி அதிபரின் கைகளைக் குலுக்கி வழியனுப்பி வைக்கிறார் அஸீம். இருந்தாலும் அவரின் கவனம் முழுவதும் அந்த கடிதங்களிலும் இந்த அழைப்பிதழிலுமே பதிந்து போயிருந்தது.

வரக்காமுறையூர் ராசிக்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division