- குளிர்காலத்தில் பரவும் சுவாசத்தொகுதி தொற்று நோய்களில் ஒன்று
- ‘இது புதிய வைரஸ் அல்ல. நெதர்லாந்து ஆய்வுகூடத்தில் 2001 இல் கண்டறியப்பட்ட நுண்ணுயிர்’ மருத்துவ நிபுணர்கள்
- ‘அடிக்கடி கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல்’ முகக்கவசம் அணிந்து கொள்ளல் நோய் பரவுதலைத் தவிர்க்க பெரிதும் உதவும்’ – பேராசியர் சந்திம ஜீவேந்திர
சீனாவில் புதியதொரு வைரஸ் நோய் பரவி வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இது தொடர்பான விபரங்களை வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவிடம் கேட்டுள்ளது.
அதற்கு சீனா, ‘இது புதிய வைரஸ் அல்ல என்றும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. குளிர் காலத்தில் ஏற்படக்கூடிய நோய் நிலை. அது முழுமையான கட்டுப்பாட்டு நிலையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
என்றாலும் இவ்வைரஸ் தொற்று பரவல் செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் முதல் உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகி தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. அவற்றில் இலங்கையும் ஒன்றாகும். சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் விேஷட கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
ஏனெனில் இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் தோற்றம் பெற்ற கொவிட் 19 பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 70 இலட்சம் பேரை பலி கொண்ட இத்தொற்று, 70 கோடி மக்களைப் பாதித்தும் இருக்கிறது.
அதேநேரம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் உலகமே பல மாதங்கள் ஸ்தம்பித்தது. இந்நிலையில் இருந்து உலகம் முழுமையாக மீண்டு வருவதற்குள் மற்றொரு வைரஸ் சீனாவிலேயே தோற்றம் பெற்று விட்டதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2001 இல் நெதர்லாந்து ஆய்வு கூடத்தில் கண்டறியப்பட்ட ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் (Human Metapneumovirus – HMPV) தான் தற்போது சீனாவில் பதிவாகியுள்ளது. 2001 முதல் இவ்வைரஸ் சுற்றிச் சுற்றி தொற்றுகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இவ்வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி பெரும்பாலானவர்களின் உடலில் காணப்பட முடியும் என்று மருத்துவரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா போன்றே இதுவும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ் தான். நியூமோ வைரிடே எனும் சுவாசப் பாதையைத் தாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது தான் இது. தற்போதுவரை இது, ஏ மற்றும் பி என இரண்டு வகைகளாக உருமாற்றம் அடைந்துள்ளது. அந்த வகைகளுக்குள் ஏ1, ஏ2, ஏ2பி, ஏ.சி, பி1, பி2 ஆகிய உப வகைகளும் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது இந்த எச்.எம்.பி.வி வைரஸை மிக எளிமையாகக் கூறுவதாயின் சாதாரண சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் எனலாம்.
இது ஆளுக்காள் தொற்றிப் பரவக்கூடிய வைரஸ். அதாவது இத்தொற்றுக்குள்ளான நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் சளித்துகள்கள் காற்றில் கலக்கும். அதனை சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்கள் சுவாசிக்கும் போது இவ்வைரஸ் தொற்று ஏற்படும். அத்தோடு இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் தொட்ட பொருட்கள் மற்றும் அவர் பாவித்த இடங்களில் இருந்தும் மற்றொருவருக்குப் பரவ முடியும். குறிப்பாக இத்தொற்குள்ளானவர் தொட்ட உயிரற்ற பொருட்களின் மீதும் இவ்வைரஸ் ஒட்டியிருந்தும் அதனை சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்கள் தொடும் போதும் பரவும் தன்மையையும் இவ்வைரஸ் கொண்டுள்ளது. அத்தோடு இத்தொற்று ஏற்பட்ட நபருடன் கை குலுக்கிவிட்டு கையை கண்கள், மூக்கு, வாயில் வைத்தல், அவர் தும்மும் போதும் இருமும் போதும் அருகில் இருத்தல் போன்றவற்றாலும் இவ்வைரஸ் தொற்று ஏற்படும் என்பதை மறந்து விடலாகாது.
அதேநேரம் இவ்வைரஸின் பரவுகை குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும்.
அதனால் இவ்வைரஸ் தொற்றுக்கு ஒருவர் உள்ளானால் அதற்கான அறிகுறிகள் 3 முதல் 6 நாட்களுக்குள் வெளிப்படும். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு போன்ற சாதாரண அறிகுறிகளாக அவை வெளிப்படும். பின் நோய் குணமடையும்.
ஆனால் இத்தொற்றுக்கு உள்ளான ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அதிக அச்சுறுத்தல் மிக்கவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும், நிமோனியா தீவிர நுரையீரல் தொற்று நிலை என்பன ஏற்படலாம்.
அவர்களுக்கு, மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், நடக்கும் போது தலை சுற்றல், குழந்தைகளின் நெஞ்சுப் பகுதி உள்ளிளுத்து மூச்சு விடுதல், குழந்தை மூச்சு விடும் போது குறட்டை போன்ற சத்தம் வெளிப்படல் போன்றவாறான அறிகுறிகளை அவதானிக்கலாம் என்று கூறியுள்ள ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நிர்ப்பீடனவியல், ஒவ்வாமை மற்றும் மூலக்கூற்று மருத்துவ பீடப் பேராசிரியர் சந்திம ஜீவேந்தர, இவ்வைரஸ் பெரும்பாலானவர்களுக்கு அச்சுறுத்தல் மிக்கதாக இருக்காது.
குறிப்பாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இழுப்பு மற்றும் வலிப்பு உள்ள குழந்தைகளுக்கு இதன் அச்சுறுத்தல் அதிகம். இவர்களுக்கு நுரையீரலில் தீவிர தொற்று நிலை ஏற்படலாம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் முதியவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள், எலும்பு மச்சை மாற்று சிகிச்சை பெற்றவர்கள் (இவர்களிடையே தீவிர தொற்று நிகழும் வாய்ப்பு அதிகம்), உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குன்றியோர் ஆகியோருக்கு இவ்வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று தீவிரத்துடன் காணப்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
ஏனையவர்களுக்கு பெரும்பாலும் சாதாரண சுவாசப்பாதை தொற்றாகவே இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தொற்று ஏனைய சுவாசப்பாதை தொற்று நோய்கள் போன்றே உள்ளது. அதனால் குளிர் காலங்களில் வெளியே செல்லும் போதும் அதிக நெருக்கடியான, காற்று மாசு நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்து கொள்ளுதல், கைகளை அடிக்கடி சவர்க்காரம் போட்டுக் கழுவுதல், மிகவும் நல்லது.
அத்தோடு நோய் நிலைக்கு உள்ளாகியுள்ளவர்கள் வீட்டுக்கு வெளியிலும் குறிப்பாக பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வீடுகளில் இருப்பதன் மூலம் இந்நோயின் பரவுதலைத் தவிர்க்கலாம் என்றும் கூறியுள்ளார் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர.
இவ்வைரஸ் தொற்றுக்கு எதிரான பிரத்தியேக மருந்து இல்லை. ஆனாலும் இந்நோய்க்குரிய அறிகுறிகளை அவதானித்ததும் தகுதியான மருத்துவர்களை அணுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறலாகாது.
ஆகவே வைரஸ் தொற்றுகள் குறித்த செய்திகளை நிதானமாக அணுகும் போது தேவையற்ற அச்சமும், பொதுமக்கள் மத்தியில் பீதியும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
கைகளைக் கழுவுதல், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டால் வைரஸ் தொற்று காலத்தில் மட்டுமல்லாது எப்போதுமே உடலாரோக்கியத்தைப் பேணிக் கொள்ளலாம். அதுவே மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.
மர்லின் மரிக்கார்