மரத்தில் பூக்கும் அரிய வகை மரத்தாமரை பல மகத்துவங்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உதகையை அடுத்துள்ள காந்தள் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இந்த அரிய வகை மரத்தாமரை மரம் காணப்படுகிறது.
இந்த மரத்தடியில் ஏராளமான மகான்கள், சித்தர்கள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஊட்டி பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நறுமணமிக்க சம்பங்கி மலர்களுக்கு அருகிலேயே மரத்தாமரை மரத்தில் மொட்டுகள் தாமரையாகவே வளர்ந்து காட்சி தரும் அழகைக் கண்டு ரசிக்கலாம்.
பொதுவாக, இந்த மரங்களை அடர்ந்த காடுகளில் மட்டுமே காண முடியும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமே இதில் அழகிய பூக்கள் பூக்கும்.
நீலகிரியில் உள்ள சித்தர்களின் சமாதிக்கு அருகில் காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. சமாதிக்குப் பின்புறம் நன்கு வளர்ந்த நான்கு மரத்தாமரை மரங்கள் காணப்படுகின்றன.
இம்மரங்களில் தாமரை போன்று அதிக உருவ ஒற்றுமை வாய்ந்த பூக்கள் பூக்கின்றன. தாமரைப் பூக்களைக் குளத்தில் பார்த்துப் பழகிய நமக்கு மரத்தில் பார்ப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட மெக்னோலியா குடும்பத்தில் சுமார் 210 வகைகள் உள்ளன. செண்பக மரமும் இந்த குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.
செண்பகப் பூக்களைப் போலவே மெக்னோலியா பூக்களும் சிறந்த நறுமணத்தைக் கொண்டவை. இந்த மரங்களும் அதன் உறுதித் தன்மை காரணமாக மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகின்றது.
மெக்னோலியா மரங்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழக்கூடியவை.
இதன் இலைகள் மேற்புறம் அடர் பச்சையாகவும் அடிப்புறம் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
லத்தீன் வார்த்தையான கிரண்டிப்ளோரா (grandiflora) என்பதற்குப் பெரிய பூ என்று பொருள். இந்தப் பூ பார்ப்பதற்கு வெள்ளைத் தாமரைப் பூக்கள் மரத்தில் பூத்திருப்பதைப் போலவே இருப்பதால் இதனைத் தமிழில் மரத்தாமரை என்றே அழைக்கிறார்கள்.
இவை மிசிசிபி மற்றும் லூசியானா மாநிலங்களின் மாநில மலராகும்.