Home » இந்திய வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74 ஒப்பந்தம்
50 ஆண்டுகள் நினைவு

இந்திய வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74 ஒப்பந்தம்

by Damith Pushpika
December 29, 2024 6:00 am 0 comment

இந்த ஆண்டுடன் இந்திராவும் – சிறிமாவும் இந்தியத் தமிழர்களை பங்குபோட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அம்மக்களின் எந்த விருப்பையும் கணக்கிலேயே எடுக்காமல் இந்தியாவும் இலங்கையும் தம் விருப்பத்துக்கு, அவர்களின் அரசியல் இலாப உள்நோக்கங்களுக்கு இம் மக்களை பலியாக்கி அரை நூற்றாண்டு நினைவே இக்கட்டுரை.

அன்றைய அரசாங்கங்கள் ஆதிக்க பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை ஈடுசெய்ய இந்திய வம்சாவழி மக்களை துடைத்தெறிவது, அந்நியப்படுத்துவது, தனிமைப்படுத்துவது என்கிற வழிமுறையை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வந்தன. அதன் நீட்சியாகத் தான் எப்பேர்ப்பட்டேனும் எஞ்சியிருக்கும் இந்தியத் தமிழர்களை நாடு கடத்துவது என்கிற செயல்திட்டத்தின் அடுத்த கட்டத்தை சிறிமா அரசாங்கம் நிறைவேற்றியது.

இந்திய வம்சாவளித் தமிழர்களை களையெடுக்கும் நடவடிக்கையை நான்கு கட்டங்களாக காணலாம்.

• 1931 சர்வஜன வாக்குரிமையை இந்திய வம்சாவளியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தியமை.

• 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற குடியுரிமை பறிப்பு.

• 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குரிமை பறிப்பு.

• 1964ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலமும், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மூலமும் விருப்பத்திற்கு மாறாக; பலாத்காரமாக நாடு கடத்தியமை.

70 களில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையில் நல்ல உறவு வலுப்பட்டிருந்ததை அன்றைய பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். முக்கியமாக சிறிமா பதவியேற்ற ஒரு வருடத்துக்குள்ளேயே நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சியை நசுக்க நேரடியாக இந்தியப் படைகளை அனுப்பி சிறிமா அரசாங்கத்துக்கு கைகொடுத்தது இந்திராவின் அரசாங்கம்.

1970ஆம் ஆண்டு ஆட்சியிலமர்ந்த சிறிமா அரசாங்கம் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியோடு இரு ஒப்பந்தங்களை 1974 இல் செய்து கொண்டது.

1. இந்திய வம்சாவழி மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவது.

2. கச்சதீவை இலங்கைக்கு விட்டுகொடுப்பது.

இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினையை தமது அரசியல் விளையாட்டரங்கில் நெடுங்காலமாக பந்தாட்டத்தைத் தான் ஆடினார்கள் இந்த இரு நாட்டுத் தலைவர்களும். எப்படி பந்தாட்டத்தின் போது ஆடப்படும் பந்துக்கு தன்னைப் பற்றிய சுய உரிமையும், தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமை இல்லையோ அதுபோல இந்திய வம்சாவழி மக்களுக்கும் தம்மைப் பற்றிய முடிவெடுக்கும் உரிமை இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் மீதான தீர்மானம் அவர்களுக்கு வெளியில் தீர்மானிக்கப்பட்டது. அவர்களின் அபிலாசைகளுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. அவர்களின் தலைவர்களின் கருத்துக்களை கூட செவி சாய்க்கவில்லை. இந்திய வம்சாவளி மக்கள் பலாத்காரமாக அனுப்பப்பட்டனர். இது இலங்கையின் பேரினவாத சித்தாந்தத்துக்கும், பேரினவாத சக்திகளுக்கும் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறவேண்டும்.

இந்திய – இலங்கை உறவு

இந்தியா ஒருபுறம் சீனாவுடனும் எல்லைப் போரை சந்தித்தது. பங்களாதேசை முன்னின்று பிரித்துக் கொடுத்ததால் பாகிஸ்தானுடனான பகையை மேலும் மோசமாக்கி இருந்தது. இந்த இரண்டு நாடுகளுடனும் இலங்கை நட்பு பாராட்டி வந்தது. அதனால் இலங்கைக்கு சில விட்டுக்கொடுப்புகளை செய்ய முன்வந்தது இந்தியா. அதன் விளைவு தான் சிறிமா – இந்திரா ஒப்பந்தம். இந்தியா இறுதியில் கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது.

1962ஆம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போரின் போது இலங்கை பிரதமர் சிறிமாவோ சீனாவைக் கண்டிப்பார் அல்லது இந்தியாவுக்கு அனுதாபம் தெரிவிப்பார் என்று இந்திய பிரதமர் நேரு எதிர்பார்த்தார். சிறிமாவோ அப்படி ஒன்றும் செய்யவில்லை. கூட இருந்த இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு அப்படி கண்டிக்க இடமளிக்கவுமில்லை. ஆனால் தமிழரசுக் கட்சியும், மலையகத்தில் இருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இந்தியச் சார்பு நிலையை எடுத்ததோடு சீனாவை ஆக்கிரமிப்பாளர்களெனக் கண்டித்தன.

சிறிமாவோ பண்டாரநாயக்க மீண்டும் ஆட்சியிலமர்ந்த போது அணிசேராக் கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறிக்கொண்டார். வங்காள தேசத்தை உருவாக்கிய 1971ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானின் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்க சிறிமாவோ அனுமதித்தார். இதைவிட இதே காலத்தில் இன்னொரு நிகழ்வும் ஏற்பட்டது.

இந்திரா காந்தி அரசாங்கம் 1974 – மே 18ஆம் திகதி தார்பாலைவனத்தில் பொக்ரைன் எனுமிடத்தில் அணுகுண்டு பரிசோதனையொன்றை செய்தது. அதன் மூலம் அணுகுண்டு வெடிப்பில் 6 ஆவது நாடாக இந்தியா ஆனது. இதனால் வெளியான உலகக் கண்டனங்களை பாகிஸ்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தியா மீது பொருளாதார தடைகள் மெதுவாக ஆரம்பமாகின. இதை பயன்படுத்தி இந்தியாவை தனிமைப்படுத்த நினைத்த பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொண்டு வர முயன்றது. அப்போது ஐ.நாவின் 15 தற்காலிக உறுப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பில் இலங்கையும் இருந்தது. இலங்கையின் ஆதரவைப் பெற்று அத்தீர்மானத்தை முறியடித்தது இந்தியா.

இதற்கான பிரதியுபகாரமாகத் தான் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பும் விட்டுக்கொடுப்புகளும் நிகழ்ந்தன. கச்சத்தீவு இலங்கைக்கு 1974 ஜூன் 24 ஆம் திகதி உடன்படிக்கை ஒன்றின் மூலம் பேசி முடிவெடுத்து. 1974 ஜூன் 28 ஆம் திகதி இரண்டு நாட்டு பிரதமர்களும் தங்களது நாடுகளில் ஒரே நேரத்தில் அறிவித்தார்கள்.

பங்கு பிரித்தல்

1964ம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி அளவில் இந்திய வம்சாவளியினர் 9,75,000 பேர் இலங்கையில் வாழ்ந்திருந்தனர். இவர்களில் 5,25,000 பேருக்கு பிரஜாவுரிமை வழங்க இந்தியா சம்மதித்தது. இலங்கை 3,00,000 பேருக்கு பிரஜாவுரிமை வழங்க சம்மதித்தது. மீதி 1,50,000 பேரின் பிரஜாவுரிமை பற்றி கைச்சாத்திடப்பட்ட சிறீமா – – இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் ஆளுக்குப் பாதியாக பங்கிட்டுக் கொள்வதென தீர்மானித்துக் கொண்டனர். இதன் படி 75,000 பேர் வீதம் இரு நாடுகளும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன.

சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் வன்மையாகக் கண்டித்தன. மக்களினுடையதோ, மக்கள் பிரதிநிதிகளினுடையதோ விருப்பங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. அம் முடிவுகள் வலுக்கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டன. இதற்காக இந்தியாவில் அமையப்போகும் புதுவாழ்வு பற்றி கவர்ச்சிகரமான பிரசாரங்கள் செய்யப்பட்டபோதும் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

அவலம்

அப்போது இலங்கையில் இருந்த இந்திய வம்சாவளி மக்களில் 75 வீதமானோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தனர். எஞ்சியோர் பல்வேறு பட்ட வேலைப்பிரிவினர்களாக நாடு முழுவதும் விரவியிருந்தனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில் அவர்கள் எல்லோரும் தான் அடங்கினர். நகர சுத்தித் தொழிலாளர்களாக இருந்து வந்த இந்திய வம்சாவளியினரின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரும் இப்படி வலுக்கட்டாயமாக பிடித்து அனுப்பப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய பூர்வீகத்தையோ, தமிழ் நாட்டுத் தொடர்புகளையோ கூட அறிந்திராதவர்கள்.

இலங்கையில் பிறந்தும் பலர் எந்த குடியுரிமையும் பெறாதவர்கள். பின்தங்கிய பொருளாதார நிலை. குடியுரிமை இல்லாதவர்கள் என்பதால் வாக்குரிமையோ அரசியல் உரிமையோ கூட கிடையாதவர்கள். அவ்வப்போது நடக்கும் இனவாத தாக்குதல்களால் ஏற்பட்டிருந்த பாதுகாப்பின்மை, ஏனைய இலங்கையர்களுக்கு சமமாக கல்வி வாய்ப்பை பெறமுடியாத போக்கு, உரிய சுகாதார, மருத்துவ வசதிகளைப் பெறமுடியாத நிலை போன்ற காரணிகளால் விரக்தியுற்று இந்தியாவுக்கே சென்று விடலாம் என்கிற மன நிலையை வளர்த்துக் கொண்ட இவர்களில் திரும்பி விடலாம் என்கிற முடிவுக்கு வந்தவர்களும் இருந்தனர்.

இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் வந்த மூதாதையர்களுக்குத் தான் இந்தியாவைத் தெரிந்திருந்தது. இந்தியாவுக்கு அழைத்துவரும்போது இலங்கையைப் பற்றி எப்படி ஆசை வார்த்தைகளை காட்டி அவர்களை அழைத்து வந்தார்களோ அது போல இந்தியாவில் அமையப் போகும் புதுவாழ்வு பற்றி கவர்ச்சிகரமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த புனைவுகள் எதுவும் எடுபடவில்லை.

ஒரு வருடம் வெளியேறுவதற்கான கால அவகாசமாக கொடுக்கப்பட்டது. அதற்கு மேல் தங்கியிருந்தவர்களை அரசாங்கம் கைது செய்து நாடுகடத்தியது. இந்த காலப்பகுதியில், அவர்களை பொலிஸ் ஜீப்புக்களில் ஏற்றி, உடுத்திருந்த உடுதுணியுடன் நாடுகடத்திய சம்பவங்கள் சர்வசாதாரணமாக இடம்பெற்றிருந்தன. அந்த பயணத்தின் போது கூட பியோன் முதல் பொதி தூக்குபவர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரிகள் வரை பலர், இம் மக்களை ஏமாற்றிப் பணத்தையும், பொருட்களையும் பிடுங்கிக் கொண்டனர்.

அப்படி நாடு கடத்தப்பட்டவர்களின் பயணத்தின்போது, குடும்ப உறவுகள் துண்டிக்கப்படுவதுதான் பெரும் சோகமாக இருந்தது. பிரஜாவுரிமை முடிவுசெய்யப்பட்டபோது தந்தையுடன் சேர்த்து பிரஜாவுரிமை பெற்ற குழந்தைகள் பயணம் செய்யும் காலத்தில் 18 வயதினைக் கடந்திருந்தால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைப்பதற்கு முன்பே பெற்றோர்களுக்கு வெளியேற வேண்டிய அறிவித்தல் வந்துவிடும். இதனால் தந்தையும் பிள்ளைகளும் பிரிய நேரிட்டது. சில நேரங்களில் கணவனை மனைவி பிரியநேரிடும். ஒரே குடும்பத்தில் ஒருவர் இலங்கைப் பிரஜாவுரிமையை கொண்டிருப்பார். இன்னொருவர் இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றிருப்பார். அவர்கள் பிரிய நேரிடும். அந்தப் பிரிவின் சோகங்களை, அழுகுரல்களை 1970 – 1977 காலத்தில் மலையகத்தின் புகையிரத நிலையங்களான நாணுஓயா, ஹட்டன், நாவலப்பிட்டி, பதுளை போன்றவற்றில் தினமும் காண நேர்ந்தது.

இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்கள் ஒரே பகுதியில் குடியேற்றப்படாமல் வேறு வேறு பகுதியில் குடியேற்றப்பட்டமையினால் தம்மை நிறுவனமயப்படுத்தி, குரலெழுப்ப முடியாதவர்களாக இருந்தனர். காலநிலை வேறுபாடுகளுக்கு முகம்கொடுக்கவும் இவர்கள் சிரமப்பட்டனர்.

தொண்டமானுடன் இந்திராவும் இந்தியத் தூதுவரும்

இதில் உள்ள இன்னோர் கவலை தந்த விடயம் என்னவென்றால் அதுவரை நாடுகடத்தலுக்கு எதிராக பேசி வந்த தமிழரசுக் கட்சி (அப்போது தமிழர் கூட்டணியாக ஆகியிருந்தது) இந்த ஒப்பந்தத்தை வரவேற்றது. இறுதியாக 1972 இல் மல்லாகம் மாநாட்டுத் தீர்மானத்திலும், அதன் பின்னர் அரசாங்கத்துக்கு முன்வைத்திருந்த கோரிக்கையிலும் கூட இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் நாடற்றோர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக போற்றியது தமிழர் கூட்டணி. அப்போது தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் அக்கூட்டணியில் இணைந்தே இருந்தது.

கள்ளத்தோணிகளை விரட்டு

ஒவ்வொருமுறையும் இந்தியா வம்சாவழியினர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் போது சிங்கள பேரினவாத சக்திகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கு இருந்த பலம் இந்தியா வம்சாவழி மக்களுக்கு இருக்கவில்லை. பிரபல சிங்களத் தேசிய பத்திரிகையான திவயினவில் (18.01.2010) பலர் அறிந்த எழுத்தாளரான தர்மரத்ன தென்னகோன் எழுதிய கட்டுரையில் சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் தோட்டப்புற கள்ளத்தோணிகளுக்கு குடியுரிமையையும், வாக்குரிமையையும் வழங்கி தொண்டமானைத் திருப்திபடுத்தினர் என்கிறார். அதாவது இலங்கை 75,000 பேரைக் கூட ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்றும் அக்கட்டுரையில் வாதிடுகிறார். இவ்வாறு கள்ளதோணிகளை விரட்டும் படி கோருகின்ற பல நூல்களும் கட்டுரைகளும் ஆயிரக்கணக்கில் காணக் கிடைக்கின்றன. அவை சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்த்து விட வாய்ப்பாகியுள்ளன.

“இலங்கையின் பொருளாதார பிரச்சினையைத் தணிப்பதற்காகவே இந்திய வம்சாவளித் தொழிலாளர்களை திரும்ப பெற்றுக்கொள்ள சம்மதித்தோம்”

என்று முன்னால் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நியாயம் கற்பித்திருந்தார். 50 களில் தனது காங்கிரஸ் கட்சியின் தலைவர் நேரு கூறியதை அவருக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

இந்தியப் பிரதமர் நேரு – இலங்கைப் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களைப் பற்றிய பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது பிரதமர் நேரு இப்படி கூறினார்.

“இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினை இலங்கை அரசாங்கத்தின் பிரச்சினையாகும். ஏனென்றால் இந்த மக்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்லர். இவர்கள் இலங்கைக் குடிமக்களே. இது அவர்களின் பிரச்சினை. நம்முடைய பிரச்சினை அல்ல. இலங்கையிலேயே பிறந்து அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாதது. இதை ஓர் அரசியல் பிரச்சினையாகவோ, தகராறாகவோ கருதாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதவேண்டும்.”

இந்தியா செய்த துரோகம்

சிறிமா – இந்திரா ஒப்பந்தமானது இந்திய வம்சாவளித் தமிழர்களின் அரசியல் பலத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும் பலவீனப்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இரண்டாவது பெரிய தேசிய இனமாக உருவெடுத்து வந்த இம் மக்களின் தொகையை இந்த நாடுகடத்தலின் மூலம் செயற்கையாக அழித்ததன் விளைவாக மூன்றாம் இடத்துக்கும் இறுதியில் சனத்தொகையில் இன்று நான்காவது இடமாகவும் அருகி. அதிலும் பெரும்பாலானோர் இன்று இலங்கைத் தமிழர்களாக தங்களைப் பதிவு செய்ததன் மூலம் தேசிய இன அடையாளத்துக்கான தகுதியையே இழக்கும் நிலையில் உள்ளனர்.

இந்நிலமையினால் பல்வேறு வழிகளிலும் தேசிய இனத்தின் ஆதாரமாகக் கொள்கிற நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றைச் சிதைக்கக் காரணமாக அமைந்தது. குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள் இலகுவாக அமைக்கப்படுவதையும், பெருந்தோட்ட நிலங்கள் காடாக கைவிடப்படுவதையும், சிறுதோட்டக்காரர்களுக்கு நிலங்கள் பிரித்துகொடுப்பதையும் இந்த நாடுகடத்தல் மேலும் இலகுவாக்கியது.

அந்த வகையில் இலங்கையின் பேரினவாத அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு இந்தியா துணைபோனது என்றே கூற வேண்டும்.

இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்றில் இந்த நாடுகடத்தல் மிகப்பெரும் சோக நிகழ்வு. இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தினத்தை மலையகத் தேசம் துக்க நாளாகவோ, கரிநாளாகவோ அனுஷ்டிக்க முன்வரவேண்டும்.

இருப்பதையும் இழக்காமல் இருக்கவும் இந்திய வம்சாவழி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை புதிய தலைமுறை புரிந்து கொள்ளவும் ஒரு விழிப்புணர்வு நாளாக ஆக்கப்படவேண்டும்.


நாடற்ற நிலை, குடியுரிமை பறிப்பு, நாடு கடத்தல்

• 1926 குடித்தொகை கணக்கெடுப்பின்படி 12.7% த்தினர். இந்திய வம்சாவழியினர். அதாவது சிங்களவர்களுக்கு அடுத்ததாக சனத்தொகையில் பெரிய இனம்.

• 1931 இல் ஐரோப்பியர் உள்ளிட்ட அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோதும் இந்திய வம்சாவழியினருக்கோ இலங்கையில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தவர்களுக்கே வாக்குரிமை என்று மட்டுபடுத்தப்பட்டது. கல்வியும், சொத்தும் வாக்குரிமைக்கான தகுதியாக இருந்ததால் ஐரோப்பியர்கள் இயல்பாகவே பெற்றனர்.

• 1948 குடியுரிமைச் சட்டத்தின் மூலம் 700,000 இந்திய வம்சாவளி தமிழர்கள் கட்டுப்பாட்டு சட்டங்களால் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

• 1964 சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் நாடற்ற 300,000 பேருக்கு மட்டும் பிரசாவுரிமை வழங்கப்படுவதற்கும் 525,000 நபர்களை திருப்பி அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

• 1974 சிறிமா- இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் நாடற்றவர்களாக கைவிடப்பட்டிருந்த மேலதிக 150,000 பேரில் 75,000 வீதம் இரு நாடுகளும் பிரித்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

• இறுதியில் இலங்கை குடியுரிமை நிராகரிக்கப்பட்ட 87,000 பேரை இந்தியா ஏற்றுக்கொண்டது.

• இரண்டு ஒப்பந்தங்களின் கீழும் இந்தியா ஏற்றுக்கொண்ட மொத்த எண்ணிக்கை 612,000 ஐ எட்டியது.

• 1988 இல் பாராளுமன்றம் 94,000 நாடற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

• 2003 இல் மீதமுள்ள நாடற்ற அனைவருக்கும் குடியுரிமை வழங்க சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் 300,000 க்கும் அதிகமானவர்களுக்கு இலங்கை குடியுரிமை சாத்தியமானது.

என். சரவணன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division