உலகத்தில் படைக்கப்பட்ட உயிர்கள் யாவும் இறக்கக்கூடியவை என்பதை நம்பியவர்களுக்கு நற்செய்தி உண்டு என்ற ஆன்மிகக் கோட்பாட்டுடன் தான் நமது வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறோம்.
நான் இப்போது உங்களிடம் சொல்லப்போகின்ற நிகழ்வும் அதன் யதார்த்தத்தின் சமன்பாடும் தான் மனித உணர்வுகளின் பல்வேறுபட்ட நியாயங்களின் கூட்டு.
கோடை காலங்களில் செய்யப்படாத வயல் வெளிகளின் புழுதியில் புரண்டு விளையாடித்திரிந்த ஒருவன் தான் ராசீக்.
பொத்தானை வயல் வரம்புகளில் தெவிட்டாத பள்ளிப் பாடப் புத்தகங்களை படிக்கத்தவறாத சிறந்த மாணவன் ராசீக். அப்படித்தான் அவனது பாடசாலையில் அவனை புகழ்ந்து பாராட்டித்தள்ளுவார்கள்.
தங்களது வறுமை நிறைந்த வாழ்ககை முறைமைக்குள் சிக்கிச்சின்னா பின்னமாகாத ஒருவன் அவன். மிக வைராக்கியமும் ராங்கியும் அதிகமாக கொண்டவன். அந்த வைராக்கியம் தான் பிற்காலத்தில் அவனை உயர்த்தப் போகிறது என்று ஒரு நாளும் அவனது வாப்பா நஸ்புள்ளாவோ உம்மா சபீனாவோ தெரிந்திருக்கவில்லை.
கெட்டிக்காரன் தான் ஆனால் சண்டைக்காரன். எப்போதும் பாடசாலையில் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டுதான் வீடு வருவான் ராசீக்.
இவனது இந்த நடைமுறை தினந்தோறும் கண்டு நஸ்புள்ளாவும் மனைவி சபீனாவும் ஒரே கவலை.
இங்க…நம்ம ராசீக்கை எப்படியாவது இங்கேயிருந்து அனுப்பிடனும் எங்கேயாவது.
என்ன சொல்ரா நீ.
ஆமாங்க..அவனே இப்படியே இங்கேயே வச்சிருந்தோம்டா இவன்ட திறமையும் இல்லாமல் போய்டும் என்று பயமாக இருக்கு எனக்கு.
நீ பயப்படுற அளவுக்கு அவன் தன் திறமையை பாழ்படுத்திடமாட்டான் அந்த நம்பிக்கை இருக்கு. ஆனால் அவனை இந்த சூழலிலிருந்து தள்ளி வைப்பது எனக்கு நலவாகத்தான் தெரியுது.
அப்போ என்னங்க எங்கட சாலி சாச்சாட வீட்ட கிண்ணியாவில் தங்க வச்சி படிக்க வைக்கலாமே
சாச்சாவும் எப்போதும் என்கிட்ட ராசீக்கை தா நான் அவன படிக்க வைக்கிறேன்று கேட்டுட்டுத்தானே இன்னும் இருக்கார்.
நீ சொல்ரது சரிதான் இருந்தாலும் அவர்களின் நிலைமையும் பொருளாதாரத்திலே மோசமாக இருக்கும் போது நம்மட சுயநலத்திற்காக அவர் கேட்டார் என்பதற்காக அனுப்புவது சரியாவென்றுதான் யோசிக்கிறேன்.
இங்க பாருங்க அவருக்கு நம்மட மகன்டா உசுரு. ஒரு போதும் அவர் சுமையாக நினைக்கமாட்டார்.
நம்மலும் என்னா அப்படியோவா விடுவோம். நம்மால் முடிந்த பண உதவிகளையும் செய்வோம்.
சரி அப்படின்னா நீ இப்பவே உங்க சாச்சாவிடம் பேசு சரியென்று சொன்னால் இந்த வாரத்திற்குள்ளே கொண்டு போய் விடுவோம்.
மனைவி சபீனாவுக்கு இந்த வார்த்தை ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுத்தது. எப்போது ராசீக்கையும் அவனது எதிர்காலத்தையும் நினைத்து நினைத்து கவலையோடும் வலியோடும் இருந்தவளுக்கு கணவரின் சம்மதம் பெரும் சந்தோசத்தைக் கொடுத்தது.
உடனே தனது சாச்சாவுக்கு அழைப்பை ஏற்படுத்தி விடயத்தை சொல்கிறார்.
சாச்சா சாலிக்கு மனசு குளிரும் பேரானந்தம்.
மகள் நீ இனி கவலைப்படாதே நான் அவனை பார்த்துக்கிறேன். இப்பவே கிண்ணியா மத்திய கல்லூரிக்கு போய் அவனை படிக்க சேர்ப்பதற்கான விசயத்தையெல்லாம் பேசிட்டு வாறேன்.
ம்ம்..
சரி சாச்சா. என்று சபீனா அழைப்பைத் துண்டித்தாள்.
சாலி என்பவர் ஊரில் மிகப் பிரபல்யமானவர் அவரிடம் பெரிசா சொத்துப் பணமில்லை ஆனால் திறமை இருக்கு, நல்ல குணமிருக்கு இதை தாண்டி அவரிடம் சீரான ஆன்மிகம் இருக்கு. அதனாலேயே என்னவோ அவருக்கு அந்த ஊரில் ரொம்ப மதிப்பும் மரியாதையுமிருந்தது. அதைத் தாண்டியும் தேசத்திற்கே தெரிந்த ஒரு நல்ல இலக்கிய படைப்பாளியும் கூட அவர்.
அதனால்தான் என்னவோ ராசீக்கிற்கு மத்திய கல்லூரியில் இலகுவாக சேர்ந்து படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தரம் பத்தில் கல்வி கற்க வந்தவன் அடுத்த வருடமே சாதாரண தரத்தில் அதிகூடிய சித்தியை எய்தி பாடசாலைக்கும் பெற்றோருக்கும் ஏன் சாலி அப்பாவுக்கும் பெருமையைத் தேடிக்கொடுத்தான்.
இதற்கு பிறகு ராசீக்கிற்கு பொறுப்பு அதிகமானது. படித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டது. ராசீக்கின் திறமையை கண்டு மகிழ்ந்திருந்த கொஞ்ச மாதங்களிலயே சாலி அப்பாவும் திடிரென மரணிக்க நேர்ந்தது.
இது ராசீக்கிற்கு மிகப் பெரிய தாக்கத்தையும் வலியையும் கொடுத்தது. தனக்கிருந்த முதல் நம்பிக்கை அவர்தான். அவர் இங்கே இல்லையென்ற போது அதனை மனசு ஏற்று மறந்து படிக்க முடியாமல் தவித்தான். தீரா யோசனை உயர் படிப்பை முடிக்க இரண்டு வருடம் கடந்தாக வேண்டும்.
நம்மட பெற்றோர்களின் பொருளாதாரமே அவர்களும் சகோதர சகோதரிகளும் சாப்பிடவும் படிக்கவும் ஏன் மருத்துவ செலவுகளுக்குமே போதாது.
என்ன இப்படியொரு தர்ம சங்கடமான நிலைமையில் நம்மை தாங்கிக்கொண்டிருந்த மிகப் பெரும் தூண் இடையில் எதிர்பார்க்காமலே விட்டுச்சென்று விட்டதே.
எப்படி நான் படிக்கப் போறேன் சாலி அப்பாவின் கனவும் எனது இலட்சியமும் இனி என்னாகுமோ என்று ஏங்கிக்கொண்டிருக்கும் போது, திருகோணமலையில் ஒரு மளிகைக்கடையில் பகுதி நேர கணக்காளர் வேலையொன்று இருப்பதாக மறைந்த சாலியின் உறவினர் ஒருவர் தெரிவித்து ராசீக்கை அங்கு சேர்த்து விட்டார்.
இப்படியே கொஞ்சக்காலம் அந்த வேலையோடு வேலையாக படிப்பையும் தொடர்ந்து உயர் தரத்தில் தெரிவாகி பல்கலைக்கழகம் சென்றான். அங்கேயும் படித்துக்கொண்டே கிடைக்கின்ற வேலைகளை செய்தான் படிக்க போகின்ற செலவு போக மீதியை வீட்டுக்கு அனுப்பினான். பெற்றோர்களும் தங்கை, தம்பிகளும் மகிழ்ந்தனர்.
படித்தான் படித்துக்கொண்டே இருந்தான் எவ்வளவு தூரம் போக இயலுமோ அவ்வளவு தூரம் படிப்பில் அக்கறை கொண்டான்.
SLOS வரை படித்தான், உயர்ந்தான். அதன் பின் திருமணம் ஐந்து பிள்ளைகள் மூன்று ஆண் இரண்டு பெண் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்த்தான். அவர்களையும் பெரிய பெரிய படிப்பு படிக்க வைத்தான்.
பிள்ளைகள் எல்லாம் கனடா, லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் செட்டில் ஆகி இன்று பேரன், பேத்திகளோடு அவர்கள் மிகவும் வசதியாக வாழ்ந்து வருகின்றார்கள். எப்போதாவது விடுமுறைக்கு உம்மா வாப்பாவை பார்க்க வருவார்கள். வேடந்தாங்கல் பறவைகள் போல சீசனுக்கு வந்து போய் விடுவார்கள்.
இங்கே ஊரில் மனைவியும் ராசீக்கும் தான். கடைசி காலங்களில் கூட தான் பெற்ற பிள்ளைகளும் பக்கத்தில் இல்லை ஆறுதலுக்கும் ஒத்தாசைகளுக்கும் யாருமில்லாத வாழ்க்கை. இப்போது ஊரில் பழைய வீட்டில் மனைவியுடன் வாழ்ந்து வருகின்றார் ராசீக்.
ஊரில் பெரிதாக அக்கம் பக்கத்தார் கூட உறவில்லை என்பதைவிட பழக்கமில்லை. முப்பது வருடகாலமாக வெளிநாட்டுச் சேவையில் ஏழு நாடுகளில் பணி நிமித்தம் இருந்துவிட்டு, இப்போது தான் ஓய்வுகாலத்தில் இங்கே வந்து யாரும் இல்லாத தனிமை வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.
இப்போது ராசீக்கிற்கு தன் மனைவி மர்யம் தான் துணை. அவருக்கு இவர் என்ற பரிதாப வாழ்க்கை. இந்த நிலைமையில் தான் ஒரு நாள் திடீரென்று ராசீக்கிற்கு ஹார்ட் அட்டக் வருகிறது.
நடுச்சாமத்தில் உதவிக்கு யாருமில்லை மனைவி மர்யம் அங்கும் இங்கும் ஓடி கதவைத் தட்டி உதவி கேட்டு அருகில் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கிறார்.
ராசீக்கிற்கு இன்னும் சில தினங்களில் அவசரமாக இருதய மாற்றுச் சத்திரச்சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என வைத்தியர்கள் சொல்லி விடுகிறார்கள். இப்போது மனைவி மர்யம் என்ன செய்வதென்று தெரியாமல் தலை சுற்றிப் போய் நிற்கிறாள்.
உடனே பிள்ளைகளுக்கு தகவல் சொல்கிறாள். ஒவ்வொரிடமுமிருந்து உடனே பணம் வங்கிக்கு வந்தது. அவர்கள் யாரும் இங்கே வந்து வாப்பாவின் சிகிச்சையை முடித்து அவருக்கு ஆறுதலாக இருக்க சம்மதிக்கவில்லை. பல காரணங்களை சொல்லி மறுத்துவிட்டார்கள்.
இவர்களைத்தான் ஆசை ஆசையாய் கஷ்டமே என்னவென்று தெரியாமல் வளர்த்து, படிக்க வைத்து, பெரிய பெரிய பதவியில் ஐரோப்பிய நாடுகளிலும் வசித்து வர வாய்ப்பை வழங்கிய வாப்பாவை வந்து பார்க்க நேரமில்லை.
தம் பிள்ளைகளை படிக்க வைக்க ஆசைப்பட்டு ஓடிக்கிட்டே இருக்கின்றவர்களை பார்த்து எனக்கு சிரிக்கத் தோன்றுகிறது.
எப்படியோ பணம் போதும் போதும் என்றளவுக்கு பிள்ளைகள் அனுப்பி வைத்தாலும் பக்கத்திலிருந்து பார்ப்பது போல வருமா.
மனைவி மர்யம் ரொம்ப சிரமப்பட்டு தலை நகருக்குச் சென்று சில உறவினர்களின் ஒத்துழைப்புடன் மாற்றுச்சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து ஊருக்கு கூட்டி வந்து மல சலம் கழுவி குளிப்பாட்டி உணவு ஊட்டி ஒரு சிறுபிள்ளையை பராமரிப்பது போல ராசீக்கை மிக அன்பாக காதலோடு பார்த்திருப்பதை நானும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
இப்படியே சில மாதங்களானது ராசீக் மீண்டும் நல்ல படியாக தேறி வந்துவிட்டார் மனைவி மர்யத்திற்கு பேரானந்தம்.
என்னங்க உங்களை நினைச்சி ரொம்ப பயத்துட்டேன்.
ஏய் நான் மரணிச்சிடுவேன்டு பயந்திட்டியா? அப்படி உன்னை விட்டுட்டு எல்லாம் நான் போக மாட்டேன்டி. என்று மிக நம்பிக்கையாக மர்யத்திடம் பேசி மகிழ்ந்ததை மர்யம் ராத்தா தன் கனடாவில் வசிக்கும் மகனிடம் சொல்லிச் சிரித்தார்.
மர்யத்திற்கும் ராசீக்கிற்கும் உள்ள உறவு அன்பு, காதல் மிகவும் வலிமை மிக்கதாக மாறியது. அவர்களின் இந்த உலக வாழ்வு வசீகரமானது.
தன்னந்தனியாக இருவரும் தங்களது பிள்ளைகளின் நடத்தைகள் பற்றியும் எவ்வித கவலைகளும் இல்லாமல் நாம் இருவர் நமக்கு எதற்கு இன்னொருவர் என்று ரம்மியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது தான், ராசீக்கிற்கு வயது எழுபத்து இரண்டாகி, உடல் நிலை மிக மோசமாக தொடங்குகிறது. மர்யம் இப்போது மறுபடியும் பயம் கொள்கிறாள்.
ராசீக்கின் பழைய நண்பர் ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி ராசீக்கின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது நீங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் கணவரை வந்து கொஞ்ச நேரம் பார்த்து பேசி விட்டு போங்கள் என்று கேட்கிறாள்.
அவரும் தகவலை ஏனைய நண்பர்களுக்கு தெரிவித்து வாரத்தில் ஒரு தடவையாவது வந்து பார்த்து பேசி ஆறுதல் கூறிவிட்டு போவார்.
மர்யம் இந்த தருணங்களை மிகவும் பெறுமதியாக கருதினாள். ராசீக்கின் நண்பர்களை ரொம்பவே மதிக்கத்தொடங்கினாள்.
ஒரு நாள் ராசீக்கின் கைபேசியிலிருந்து ஒரு அழைப்பு. மிகவும் மெல்லிய குரலில் வேதனையான செய்தியை ராசீக் தன் நண்பர் செய்லாப்தீனுக்கு சொன்னார். மனைவி மர்யம் இரவு 12 மணிக்கு மரணித்துவிட்டார் என்பதுதான் அது.
செய்லாப்தீனுக்கு ஒரே அதிர்ச்சி. மிகவும் ஆரோக்கியமாக முகத்தில் எப்போதும் புன்னகையோடு இருந்தாரே என்னாச்சு.?
யா அல்லாஹ் உன் நேரம் யாருக்கு எப்போ எங்கே என்று யாரால் அறிய முடியும். நீ சகலமும் அறிந்தவன்.
ஜே.பிரோஸ்கான்