ஹட்டன் நகரில் புதிதாக 306 மில்லியன் ரூபா செலவில் 2017 ஆம் ஆண்டு நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்ட புகையிரத நிலையம் பணிகள் நிறைவடைந்தும் இதுவரையில் திறக்கப்படவில்லை.
எப்போது திறக்கப்படும் என்ற திகதியும் குறிப்பிடப்படாமல் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை பதில் வழங்கியுள்ளது.
தற்பொழுது நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்ற இந்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகளும் இன்றைய மோசமான நிதி நிலைமைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த புகையிரத நிலையம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் முகமாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கும் இரயில்வே திணைக்களத்திற்கும் தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து அமைச்சு பதில் வழங்கவில்லை. ஏனைய இரண்டு நிறுவங்களும் பதில் தெரிவித்துள்ளன.
இந்த பதில் கடிதத்தில் இரண்டு பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களும் புகையிரத நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் வழங்கவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த திட்டமானது நான்கு கட்டங்களாக நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டு முதலாவது கட்டத்தை 17.11.20 முதல் 2019.06.05 நிறைவு செய்வதெனவும்.
இரண்டாவது கட்டத்தை 2018.05.26 முதல் 2019.07.20 வரையான காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதெனவும் மூன்றாவது கட்டத்தை 2019.01.03 முதல் 2020.09.05 வரையான காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதெனவும் நான்காவது கட்டத்தை 2020.12.07 முதல் 2022.01.07 வரையான பகுதிக்குள் நிறைவு செய்வதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ரயில் நிலையத்தை அமைக்கும் திட்டத்திற்காக 306.01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக 306.01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான பொறியியல் வேலைத்திட்டம் தொடர்பாக மத்திய அறிவுறுத்தல் காரியாலயம் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் ஏனைய ஒப்பந்தக்காரராக இ.எச்.எல் என்ற நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு அதனிடம் கட்டட நிர்மாணம் உட்பட ஏனைய அபிவிருத்தி பணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட காணியின் உரிமையாளராக ரயில்வே திணைக்களம் இருக்கின்றது. அவர்களுடைய காணியிலேயே இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ரயில் நிலையத்தின் மேல்மாடியில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக கடைத் தொகுதியானது யாருக்கு உரித்துடையது இதன் வருமானமானது யாருக்கு செல்கின்றது. என்ற கேள்வியையும் தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையானது வழங்கியுள்ள பதிலானது.
ரயில்வே திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை எனும் இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடுவது தொடர்பான ஆவணம் ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்பு கடைத்தொகுதி திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஜே.ஏ.டி.ஆர்.புஸ்பகுமார வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்,
ஹட்டன் ரயில் நிலையத்திற்கு புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை முதலாவது தரப்பாகவும் இரண்டாவது தரப்பாக இலங்கை ரயில்வே திணைக்களமும் இணைந்து 2016.08.11 ஆம் திகதி ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தத்திலும் நிறைவு செய்கின்ற திகதி குறிப்பிடப்படவில்லை.
மக்கள் பாவனைக்கு எப்பொழுது கையளிக்கப்படும் என்ற கேள்விக்கு கட்டட நிர்மாணப் பணிகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் நிறைவடையாத நிலையில் மேலும் ஒப்பந்த பிரகாரம் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்படாமல் இருப்பதாலும் மக்கள் பாவனைக்கு எப்பொழுது கையளிக்க முடியும் என்ற திகதியை குறிப்பிட முடியாது எனவும் ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஜே.ஏ.டி.ஆர்.புஸ்பகுமார பதில் வழங்கியுள்ளதோடு ஏனைய பல கேள்விகளுக்கும் தங்களிடம் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் அந்த பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டனில் இந்த புதிய ரயில் நிலையத்தை அமைப்பது என்பது ஒரு காலகட்டத்தில் அரசியல் போட்டியாகவே மாறியிருந்தது. ஏனெனில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இது ஒரு அரசியல் காய்நகர்த்தலாகவே பார்க்கப்பட்டது.
ரயில்வே நிலையத்தையும் பிரதான பாதையையும் இணைக்கின்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகரத்தினால் ஆன தடுப்பை அகற்ற முடியாது என்ற ஒரு நிலைமை இருந்தது. ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அதனை அகற்றி புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அன்றைய அமைச்சர் பாடலி சம்பிக ரணவக ஊடாக நட்டினர்.
ஆனால் அவர்களுடைய காலத்தில் அதனை திறந்து வைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் வேலைத்திட்டம் நிறைவடையாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது வேலைத்திட்டம் 80 வீதம் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை திறப்பதற்கு யாரும் முயற்சி செய்வதாக தெரியவில்லை.
இது தொடர்பாக எந்தவொரு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்திலோ அல்லது இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சரிடமோ கலந்துரையாடியதாக தெரியவில்லை.
திட்டத்தை ஆரம்பிப்பதில் காட்டப்படுகின்ற அக்கறை அதனை நிறைவு செய்து மக்களிடம் கையளிப்பதில் காட்டப்படுவதில்லை என்ற நிலையே உள்ளது. இதற்காக செலவிடப்பட்ட 306 மில்லியன் ரூபா எந்தவிதமான பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டதுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டடமும் பாழடைந்து வருகின்றது.
இவ்வாறான பல திட்டங்களும் எமது நாட்டில் பொருளாதார பின்னடைவிற்கு காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
இதனை கவனிப்பார் யார்?
தற்பொழுது புதிய அரசாங்கமானது ஜனாதிபதி அநுர குமார தலைமையில் ஏற்படுத்தப்பட்டு அதற்கான அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே புதிய அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள பிமல் நிரோசன் ரட்நாயக்க இந்த விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி புதிய ரயில் நிலையத்தையும் புதிய கடைத் தொகுதிகளையும் திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் முன்வைக்கின்றார்கள்.
இந்த புதிய ரயில் நிலையம் திறக்கப்படும் பட்சத்தில் ரயில் பயணிகள் பெரிதும் நன்மையடைவார்கள்.
நுவரெலியா எஸ்.தியாகு