Home » ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி நடத்திய சுமுகமான சந்திப்பு

ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி நடத்திய சுமுகமான சந்திப்பு

by Damith Pushpika
December 8, 2024 6:46 am 0 comment

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்திலான முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பிலான பொதுவான எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் இவ்வாரத்தில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக பத்தாவது பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை கடந்த நவம்பர் 21ஆம் திகதி முன்வைத்திருந்தார்.

இது குறித்த விவாதம் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற விவாதத்தில் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் விளக்கியிருந்ததுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தம்முன்னால் காணப்படும் சவால்கள் குறித்தும் எடுத்துக் கூறியிருந்தனர்.

‘ஆளும் கட்சியில் உள்ளவர்கள் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை’ என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்திருந்தனர். எனினும், இவற்றை நடைமுறைப்படுத்த நியாயமான காலப்பகுதி தேவை என்பதை அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது.

இனவாதத்திற்கு இடமில்லை:

இதற்கும் அப்பால் பாராளுமன்ற அமர்வில் பேசப்பட்ட விடயங்களில் மாவீரர்தின நினைவு நிகழ்வுகள் மற்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற கைதுகள் குறித்த விடயமும் உள்ளடங்கியிருந்தது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் அமைதியான முறையில் மாவீரர்தின நினைவு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தடைசெய்யப்பட்ட அமைப்பின் சின்னங்கள் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களின் உருவங்கள், புகைப்படங்கள் இன்றி யுத்தத்தில் உயிரிழந்த எந்தவொரு நபரையும் நினைவுகூருவதற்கு அனுமதி இருப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால கூறியிருந்தார். இதற்கு அமைவாக வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்றிருந்தன.

இருந்தபோதும், இந்த விடயத்தை வைத்து, குறிப்பாக இனவாதத்தை வைத்து மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்ட தென்னிலங்கை சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாகக் கூறிவந்த அரசாங்கம், குறித்த சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்கு முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் சபையில் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர். எனினும், இதனை மறுத்திருந்த அரசாங்க தரப்பினர், தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடிகளைத் தாங்கியவாறு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது எனக் கூறி போலியான தகவல்களை வெளியிட்டவர்களே கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

குறிப்பாக பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் இடம்பெற்ற புகைப்படங்களைப் பிரசுரித்து வடக்கு, கிழக்கில் மீண்டும் பயங்கரவாத அமைப்பு நினைவுகூரப்பட்டுள்ளது என பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிகளே முறியடிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் திட்டவட்டமாகச் சபையில் வலியுறுத்தினர்.

எந்தவொரு முறையிலும் அடிப்படைவாதமோ இனவாதமோ மீண்டும் தலைதூக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் முடக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இருந்தபோதும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தியிருப்பது குறித்த கவலைகள் வெளியிடப்பட்டிருந்தன. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் தடை ஏற்படுத்தாமைக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நன்றி தெரிவித்திருந்தனர். தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தமது பாராட்டை அரசுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

இருந்தபோதும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இவ்விடயத்தைப் பயன்படுத்தி அரசின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயற்சி எடுத்திருந்தனர். இது குறித்து சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழரசுக் கட்சி:

பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்த மற்றுமொரு விடயமாக மாகாணசபை விடயம் அமைந்திருந்தது.

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மாகாணசபை முறைமையை இரத்துச் செய்யப் போவதாக கூறியதாக ஊடகமொன்று வெளியிட்ட பேட்டி குறித்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசின் நிலைப்பாட்டைக் கோரியிருந்தனர். இந்த நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சி இது பற்றியும் கலந்துரையாடியிருப்பதாகத் தெரிகின்றது.

எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பு மூலம் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும் காணாமல் போனவர்கள், காணிப் பிரச்சினை, இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாகவும், தமிழரசுக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடியிருந்ததாகவும் சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வைக் கோரியுள்ளோம். எதிர்காலத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடலாம் என ஜனாதிபதி தங்களிடம் கூறியதாகவும், இனவாதத்தை இல்லாதொழிக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒரு தேவையாகப் பயன்படுத்தினால் தவிர, அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்னார்.

அது மாத்திரமன்றி, நீண்டகாலம் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் தமது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதற்கான சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியாக தேசிய மக்கள் சக்தி காணப்படும் நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

அரசாங்கத்தின் நேசக்கரத்தைப் பற்றிப்பிடித்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தமிழ் அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடாக உள்ளது.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division