Home » 45 ஆண்டுகால பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு சமாதி எப்போது?

45 ஆண்டுகால பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு சமாதி எப்போது?

by Damith Pushpika
December 8, 2024 6:56 am 0 comment

பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது மீண்டும் அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. மாவீரர் தின காலத்தில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் சின்னங்களையும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களையும் பயன்படுத்தியதற்காக வடக்கிலும், அவ்வாறு பயன்படுத்தியதாக போலி வதந்தியைப் பரப்பியதற்காக தெற்கிலும் சிலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேசுபொருளானது.

நவம்பர் மாதம் என்பது இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த இரு இயக்கங்களின் மாவீரர் தினங்கள் அனுஷ்டிக்கப்படும் காலம். வடக்கில் தமிழர் தரப்பிலும், தெற்கில் ஜே.வி.பியினரும் தமது மாவீரர் தினத்தை ரோகண விஜேவீர படத்துடன் அனுஷ்டித்து வருகின்றனர். ஆனால் 83 இல் ஜே.வி.பி மீதான தடையானது பத்தாண்டுகளுக்குள் நீக்கப்பட்ட நிலையில் 90களின் ஆரம்பத்திலிருந்து பகிரங்கமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த போதும், வடக்கில் 15 ஆண்டுகள் கழிந்தும் விடுதலைப் புலிகளின் மீதான தடைகள் நீக்கப்பட்ட நிலையில் அத் தடை தொடர்வதால் யுத்தத்தில் கொல்லப்பட்ட போது மக்கள், புலிகள் இயக்கத்தில் கொல்லப்பட்டவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையோ வைத்து நினைவு கூர முடியாத நிலை தொடர்கிறது. இத்தனைக்கும் தடை செய்யப்பட்டிருந்த ஜே.வி.பி மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு நினைவு கூரப்படுகிறது. ஆனால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தினரின் மீதான தடையை நீக்கவோ, நினைவு கூர முடியாமலோ இருப்பதன் காரணம் இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாதமயப்பட்ட கட்டமைப்பே.

இதுவரை காலம் தமிழ் மக்கள் தமது மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்னர் யுத்தத்தில் கொல்லப்பட்ட சொந்தங்களை நினைந்து நினைவு நாளை அனுஷ்டிக்க விடாதபடி தடுக்கவும் PTA இதுவரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எந்த பயங்கரவாதமுமற்ற நாட்டில் அந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீடிப்பது மட்டுமன்றி அச்சட்டத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற செயல்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவது நாட்டின் ஜனநாயக கட்டமைப்புக்கு எதிரானதாகும். இதன் காரணமாகவே அச்சட்டத்தை நீக்கும் படி தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுந்தவண்ணமுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம் அரை நூற்றாண்டு வயதை எட்டப்போகிறது. ஆட்சிக்கு வந்ததும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது என்பது தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

இது முதன்முதலில் 1978ஆம் ஆண்டு தமிழ் – சிங்கள கலவரத்தைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டம் (Prevention of Terrorism Act; சுருக்கமாக PTA) அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவினால் தற்காலிகச் சட்டம் என்ற அடைமொழியுடனேயே கொண்டுவரப்பட்டது. ஆனால் 1982 இல் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது. இது பொலிசாருக்கும் படையினருக்கும் சந்தேகப்படுவோர் மீது தேடுதல், கைதுசெய்தல், சிறையில் அடைத்தல் போன்ற பரந்த அதிகாரத்தைக் வழங்கியது.

அதேவேளை இந்தச் சட்டம் 1983 ஜூலை கலவரத்தை அடக்கப் பயன்படுத்தப்படவில்லை. அக்கலவரத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான வதந்திகளையோ, அவர்களுக்கு எதிரான துவேஷங்களையோ தடுக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அரச இயந்திரத்தின் மனித உரிமை மீறல்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதும், அல்லது சட்டத்தின் பாதுகாப்புடன் மனித உரிமைகளை மீறுவதற்கான உரிமையையும், அதிகாரத்தையும் அரசுக்கு வழங்குவதற்கே இச்சட்டம் பயன்பட்டது.

குறிப்பாக சிறுபான்மையினர், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்கு வைக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புகள், கண்டனங்களைத் தொடர்ந்து அதை திருத்தப் போவதாகக் கூறிக்கொண்டு 2018 இல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA – – Counter Terrism Act) என்ற புதிய சட்டத்தை கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் அதில் மனித உரிமைகளை மேலும் மீறுவதற்கான புதிய சரத்துக்கள் காணப்பட்டன.

தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சில அடிப்படை மாற்றங்களை செய்திருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்தேக நபரை தடுத்து வைப்பதற்காக மூன்று மாதங்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பிக்க முடியும், அதே நேரத்தில் புதிய மசோதாவில் அது இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பயங்கரவாதச் செயல்கள் என வரையறுக்கப்பட்ட செயல்கள் ஆயுத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை, ஆனால் புதிய சட்ட மூலம் இணையம், இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது அச்சு ஊடகங்களைப் பயன்படுத்தும் வெளியீடுகளையும் பயங்கரவாத குற்றங்களாக வகைப்படுத்துகிறது.

புதிய சட்டத்தின்படி, தடுப்புக் காவல் உத்தரவு அமுல்படுத்தப்படாத சந்தேக நபருக்கு நியாயமான காரணங்களின் அடிப்படையில் நீதவான் பிணை வழங்க முடியும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அரச விரோத செயற்பாடுகளே முதன்மையாக பயங்கரவாத நடவடிக்கையாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் புதிய சட்டத்தில் அது அரசாங்கம் என மாற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் முன்னிலையில் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய சட்டத்தின் கீழ், காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கைது செய்ய முடியும் மற்றும் சந்தேக நபர்களை 24 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஆரம்ப வரலாறு

அரசு நெருக்கடி காலங்களிலும், அதிக பதற்ற காலங்கிலும் பொலிசாருக்கும், இராணுவத்துக்கும் அதிக அதிகாரத்தை வழங்கக்கூடிய சட்டங்களை அமுல்படுத்துவது உலகெங்கிலும் உள்ள நடைமுறையே. ஆனால் உலகெங்கும் அது சிவில் மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்காகவே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் மூன்று விதமான நெருக்கடிகால சட்டங்கள் எனும் பேரில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

1. இராணுவச் சட்டம் (Martial Law)

2. அவசரகால சட்டம்

(Emergency regulation (Law))

3. பயங்கரவாத தடைச் சட்டம் (Prevention Of Terrorism Act)

இராணுவச் சட்டம்

ஆகிலேயர் 1815ஆம் ஆண்டு கண்டியைக் கைப்பற்றி இலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர், கண்டி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டதன்படி சுதேசத் தலைவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்காத நிலையில் கண்டி பிரதானிகள் சிலரின் தலைமையில் 1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி ஆரம்பமானது. அந்த கிளர்ச்சியை நசுக்குவதற்காகவே இலங்கையில் முதன் முதலில் “மார்ஷல் லோ” எனப்படுகிற இராணுவச் சட்டம் முதன் முதலில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் ஏராளமான கண்டியத் தலைவர்களையும், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய பலரையும் கொன்று குவித்தது பிரித்தானிய காலனித்துவ அரசு.

அதன் பின்னர் 1848 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரபுரன் அப்பு போன்றவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக இராணுவச் சட்டம் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் 1915 ஆம் ஆண்டு கண்டியில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்காக மீண்டும் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டதுடன் ஏராளமானோர் அதன்போது கொன்று குவிக்கப்பட்டனர்.

அவசர கால சட்டம்

இலங்கையில் முதற் தடவை அவசரகால சட்டம் கொண்டு வரப்பட்டது தமிழ் மக்களுக்கு எதிரான கலவரத்தின் போது தான். 1958 கலவரத்தின் போதே அவ்வாறு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு எதிராகவே அது அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கழிந்தும் கூட இச்சட்டங்கள் இன்று வரை தமிழ் மக்களின் அரசியல், சிவில் உரிமைகளை நசுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரச பயங்கரவாதத்துக்கு துணைபோன சட்டம்

1987 – 1989 காலப்பகுதியில் ஏராளமான ஜே.வி.பி இளைஞர்களும், ஜே.வி.பி என்கிற சந்தேகத்தின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் கொல்லப்படுவதற்கும் சித்திரவதை முகாம்களில் சித்திரவதை செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் PTA பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் அதிகமான சிவில் உரிமைகள் சார்ந்த வீதிப் போராட்டங்களை இதுவரை நடத்தி வந்த ஜே.வி.பிக்குத் தெரியும் இதுவரை காலம் இச்சட்டங்களைப் பயன்படுத்தி எத்தனை ஆர்ப்பாட்டங்கள் கண்ணீர் புகைகொண்டும், தடியடி பிரயோகம் செய்யப்பட்டு கலைக்கப்பட்டதுடன், பலர் காயப்பட்டு, கைதுக்குள்ளாகி, சித்திரவதைக்கு உள்ளாகி, காணாமல் ஆக்கப்பட்டது மட்டுமன்றி, சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இலங்கையில் அதிகமான காலம் ஊரடங்குச் சட்டம் போடப்பட்ட காலம் இந்த காலப் பகுதியாகும். தமது ஏராளமான தோழர்களை பலிகொடுக்கக் காரணமான இந்த சட்டத்தின் அகோர முகத்தை தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் நிறையவே அறிவார்கள். அச்சட்டம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு கிழக்கில் கொடூர யுத்தத்தை நடத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் யுத்தம் முடிந்தபின்னும் இத்தனை காலம் அச்சட்டம் அமுலிலேயே இருக்கிறது. ஏனென்றால் அச்சட்டத்தைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகங்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் செய்து ருசி கண்ட ஆட்சியாளர்கள் எவரும் அச்சட்டத்தை இலகுவில் கைவிடத் தயாராக இருக்கவில்லை.

2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் உலகளாவிய ரீதியில் பயங்கரவாத எதிர்ப்பு/தடைச் சட்டங்கள் பல நாடுகளில் கொண்டு வரப்பட்டன. ஆனால் இலங்கையில் அதற்கு முன்னரே கொண்டு வரப்பட்டுவிட்டது.

இலங்கையில் அது “பயங்கரவாத”த்துக்கு எதிராக பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக; அதிகமாக அரசியல் துஷ்பிரயோகங்களுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்குமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த இரு அரசாங்கங்கள் புதிய சட்ட மூலங்களைக் கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுத்தன. ‘நல்லாட்சி’ அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தை (Counter Terrorism Bill) கொண்டுவந்ததுடன் அதன் பின்னர் ரணில் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் (Anti -Terrorism Bill) கொண்டுவந்தது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச விமர்சனங்களின் காரணமாக நெகிழ்ச்சியாக்குவதாக கூறிகொண்டு இந்த இரு சட்டங்களும் திருத்தப் பட்டபோதும். நடைமுறையில் இருந்த சட்டத்தை விட கொடூரமான உள்ளடக்கங்களை அது கொண்டிருந்தது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தகுதியை கேள்விக்குள்ளாக்கி தாக்கல் செய்யப்பட்ட முப்பதுக்கும் அதிகமான மனுக்களைப் பரிசீலித்த பின்னர் உயர்நீதிமன்றம் அறிவித்த தீர்மானத்தை அப்போது நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ வாசித்திருந்தார்.

“சட்டமூலத்தின் 8 பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையாக அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. அதனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அவை நிறைவேற்றப்படவேண்டும். சில பிரிவுகள் சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டியது அவசியமாகும். உயர்நீதிமன்றத்தின் விதப்புரைகளின் பிரகாரம் சட்டமூலம் திருத்தப்படுமானால் அதை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றமுடியும்” என்று ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இப்போது அதனை திருத்தி எந்தத் தடையும் இல்லாமல் நிறைவேற்ற பெரும்பான்மை பலம் தற்போதைய அரசாங்கத்திடம் இருக்கிறது.

அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் முக்கியமான தீர்ப்பாகும். புதிய சட்ட திருத்தத்துக்கான முக்கியமான சட்ட வழிகாட்டியாக அமைய வேண்டிய தீர்ப்பு அது.

புதிய சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்க வேண்டுமென்றும், ஐக்கிய நாடுகள் சபையின் வரைவிலக்கணத்துக்கு அமைய அது தயாரிக்கப்படவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சட்டத்தின் கீழ், சமூக ஊடகங்களில் வெறுப்பு / போலி/ தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் இனவெறியைத் தூண்டுவதற்கு எதிராக தனிநபர்களைக் கைது செய்வது தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் தெரண மற்றும் ஹிரு உள்ளிட்ட ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இனவாதம் மற்றும் மதவாதம் பரவுவதற்கு எதிராக தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதை பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இன, மத வெறுப்புகளை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்களையும் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் கருத்துச் சுதந்திரத்துக்கு இழுக்கு ஏற்படாத வகையிலும், அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதும், தற்போதுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் அல்லது ஜனாதிபதி கூறுவது போல் புதிய சட்டங்களை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஒருவருக்கு பயங்கரவாதியாக தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலை போராளியாக தென்படுவார் என்பதை நாம் அறிவோம். இந்த முரண்பட்ட இரு துருவ வியாக்கியானங்களுக்குள் சரியான வரைவிலக்கணத்தை எட்டுவது என்பது சட்டவாக்கத்துக்கு இலகுவான காரியமல்ல. ஆனால் அது இழுபறிப்படும் வரை இன, மத பிரச்சினைகள் மையப் பிரச்சினையாகவும், தேசிய பிரச்சினையாகவும் நீண்ட காலம் தொடர்கிற இலங்கை போன்ற நாடுகள் நெருக்கடிக்குள்ளேயே தொடர நேரிடும். நாட்டின் ஐக்கியத்துக்கு மாத்திரமன்றி அமைதிக்கும் ஒட்டு மொத்த அபிவிருத்திக்கும் கூட இது பெரும் தடையாக இருக்கும்.

****

கால வரிசை

1979 ஜூலை 24: 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் பிடியாணை இல்லாமல் கைது செய்தல், நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் காலம் மற்றும் ஊடக அறிக்கையிடல் மீதான கட்டுப்பாடுகள் உட்பட பயங்கரவாதத்தை முறியடிப்பது என்கிற பேரில் சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியது.

1982 ஜூலை 24: பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் நோக்கம் மற்றும் வரைவிலக்கணங்கள் விரிவுபடுத்தப்பட்டு நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.

1980 களில் இருந்து: இலங்கையர்கள், குறிப்பாக சிறுபான்மையினர், அரசாங்கத்தால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் கொடூரமான சட்டத்தின் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கினர்.

2002: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை, குறிப்பாக உள்நாட்டுப் போர் காலத்தில், பலவந்தமாக காணாமல் போகச் செய்த சம்பவங்களை இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தியதை விவரித்தது.

2011: சில அமைப்புகளைத் தடைசெய்யும் ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.

2015: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய இலங்கை இணை அனுசரணை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2017: ஒரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது சிவில் உரிமைகள் மீதான சாத்தியமான கட்டுப்பாடுகள் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.

2018: பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், இல. 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக 2018 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த புதிய சட்டம் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களை புலனாய்வு செய்தல், வழக்குத் தொடுத்தல் மற்றும் தண்டிப்பதற்கான பல விதிகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இலங்கை பொலிஸிற்குள் ஒரு விசேட பயங்கரவாத எதிர்ப்பு முகவர் நிறுவனத்தை ஸ்தாபித்ததுடன், பயங்கரவாதத்தை தடுக்கவும் எதிர்க்கவும் பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியது.

2018: பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் போது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான அணுகுமுறையின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

2019: பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக இலங்கை அரசாங்கம் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. மனித உரிமைகளை போதுமான அளவு பாதுகாக்கத் தவறியதற்காக இந்த மசோதாவை விமர்சித்து சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

4 செப்டெம்பர் 2020: தங்காலையில் பழைய சிறைச்சாலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கென தடுப்பு மையம் நியமிக்கப்பட்டது.

2021 மார்ச் 17: திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 13: இலங்கையில் 11 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது.

27 ஜனவரி 2022: பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கான திருத்தங்கள் இலங்கை அரசாங்கத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய மனித உரிமை குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தவறியதோடு அதில் உள்ள திருத்தங்களை விமர்சித்து சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

பெப்ரவரி 2022: சர்வதேச மன்னிப்புச் சபை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஒரு சுருக்க அறிக்கையை வெளியிட்டது.

2023 மார்ச் 22: திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் (The Anti-Terrorism Bill) வர்த்தமானியில் வெளியிடப்பட்டது, இது சிவில் உரிமைகள் குறித்த புதிய அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் மீதான பரவலான விமர்சனங்கள் காரணமாக அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

செப்டெம்பர் 12: திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், குறிப்பாக பயங்கரவாதம் என்பதற்கான விரிவான வரைவிலக்கணம், நீடிக்கப்பட்ட தடுப்புக்காவல் காலம், பிணைக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரங்கள் குறித்து கவலை தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை கையளித்தது.

****

இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறல்கள்

* தொழிற்சங்க போராட்டங்களை, ஒன்றுகூடல்களை நடத்துபவர்களை கைது செய்வதற்கும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

* பயங்கரவாதத் தடைச் சட்டம் சந்தேக நபர்களை 18 மாதங்கள் வரை குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்க அனுமதிக்கிறது.

* “பயங்கரவாதம்” என்பதன் வரையறையே தெளிவற்றதாகவும், அதீத பரந்ததாகவும் உள்ளது, நடைமுறையில் சிறுபான்மையினர், விமர்சகர்களையும் ஊடகவியலாளர்களையும் குறிவைக்க பயன்படுத்தப்படுகிறது.

* ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு வழமையான சித்திரவதைகள் பயன்படுத்தப்பட்டதற்கான பல ஆதாரங்கள் இருந்தபோதிலும், அழுத்தம் கொடுத்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

* பயங்கரவாதத் தடைச் சட்டம் எதேச்சதிகாரமான கைதுகளுக்கு அனுமதி வழங்குகின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மேலும் அவர்களின் தடுப்புக்காவல் மறுபரிசீலனை செய்யப்படுவதற்காக ஒரு நீதிபதியின் முன் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும் என்கிற கட்டாயமில்லை.

* நடைமுறையில், சந்தேகத்திற்குரியவர்களுக்கான சாதாரண அடிப்படை சட்ட நடைமுறை பாதுகாப்புகள் மறுக்கப்படுகின்றன: அவர்களுக்கு கைது ஆணைகள் அல்லது ரசீதுகள் வழங்கப்படுவதில்லை, அவர்களுக்கு சட்டபூர்வ பிரதிநிதித்துவத்திற்கான அணுகல் மறுக்கப்படுகிறது மேலும் அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

* பயங்கரவாதத் தடைச் சட்டம் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதை கடினமாக்குகிறது, மேலும் பிணைக்கான ஏற்பாடுகள் இருக்கும் இடங்களில் கூட, அவை எப்போதும் நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை.

* பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைகள் காலவரையறையின்றி தாமதப்படுத்தப்படலாம். சில சமயங்களில் கைதிகள் விசாரணைத் திகதி எதுவும் நிர்ணயிக்கப்படாமல் வருடக்கணக்காக தடுத்து வைக்கப்படுகின்றனர்.

தமிழில்: என். சரவணன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division