தேங்காய் ஒரு தீவிரமான அரசியல் பிரச்சினையாக மாறும் என்று யார்தான் நினைத்தார்கள்? ஆனால் இப்போது நிஜமாகவே தேங்காய்ப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்த்தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான M.K சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் – நல்லூரில் அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றியடைய வேண்டுமென்று தேங்காய் அடித்து வழிபட்டார்.
அப்பொழுது அதொரு வேடிக்கையாகப் பார்க்கப்பட்டது. உண்மையாக அது வேடிக்கைதான். ஆனால் அன்று அரசியலுக்காக சிவாஜிலிங்கம் அடித்த தேங்காய் இன்று அரசியல் வெடி குண்டாக மாறுமளவுக்கு நிலைமை உருவாகியிருக்கிறது.
வேறொன்றிமில்லை, நாட்டில் தேங்காய்க்கு ஏற்பட்டிருக்கும் திடீர்த் தட்டுப்பாடு அரசியல் விவகாரமாக மாறும் நிலையைக் கொண்டு வந்துள்ளது.
மக்களுக்கு அத்தியாவசியமாக இருக்கும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அது விவகாரமாக – அரசியல் பிரச்சினையாக மாறிவிடுவதுண்டு. கோட்டபாய ஆட்சிக் காலத்தில் நடந்தது இதுதானே. சனங்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக க்யூவில் நின்றார்கள். அப்படி நின்றும் பொருளைப் பெறுவதற்குக் கடினமாக இருந்தது. விளைவு, அறகலய. ஆக மக்களின் நெருக்கடியை எதிர்க்கட்சிகள் தமக்கு வாய்ப்பான ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கும். இப்போது நடப்பது அதுதான்.
NPP ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால் அது தேங்காய் விவகாரத்தில் தவறிழைத்துள்ளது என்ற மாதிரியொரு தோற்றத்தைக் காட்டுவதே எதிர்த்தரப்பின் விருப்பமாக உள்ளது. உண்மை நிலவரம் வேறு.
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்னைகளைத் தாக்கும் பல வகையான நோய்கள் தீவிரமடைந்திருந்தன. தென்னைச் செய்கையாளர்கள் இதைக் குறித்த கவலைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தனர். தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் நோய் ஆராய்ச்சி, நோய்த்தடுப்பு பிரிவும் இந்தப் பிரச்சினையில் தீவிரமாக ஈடுபட்டு, தடுப்பு நடவடிக்கையில் செயற்பட்டது. ஏறக்குறைய இது தென்னைகளைத் தாக்கிய கொரோனா என்றே சொல்ல வேண்டும்.
மனிதர்களைத் தாக்கிய கொரோனா கூடிய விரைவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் தென்னையைத் தாக்கிய – இன்னும் தாக்கிக் கொண்டிருக்கிற கொரானா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. உண்மையில் இந்த நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நோய்களைப் பற்றி அறிவதற்காக இந்தியா உட்பட சில நாடுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நோயியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் சென்று வந்தனர்.
விளைவு?
நோய் நிற்கவில்லை.
இந்த நோய்த்தாக்கம் பல வகையானது.
1. கருவண்டுத் தாக்கம்.
2. மயிர்க் கொட்டித்தாக்கம். இது நாம் சாதாரணமாகப் பார்க்கின்ற மயிர்க் கொட்டியல்ல.
3. இலை கருகல் நோய்.
4. செதில் பூச்சித்தாக்கம்.
5. கறையான் தாக்கம்.
6. குருத்தழுகல்.
7. சிற்றுண்ணித் தாக்கம்.
8. லேசியோடிப்ளோடியா தியோபுரோமே தாக்கம்.
9. இதையெல்லாம் விட பெரிய பிரச்சினை குரங்குகளின் தொல்லையாகும். தென்னைகளிலேயே ஏறி குரும்பைகளையே பறித்து நாசமாக்கி விடுகின்றன. இப்படிப் பலவிதமாக இதுள்ளது.
இதைக் கட்டுப்படுத்துதற்கான நடவடிக்கைகளை தெங்குப் பயிர்ச் செய்கை மற்றும் தென்னை ஆராய்ச்சி – நோய்த்தடுப்புப் பிரிவு போன்றவை முயற்சித்தன. ஆனாலும் முழுமையான அளவில் எதுவும் கட்டுப்படுத்தப்படவில்லை. இதனால் தேங்காய் உற்பத்தித்திறன் பாதிக்கப்பட்டது. இது தேங்காயின் அறுவடையில் பாதிப்பை உண்டாக்கியது. அதன் விளைவாக தேங்காய்க்குத் தட்டுப்பாடு உருவாக, அது விலை அதிகரிப்பைச் செய்தது.
தேங்காய்ப் பிரச்சினையை ஏனைய பிரச்சினைகளைப் போல உடனடியாக தீர்க்க முடியாது. ஏனென்றால் தேங்காய்ச் செய்கை ஒன்றும் கீரைச் செய்கையைப் போன்றதல்ல. சாதாரணமாக ஒரு தென்னை நாட்டப்பட்டால் அது முறையான அறுவடையைத் தருவதற்கு ஏறக்குறைய ஏழு, எட்டு ஆண்டுகள் செல்லும். காய்க்கும் தென்னைகளில் நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தினாலும் மீள்நிலைக்குள்ளாகி அவை மீண்டும் காய்க்கத் தொடங்குவதற்கு ஆறு மாதங்காவது செல்லும். இது முதலாவது குலைக்கானது. இது முற்றி அறுவடையாக மேலும் மாதங்கள் எடுக்கும். சரியான விளைச்சலைப் பெறவேண்டுமானால் நோய்த்தாக்கம் கட்டுப்படுத்தப் பட்டு ஓராண்டாவது செல்ல வேண்டும். மற்றையது குரங்கினால் ஈற்படும் அழிவு. வடக்கில் தேய்காய் இழப்புக்கும் இது பெருமளவில் காரணமாகின்றது. அதனால்தான் கடந்த அரசாங்க காலத்தில் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் யோசனையொன்று கொண்டுவரப்பட்டது. ஆனால் அதுகுறித்த விலங்கு ஆர்வலர்களின் எதிர்ப்பு அதனை சாத்தியமற்றதாக்கியது.
ஆக இப்போதுள்ள ஒரே தெரிவு நாட்டில் துரிதப்படுத்தப்பட்ட தென்னைவள அபவிருத்தியை மேம்படுத்துவது. அது சமூகத் தேவையை நிறைவேற்றும் வரையில் இறக்குமதியைச் செய்வதேயாகும். இதை விட்டால் வேறு வழி?
உலகில் 108 நாடுகளில் தென்னைச் செய்கை நடக்கிறது. இதில் முக்கியமான ஓரிடம் இந்தியாவில் உள்ள கேரளாவிலாகும். கேரளாவுக்கு அண்மையில் தேங்காய்ப் பட்டினம் என்ற ஓரிடமே உண்டு. இதைப்பற்றி தோப்பில் முகம்மது மீரான் ரொம்பச் சுவையாக எழுதியிருக்கிறார்.
ஒரு காலம் இந்தத் தேங்காய்ப் பட்டினத்திலிருந்து இலங்கைக்கு பல வகையான தேங்காய்கள் எடுத்துவரப்பட்டன. அதேபோல இங்கிருந்து அங்கே வேறு வகையான தேங்காய்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதெல்லாம் தென்னைப் பயிச்செய்கைக்காகவே. ஆனால் இப்போது அப்படியல்ல. இது தேங்காய்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இருக்கலாம். அல்லது இதை விட வேறு மார்க்கத்தை அரசாங்கம் பார்க்கக்கூடும். ஆனால் நிச்சயமாக நாம் தேங்காய்ப் பிரச்சினைக்கு விரைவில் ஒரு சீரான தீர்வைக் காண வேண்டும். ஏனென்றால் இலங்கையின் தேசிய உற்பத்திகளில் தேங்காய் முக்கியமான ஒன்றாகும். மட்டுமல்ல, இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களிலும் தென்னை உற்பத்திகள் முதலிடம் பெற்றவை. ஒரு காலம் இலங்கைக்கான வருவாயை ஈட்டித் தந்தவை, தேயிலை, தென்னை, இறப்பர் ஆகியவையே. இதைப் பெருந்தோட்டப் பயிர் என அடையாளப்படுத்தினர். அன்றைய பாடநூல்களிலேயே இதைப்பற்றி விரிவாக எழுதப்பட்டது.
ஆனால் இன்று நாட்டு மக்களுடைய தேவைக்கே தென்னை உற்பத்திகள் போதாமலாகிவிட்டன. இவ்வளவுக்கும் தென்னை அபிவிருத்திக்கென தனி அமைச்சே இருந்தது. இருந்தும் இதுதான் நிலைமையென்றால்?
இப்போது எல்லாவற்றையும் சீராக்கும் ஆட்சிக்காலமொன்று வந்திருப்பதால், தென்னை அபிவிருத்தியிலும் தேங்காய் அறுவடையிலும் நிறைவானதொரு முன்னேற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கலாம்.
இதுவரையான சீரின்மைகள் திருத்தம் செய்யப்பட்டு, புத்தாக்கத் திட்டங்கள் உருவாக்கப் படலாம். அது வரையிலும் மாற்று ஏற்பாடுகளையே நாட வேண்டும். மேலுமொன்று, இன்றைய தேங்காய் தட்டுப்பாட்டுக்கு, தென்னைகளின் மீதான நோய்த்தாக்கம் மட்டுமல்ல, போரின்போது நடந்த தென்னைகளின் அழிவும் ஒரு பிரதான காரணமாகும்.
வடக்குக் கிழக்கில் 30 ஆண்டுகளாக நீண்ட போரினால் 10 லட்சத்துக்கு மேற்பட்ட தென்னைகள் முழுதாகவே அழிந்தன. இதை துரித விருத்தித் திட்டத்தில் மீள்நிலைப் படுத்த வேண்டும். அதற்குரிய பொறிமுறைகள் உருவாக்கப்படுவது அவசியம்.
நாட்டிலுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதைப்போல இதற்கும் தீர்வைக் காண வேண்டும். இல்லையென்றால் தேங்காய், தேங்காய் எண்ணெய், சிரட்டை, மட்டை, கிடுகு, தென்னஞ் சாராயம் எனப்பலவற்றைப் பெற முடியாமற் போகும்.
ஆகவே நாட்டுக்குப் பத்து வீட்டிக்குப் பத்து தென்னைகளை நடுவோம். தென்னைகளை நடுகை செய்யும் திட்டமொன்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளிநொச்சி றோட்டறிக் கழகம் செய்து வருகிறது. றோட்டறி உறுப்பினர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதேசத்திலுள்ள ஆதரவு தேவைப்படும் குடும்பங்களின் நிலத்தில் தலா 60 தென்னைகள் நாட்டப்படுகின்றன. இதை ஒரு முன்மாதிரியாக நாடு பின்பற்றலாம். நாட்டை முன்னேற்ற வேண்டுமென்றால் நல்லனவற்றை விரைந்து செய்ய வேண்டும்.
- சிவபாக்கியன்