புவியின் மிக அதிக அடர்த்தியான தீவாக ‘சாண்டா குரூஸ் டெல் இஸ்லோட்’ காணப்படுகிறது. இது வடக்கு கொலம்பியாவில் உள்ள பொலிவா டிபார்ட்மென்ட் கடற்கரையில் உள்ள ஒரு செயற்கை தீவு. சான் பெர்னார்டோ தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியான இந்தச் செயற்கைத் தீவில், சுமார் 600 பேர் வசிக்கின்றனர்.
மொத்த இடமே மூன்று ஏக்கர்தான். 200 மீற்றர் நீளமும், 120 மீற்றர் அகலமும் கொண்ட இத் தீவு வடக்கு கொலம்பியா கடற்படையால் பாதுகாக்கப்படுகிறது.
இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர் ஆப்ரோ கொலம்பியர்கள். இங்கு காவல் துறையினர் கிடையாது. குற்றமோ, வன்முறையோ இல்லை. மின்சாரத்துக்கு பெரும்பாலும் சோலார் பெனல்களை பயன்படுத்துகின்றனர். சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வருகின்றன.
இத் தீவின் வியப்பான தகவல்கள்
தீவில் சுறுசுறுப்பான தெரு உள்ளது. இளைஞர்கள் ரப் இசை கேட்கின்றனர். கால்பந்து விளையாடுகின்றனர். தற்போது இணைய வசதியும் வந்து விட்டது. தீவில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்.
மொத்தம் நான்கு முக்கிய சாலைகள். அளவில் குறுகலானவை. இதனால் கார், மோட்டார் பைக் கிடையாது. வீட்டின் கதவுகள் பூட்டப்படுவதில்லை. இங்கு தன்னாட்சி கிடையாது.
மொத்த சனத் தொகையில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள். 20 பேர் வரை மட்டும் பயில ஒரு பள்ளி உள்ளது. 1860-ஆம் ஆண்டு வரையில் யாரும் இங்கு குடியேறவில்லை. மற்ற பகுதி மீனவர்கள் அவ்வப்போது வந்து ஓய்வு எடுப்பர். புயல் சமயங்களில் ஒதுங்குவர்.
அதன் பிறகு மீனவர்கள் குடியேற ஆரம்பித்தனர். ஒரு சமயம் ஒரு சிமென்ட் சிலுவை கரை ஒதுங்கியது. அதனை எடுத்து தீவின் மையத்தில் வைத்தனர். சிலுவையை இங்கு ‘குரூஸ்’ என அழைப்பர்.
இங்கு ஒரு சிறிய மீன்காட்சி சாலை உள்ளது. இதில் ஆமைகள், மீன்கள், சிறிய சுறா மீன்கள் பாதுகாக்கப்படுகின்றன. சிறிய துறைமுகம் உண்டு.
இந்தச் செயற்கைத் தீவைப் பார்க்க தினமும் ஐநூறு சுற்றுலாப் பயணிகள் வரை வந்து செல்கின்றனர்.