Home » இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர்நிறுத்த உடன்பாடு நிலைத்திருக்குமா?

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர்நிறுத்த உடன்பாடு நிலைத்திருக்குமா?

by Damith Pushpika
December 1, 2024 6:54 am 0 comment

மேற்காசிய அரசியலில் மீண்டும் ஒரு போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாடுகளும் நாடுகளுக்கிடையிலான உடன்பாடுகளும் எட்டப்படுவதற்காக ஒப்பமிடப்படுகின்ற மை காயும் முன்னர் அத்தகைய உடன்படிக்கைகள் கிழித் ​ெதறியப்படும் துயரம் வரலாற்று நியதியாகவே உள்ளது. அத்தகைய நிலையில் இருந்து இஸ்ரேல் — ஹிஸ்புல்லா- – லெபனான் போர் நிறுத்த உடன்பாடு நிலைத்திருக்கும் என்ற கேள்வி எல்லா தரப்புகளிடமும் எழுந்துள்ளது. ஆனாலும் லெபனான் மக்களின் மற்றும் ஆட்சியாளர்களின் மனோநிலையில் இது ஒரு வெற்றிகரமான அணுகுமுறை என்றும் ஹிஸ்புல்லாக்கள் மீண்டெழுவதற்கான வாய்ப்பை இது கொடுக்கின்றது என்றும் பிரஸ்தாபிக்கப்படுகிறது. போர் நிறுத்த உடன்பாட்டின் நிலைத்திருக்கும் தன்மையையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் தேட இக்கட்டுரை முயலுகிறது.

கடந்த 27.11.2024 அமெரிக்கா தலைமையிலான அரபுலக நாடுகளில் முன் முயற்சியால் இஸ்ரேல் – — லெபனான்ஹி – ஸ்புல்லா உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் ஆயுட்காலம் 60 நாட்கள் மட்டுமே. அந்த நாட்களுக்குள் போர் உடன்பாட்டை மீறுகின்ற சூழல் ஏற்பட்டால் போர் தொடங்குமென்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். லெபனானிய மக்கள் தெற்கு லெபனானுக்கும் இஸ்ரேலிய மக்கள் வடக்கு இஸ்ரேலுக்கும் தங்கள் குடியிருப்புகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இஸ்ரேலிய தரப்பு பெரிய அளவில் இதற்கான முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை என்றே தெரிகின்றது.

இதற்கான காரணம் இஸ்ரேலியர் உடன்பாட்டின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதாகவே தெரிகிறது. அவரது எச்சரிக்கையின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்வது என்பது இப்போர் நிறுத்த உடன்பாட்டின் நிலைத்திருப்பை புரிந்து கொள்ள உதவுகிறது. இது தொடர்பில் இஸ்ரேலியப் பிரதமரது எச்சரிக்கையை விளங்கிக் கொள்வது பொருத்தமானமாக அமையும்.

அமெரிக்காவின் முழுப் புரிதலோடு இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான முழுச் சுதந்திரத்தையும் பெற்றிருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகின்ற விதத்தில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால் அதாவது ஆயுதங்களை கையில் எடுக்க முற்பட்டால், எல்லை ஓரங்களில் பயங்கரவாதத்தை மீள கட்டமைக்க முயன்றால், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவினால், தெற்கு லெபனான் பகுதியில் அல்லது எல்லையோரத்தில் சுரங்கங்களை அமைத்தால், ஏவுகணைகளை சுமந்தபடி வாகனங்கள் இயக்கப்பட்டால், இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என எச்சரிக்கை செய்துள்ளார். ஆனாலும் இத்தாக்குதலை மேற்கொள்வதற்குரிய ஒப்புதலை இஸ்ரேல் பெற்றுக் கொண்டாலும், உலக நாடுகள் போர் நிறுத்த உடன்படிக்கை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகின்றன. குறிப்பாக இத்தகைய உடன்படிக்கையை வரவேற்றுள்ள ஈரான், இஸ்ரேல், லெபனான், ஹிஸ்புல்லா உடன்படிக்கையை வரவேற்பதோடு இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முடிவு கிட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிராந்திய அமைதியை சாத்தியப்படுத்தும் என்றும் பிராந்தியத்தின் உறுதித் தன்மைக்கு வழி வகுக்கும் எனவும் தாம் நம்புவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சீனாவை பொறுத்தவரையில் பதற்றத்தை தணிக்கவும் அமைதியை உறுதிப்படுத்தவும் இவ் உடன்படிக்கை உதவும் என தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் கெய்ல் ஸ்டார்மர் குறிப்பிடும்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அரசியல் தீர்வாக மாற்றப்படுகின்ற போது நீடித்த நிலைதிருப்பு சாத்தியமாகும் என குறிப்பிட்டுள்ளார். இங்கு உடன்பாடு தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமெரிக்க தரப்பு உடன்பாட்டின் உறுதித் தன்மையை பேணுமாறு அனைத்து தரப்புகளையும் கூறியுள்ளது.

உடன்பாட்டு அடிப்படையில், இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானிலிருந்து படிப்படியாக வெளியேறுவதோடு அப் பிரதேசத்தை நோக்கி லெபனானியப் படைகள் தங்கள் பிரசன்னத்தை மேற்கொள்ள முடியும் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீள் கட்டமைப்பை தடுக்கும் வகையில் லெபனான் பகுதியை பாதுகாப்பதற்கான இராணுவம் உறுதி செய்யப்படும் எனவும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் கருத்து கூறுகின்ற போது, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான படைகளை நிறுத்துவது என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும் தெரியப்படுத்தியதோடு போர்நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம், லெபனான் இராணுவம் தெற்கு லெபனானுக்குச் செல்ல முடியும் என்றும் ஐ.நா சபையின் 1701 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கை இருதரப்புகளிலும் எவ்வகை நலன்களை கொண்டிருக்கிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இஸ்ரேலிய தரப்பை பொறுத்தவரை இவ் உடன்படிக்கை தற்காலிகமானது என்பதையும் மீளவும் போருக்கான தயாரிப்பு என்பதையும் அத்தரப்பு உணர்ந்துள்ளது. அதனை இஸ்ரேலியப் பிரதமர் வெளிப்படுத்தி வருகின்றார். குறிப்பாக இஸ்ரேலிய இராணுவத்தை பலப்படுத்தவும் இராணுவத்துக்கு ஓய்வு கொடுக்கவும், ஆயுதக் கிடங்குகளை நிரப்பவும் இக்காலப் பகுதியை தாம் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதேநேரம் ஹிஸ்புல்லாக்கள் முழுமையாக அழிக்கப்படாமல் இவ் உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய் தரப்பு உடன்பட்டது மோசமான பின் விளைவுகளை தருமென இஸ்ரேலிய மக்கள் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி உள்ளனர். இன்னோர் தரப்பினர் போர் நிறுத்த உடன்பாடு இக்கால பகுதியில் அவசியம் என்றும் இஸ்ரேலிய அரசாங்கம் கூறுவது போல், இராணுவத்தை பலப்படுத்துவதற்கு போர் நிறுத்த காலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

ஆனால் அடிப்படையில் ஹமாஸ் இப்போரில் ஈடுபட்டதிலிருந்து வலிமையான தாக்குதலையும் இஸ்ரேலிய நிலப்பரப்பில் பெரும் அழிவுகளையும் ஹிஸ்புல்லா தரப்பு தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றது. ஹிஸ்புல்லாக்களின் தலைமை கொல்லப்பட்ட பின்னரும் இஸ்ரேல் மீதான தாக்குதலில் தொடர்ச்சியாக பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்ரேலியரின் புலனாய்வு பக்கத்தை பலப்படுத்தவும் மீளமைக்கவும் தொடர்ச்சியாக இவ்வகை தாக்குதல்களை வெற்றிகரமாக நகர்த்தவும் ஒரு வாய்ப்பை கொடுக்கின்ற அதே சந்தர்ப்பத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணையை மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் ஆசிய நாடுகளிலும் அதிகமான எதிர்ப்பை இஸ்ரேல் எதிர்கொள்ளுகின்ற நிலையிலும் இத்தகைய போர் நிறுத்த உடன்படிக்கை தேவைப்பட்டது. நெதன்யாகுவைப் பாதுகாக்கும் விதத்தில் இத்தகைய போர் நிறுத்த உடன்படிக்கை சாத்தியமாகி உள்ளது.

அடிப்படையில் ஹிஸ்புல்லாக்களை பொறுத்தவரையில் இத்தகைய போர் நிறுத்த உடன்படிக்கை ஒரு வெற்றிகரமான அணுகுமுறை என்று கருதுகின்றனர். காரணம் அவருடைய போருத்திகளையும் நடவடிக்கைகளையும் மீளமைப்பதற்கு இக்கால பகுதியை பயன்படுத்த திட்டமிடுகின்றனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் பின்புலத்தில் இயங்கும் ஈரான், இதற்கான ஒப்புதலை மற்றும் ஆதரவை தெரிவித்தது என்பது ஹிஸ்புல்லா அமைப்புக்கான செயல்முறையாகவே தெரிகிறது. ஆகவே இருதரப்புகளால் இவ்விடயம் ஒருங்கிணைக்கப்படவும் போரியல் ரீதியில் பலப்படுத்தப்படவும் மீளவும் ஒரு போரை தொடங்குவதற்கான திட்டமிடலோடும் இவ் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இவ் உடன்படிக்கை லெபனானியரது இராணுவ ரீதியான இருப்பைக் கடந்து தனது பொது மக்களை பாதுகாக்கும் விதத்தில் உடன்படிக்கையை கருதுகின்றது. மொத்தத்தில் உடன்படிக்கை, மூன்று தரப்புகளும் வெவ்வேறு நோக்கங்களோடு நகர்ந்து செல்வதனை கண்டு கொள்ள முடிகின்றது

எனவே இஸ்ரேல்- ஹிஸ்புல்லா- லெபனான் மேற்கொண்ட உடன்படிக்கை தற்காலிகமானது என்பது மட்டும் அல்ல, போருக்கான தயார்படுத்தலை இரு தரப்பு மேற்கொள்வதற்கான உத்திகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதில் லெபனான் ஆட்சியாளர்களும் அதன் மக்களுமே பெரும் நெருக்கடியையும் துயரத்தையும் அனுபவித்து வருபவர்களாக உள்ளனர். இஸ்ரேலியரது தாக்குதலில் ஏறக்குறைய 3500 க்கும் மேற்பட்ட லெபனானிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதன் விளைவுகளில் லெபனானின்; தலைநகரான பெய்ரூட்டின் பகுதிகளில் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதோடு லெபனானின் பொருளாதாரம் மற்றும் அதற்கான வாய்ப்புகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய சூழலில்; போர் நிறுத்த உடன்பாடு நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புதிய அரசாங்கம் மேற்கொள்ள இருக்கின்ற நகர்வுகளில் இருந்து உடன்பாட்டின் நீடித்த நிலைப்பும் அமைதியும் பிராந்திய பாதுகாப்பும் சாத்தியமானதாக அமையும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division