கனதியான கண்ணீர்
கண்களிலிருந்து
கரைந்து ஓடணும்…
அதுதான்
கண்களுக்கும்
பெண்களுக்கும் அழகு….
இமயப் பாரம் சுமக்கும்
இதயங்கள்
இளகிப் போக
இங்கு இல்லை
எந்த வைத்தியமும்..
கரைந்தோடும்
கண்ணீரைத் தவிர…
முறிந்த சிறகுகளுடன்
மூலைக்குள் முடங்கி
முணுமுணுப்பதால்
முடிவிற்கு வராது எதுவும்..
அதனால் ..
கனதியான கண்ணீரை
கரைந்து ஓடவிடு….
தன்னில் தோன்றும் உணர்வுகள்
தன் நிழலாய் தொடர்வதால்
தக்கவைக்கத் தேவையில்லை
கண் சுரக்கும் கண்ணீரை…
கரைந்தோடட்டும்
கனதியான கண்ணீர்…
துளிக்கண்ணீரின்றி
துள்ளித்திரிந்த ஒரு காலம்
இருந்தது எல்லோருக்கும்….
யதார்த்தங்களுக்குள்
சங்கமித்துப் போனதால்
துளிக்கண்ணீரின்றி
வாழ்வே இல்லை
என்றாகிப் போனதே…
கருக்கொண்ட கார்மேகம்
மழையாய் மண்மீது
பொழிந்துவிட்டால்
வெளிரும் வானம்போல்…
கவலைகளை கண்ணீரால்
கழுவிவிட்டால் உன் உள்ளமும்
தெளிந்துதான் போகும்….
சுமைகளை தூக்கிச் சுமக்கத்
தேவையில்லை இங்கே யாரும்…
தூக்கிச் சுமப்பதை விட
தூங்கிச் சாவது மேல்….
உளச் சுமைகள்
உருகிப்போக
கனதியான கண்ணீர்
கரைந்தோடட்டும்….