க.பொ.த.(உ.தர)ப் பரீட்சை நாளை (25) ஆரம்பமாகிறது. நாடளாவிய ரீதியில் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இப்பரீட்சை டிசம்பர் (20) வரை நடைபெறும்.
பரீட்சைத் திணைக்களம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இவர்களில் 2,53,390 பாடசாலை ரீதியிலும்,79,795 பேர்,தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். 2024.11.19 நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முழுமையாக நிறைவடையும் வரை, முற்றாக தடை செய்யப்பட்டுள்ள விடயங்களை பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகளுக்காக தனியார் வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்,வகுப்புக்களை நடத்துதல், பாடம் தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல்.
பரீட்சையின் ஊக வினாப்பத்திரங்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல், பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களை தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல், அவற்றை தம்வசம் வைத்திருத்தல் என்பவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
க.பொ.த. தரப் பரீட்சைக்குரிய 2013.06.21ஆம் திகதிய வர்த்தமானி 1968ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைக்கமைய இவை,தடை செய்யப்பட்டுள்ளன.
எவரேனும் ஒருவரோ, நிறுவனமோ, தரப்பினரோ இக்கட்ளையை மீறி செயற்பட்டால் அது தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது திணைக்களத்துக்கோ முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன .
பொலிஸ் தலைமைச் செயலகம் – 0112421111
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம் – 119
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் நேரடி அழைப்பு இல – 1911.
பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளை
011 – 2784208 / 011 – 2784537.