Home » அரச ஊடகங்கள் தனியார் ஊடகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

அரச ஊடகங்கள் தனியார் ஊடகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ

by Damith Pushpika
November 24, 2024 6:11 am 0 comment

புதிய ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

அரசாங்கம் என்ற வகையில் நாம் தேசிய வேலைத்திட்டம் ஒன்றுக்கு அமைவாகச் செயற்படும் குழுவாகும். ஊடகங்கள் அல்லது வேறு அனைத்து நிறுவனங்களும் தனித்தனியாக இருந்தாலும், அவற்றுக்கிடையிலான உறவுகளுடன் ஒருங்கிணைந்த திட்டத்துடன் செயற்படுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். ஊடகத்துறை அமைச்சு என்பது ஒரு தனியான நிறுவனமாக இருந்த போதிலும், முழு அரசாங்கத்தினதும் பேச்சாளர் என்ற வகையில் அதன் முக்கிய பங்கை அரசாங்க தகவல் திணைக்களம் நிறைவேற்ற வேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்றிருப்பது தகவல் திணைக்களம், வெகுஜன ஊடகங்கள் தொடர்பான பகுதிகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து விடயங்களையும் குறித்த அமைச்சர்களின் வரம்பை விரிவுபடுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டிருப்பதாகும். தகவல் திணைக்களம், ஊடகத் துறை ஆகிய இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நாம் வேறு உலகில் வாழ்கிறோம். மக்கள் இப்போது மாற்றமடைந்திருக்கின்றார்கள். அந்த மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப செயற்படவேண்டும். போட்டி ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் மக்களின் சிந்தனையை விரிவுபடுத்தக்கூடிய ஊடகப் பயன்பாடு உருவாகும். அரச ஊடகங்கள் முன்னுதாரணமாக செயற்பட்டால் ஏனைய அனைத்து ஊடகங்களும் அவ்வாறே செயற்படும்.

தேசிய மக்கள் சக்தி ஊடகவியலாளர்களின் கடமைகளைப் பாதுகாப்பது மற்றும் ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் வலுவான குரலை எழுப்பியது. ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க புதிய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது?

அரசாங்கத்தின் பக்கத்தில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை கூடியளவில் பாதுகாப்போம். ஊடகவியலாளர்களின் நோக்கத்தை நாம் மேலும் விரிவுபடுத்துவோம். அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வோம். தகவல்களை அறிந்து கொள்வதற்கு பொது மக்களுக்கு இருக்கும் உரிமையை கூடியளவில் பாதுகாப்பதற்காக நாம் பத்திரிகையாளர்களைப் பாதுகாப்போம். ஒரு பத்திரிகையாளர் சமூகத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம். பத்திரிகையாளர்களின் வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்துவோம். புதிய உலகத்துக்குப் பொருந்தக் கூடிய, புதிய சிந்தனைக்குப் பொருந்தக் கூடிய ஊடகப் பயன்பாடு தொடர்பில் நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். ஊடகவியலாளர்களின் நிபுணத்துவத்தை அதிகரிக்கவும், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். ஊடகவியலாளரின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கு இந்த அமைச்சு செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். ஒரு நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரம் மிகவும் முக்கியமானது.

கடந்த அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டது. எதிர்காலத்தில் இந்தச் சட்டமூலத்தை மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறீர்களா?

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இடையூறாக இருக்காது. ஆனால் சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவற்றைச் சுய ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும் என்றே நாங்கள் நம்புகிறோம்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, எக்னலிகொட காணாமல் போனமை, போத்தல ஜயந்த மீதான தாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் கீழ் நீதி கிடைக்குமா?

அந்த விசாரணைகள் அனைத்தும் ஏற்கனவே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. திறமையான அதிகாரிகளின் கீழ் முறையான விசாரணைகள் நடத்தப்படுகின்றன. எனவே, வழக்குத் தாக்கல் செய்யும் போதும் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளும் போதும் தேவையான கால அவகாசத்தை எடுத்து, தேவையான முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளால் இனி ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது.

கடந்த அரசாங்க காலத்தின் போது அரச ஊடகங்களுக்கு சில அமைச்சர்களால் பெரும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. இந்த ஆட்சியின் கீழ் இந்த நிலை மாறுமா?

கண்டிப்பாக நாம் ஊடகங்களின் மீது கை வைக்க மாட்டோம். ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை நாம் பாதுகாப்போம். அரச ஊடகம் என்பது ஊடகத்துறை அமைச்சரின் அல்லது ஏனைய அமைச்சர்களின் மதிப்பை ஊதிப் பெருப்பிப்பதற்கானது அல்ல. அரசாங்க விவகாரங்களைப் பற்றி குடிமக்களுக்குத் தெரிவிக்கும் பணி அரசாங்க ஊடகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு ஞானத்தை வழங்க வேண்டிய பெரும் பொறுப்பு அரச ஊடகங்களுக்கு உள்ளது.

மறுபுறம், அரச ஊடகங்கள் உயர் தரம் வாய்ந்ததாக இருந்தால்தான், அது ஏனைய ஊடகங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். இந்த எல்லா ஊடகங்களையும் விட அரச ஊடகம் பிரமாண்டமானதாகும். அந்த பிரமாண்டத்தை அரச ஊடகங்கள் மூலம் காட்ட வேண்டும். இதற்குப் பிறகு, அமைச்சர்கள் அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு வந்து பிரதான தலைப்புச் செய்திகளை மாற்றுமாறு கூறும் ஊடகக் கலாசாரம் இலங்கையில் இருக்காது. இதற்குக் காரணம் இப்போது மக்கள் அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ளதால், அரச ஊடகங்களுக்குப் பதிலாக இன்று இருப்பது மக்கள் ஊடகம்தான்.

கடந்த காலங்களில் எழுந்த சில பிரச்சினைகளால் சுகாதாரத் துறையில் உள்ள சில நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுமா?

மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மற்றும் மருந்துக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் உள்ள பலவீனங்களைக் குறைத்து நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எமது பதவிக்காலத்தினுள் சகல வசதிகளுடன் கூடிய ஆய்வுக்கூடத்தை நிறுவ எதிர்பார்க்கிறோம். அங்கு மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் தரமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அதன்படி, தரம் குறைந்த உபகரணங்கள் மற்றும் தரம் குறைந்த மருந்துகள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். தனியார் துறையினரிடமிருந்து மருந்துகளை வாங்கும் நோயாளிகளுக்காக குறிப்பிடத்தக்க வகையில் மருந்துகளின் விலைகளை கணிசமான அளவில் விரைவில் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

சமீபகாலமாக சுகாதாரத்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை உடைந்து வருகிறது. இதை மீண்டும் உறுதிப்படுத்த புதிய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

இது அரசியல் அதிகாரத்தின் பிரச்சினையே தவிர சுகாதார சேவையில் உள்ள தரப்பினரின் பிரச்சினை அல்ல. நாம் சிறப்பான சுகாதாரச் சேவையாளர்கள் என்ற நிலைக்குள்ளாவது கீழ் மட்ட பணியாளர்கள் வரை சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களின் அர்ப்பணிப்பினாலேயாகும். தோட்ட வைத்தியசாலைகளில் பணிபுரிந்த வைத்தியர்கள் முதல் கீழ்மட்ட ஊழியர் வரை பெரும் சேவையை ஆற்றி இந்த சுகாதார சேவையைப் பாதுகாத்திருக்கின்றார்கள். ஆனால் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளினால் சுகாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் சுகாதார சேவை சீரழிந்துள்ளது. எதிர்காலத்தில் சுகாதார அமைச்சின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் நாம் பணிகளை முன்னெடுப்போம்.

ஒரு தனிக் கட்சியாக தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வாறு புதிய அரசியல் கலாசாரத்தின் தோற்றத்திற்கு தாக்கத்தைச் செலுத்திய காரணிகள் என்ன?

நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கோரவில்லை. பலம் மிக்க அரசாங்கத்தின் தேவையை மாத்திரமே நாம் கூறினோம். அதேபோன்று இவ்வாறான முறையில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களை ஏமாற்றுவதற்கான தேவை எமக்கிருக்கவில்லை. 2020ஆம் ஆண்டில் கோட்டாபய ஆட்சிக்கு வந்தது இரத்தக் கறைபடிந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னராகும். 2010ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சியில் அமர்த்தினார்கள். தேசிய மக்கள் சக்தியின் வெற்றி அவ்வாறானதொன்றல்ல.

இது நாம் மக்களிடம் உண்மையைக் கூறி பெற்றுக் கொண்ட அதிகாரமாகும். இன்று எதிர்க்கட்சியில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமைக்கு ஏமாற்று குணம்தான் காரணம். இதனால், அவர்களின் கட்சிகளின் தலைமைத்துவம் மாற்றப்பட்டுள்ளது என்பதற்காக அங்கு எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division