உலகிலேயே வருடத்தில் 9 மாதங்கள் வறண்ட பாலைநிலமாகவும் 3 மாதங்கள் மட்டும் ஈரப்பதம் நிறைந்த, பனி சூழ்ந்த, பசுமையான வெப்பமண்டல காடாகவும் இருக்கும் ஒரே நாடு ஓமானாகும்.
மத்திய கிழக்கு நாடுகள் பெரும்பாலும் பாலைவனம் சூழ்ந்தவை. ஓமானில் உள்ள ஒரு பகுதி பாலைவனம் மட்டும் திடீரென பசுமையான மழைக்காடாக மாறிவிடுகிறது.
அங்கு ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உருவாகின்றன. 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலைக் குறைகிறது. இந்த நிகழ்வை “சலாலா கரீஃப்” (Salalah Khareef) அல்லது சலாலா பருவமழை என்று அழைக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டெம்பர் வரை பெய்யும் பருவமழையால் இந்த நிகழ்வு நடக்கிறது.
இங்கிருந்து 50 கிலோமீற்றர் கடந்து சென்றால் மழை இல்லாமல் பாலைவனம் 50 டிகிரி செல்சியஸில் சுட்டெரிக்கும். இந்த இரண்டு பகுதிகளும் ஒரே நாட்டில் இருக்கிறது.
மழைக்காடு என்றால் மரங்கள் புல்வெளிகள் செழித்து வளரும். ஒட்டகங்களுக்கு இங்கு உருவாகும் நீர்நிலைகள் சொர்க்கம் போல இருக்கும். அத்துடன் இங்கு நல்ல பனியும் சூழ்ந்துவிடும். சில நேரங்களில் நமக்கு 3 அடி முன்னிருக்கும் பொருளைக் கூட நாம் பார்க்க முடியாதபடி இருக்கும் என்கின்றனர்.
ஒட்டகங்கள் மட்டுமல்லாமல் பல பூச்சிகள், பாம்புகள், சிலந்திகள் மற்றும் பாலூட்டிகளுக்கு இது வீடாக திகழ்கிறது. குறிப்பாக அழிவின் விழிம்பில் இருக்கும் அரேபிய சிறுத்தைகளுக்கு இது கடைசி புகலிடமாக இருக்கிறது.
கடற்கரையை ஒட்டி இருக்கும் இந்த மழைக்காடு கடலோரமாக 250 கிலோமீற்றர் வரை நீண்டிருக்கிறது. கடற்கரையில் இருந்து 5 முதல் 10 கிலோமீற்றர்வரை அகலமான நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிக பட்சமாக இந்த காடு கடற்கரையில் இருந்து 30 கிலோமீற்றர் விலகியிருக்கிறது. ஓமானில் நிரந்தரமான ஆறோ, ஏரியோ கிடையாது. பருவ மழையால் இந்தப் பகுதியில் மட்டும் நீர்வீழ்ச்சிகள் தோன்றும். வாடி டார்பட் என்பது புகழ்பெற்ற ஏரி ஆகும்.
சலாலா பகுதியில் ஜிப்பாலி என்ற மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தான் சலாலாவின் பூர்வகுடிகள்.
இந்த பூர்வக்குடி மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு இங்கு வளரும் அனோஜெய்சஸ் என்ற மரத்தைத்தான் பெருமளவில் நம்பியிருக்கின்றனர்.
இந்த மரம் இவர்களுக்கு விறகு எரிக்கவும், பொருட்கள் செய்யவும் ஏன் மூலிகை மருந்தாக கூட பயன்படுகிறது. சலாலாவில் தான் புகழ்பெற்ற சாம்பிராணி மரங்களும் அதிகமாகக் காணப்படுகிறது. சலாலா பகுதியில் அதிகமாக ஒட்டகங்கள் மற்றும் பசுக்கள் மேய்வதனால் காட்டின் சிலப் பகுதிகள் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன.