Home » அனுபவசாலிகள்தான் நாட்டை வங்குரோத்தாக்கினார்கள்

அனுபவசாலிகள்தான் நாட்டை வங்குரோத்தாக்கினார்கள்

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர், மாவட்ட நிறைவேற்று உறுப்பினர் பிரியந்த வருஷமான

by Damith Pushpika
November 10, 2024 6:45 am 0 comment

கேள்வி : தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் நீங்கள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் என்ற வகையில், அரசியல் களத்தில் இதுவரை வந்த பாதையை விளக்க முடியுமா?

பதில்: கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக எமது நாடு கைவிடப்பட்டிருக்கிறது. உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​தொழில்நுட்பம், அறிவு, கைத்தொழில், கலாசாரம் என எல்லாவற்றிலும் பின்தங்கியே இருக்கிறோம். கடந்த நூற்றாண்டை நம் நாட்டு மக்களுக்கு விரைவில் மீட்டுத் தருவோம். நம் நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமானது. ஒரு சதுர கிலோமீட்டரில் சராசரியாக 335 பேர் அளவில் உள்ளனர். உலகில் வளர்ந்த நாடுகளில் கூட இதைவிட குறைந்த அளவினரே உள்ளனர். நமது நாட்டின் மிக முக்கியமான வளங்களில் ஒன்றான மனிதவளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். மனித வள மேம்பாட்டில் கல்வி முக்கியமானது. நம் நாட்டில் காலாவதியான கல்வி முறையே உள்ளது. பாரம்பரிய கல்வி முறையில் தேர்வுக் கல்வி முறையே உள்ளது. விஸ்தரிக்கப்பட்ட தொழில் வாய்ப்புக்களுக்கு சரியான தொழில் வல்லுநர்களைக் கட்டியெழுப்பும் கல்வி முறைமைக்கு செல்வது அவசியம் என்ற கருத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தால் சில காலமாக பேசப்பட்டு வருகிறது. தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கைகள் நமது நாட்டின் மனித வளத்தை தொழில் வல்லுனர்களாக மாற்றி இலங்கையிலும் உலகிலும் வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டவும், நல்ல குடிமக்களை உருவாக்கவும், நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பைப் பெறவும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்காக சில காலம் அரசியல் இயக்கமாக நாம் செய்த தியாகத்தின் பலனாக புதிய அரசாங்கத்தை அமைக்க முடிந்துள்ளது.

ேகள்வி அரசியல் நீரோட்டத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும், நீங்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக வெற்றி பெறுவதற்கு களமிறங்கியுள்ளீர்கள். இந்தத் தெரிவு. மற்றும் தேசிய மக்கள் சக்தி மீதான உங்கள் நம்பிக்கையை விளக்கினால்?

பதில்: பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியானவை. பெயர்ப் பலகையே மாறுபடும். ஆனால் அது ஏப்ரல் 12, 2022 அன்று தெரிந்தது. கொண்டு வரப்பட்ட அரசியல் கொள்கைகள் இலங்கையை முழுமையாக தோற்கடித்த நாடாக மாற்றியதுடன், உலகின் முன்னால் தோற்கடிக்கப்பட்ட நாடாக இலங்கையை மாற்றியது. கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்ததன், விளைவை காணக்கூடியதாக இருந்தது. உலகின் நவீன தயாரிப்புகள், தொழில்நுட்பம் நோக்கிச் செல்லும் பாதையை வகுத்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி என்பது, பாரம்பரியமான அரசியலிலிருந்து விலகிய பார்வையுடன் செயல்படும் ஒரு இயக்கம் என்பதால், இது சரியான தேர்வு என்று நாங்கள் நினைக்கிறோம்.

கேள்வி: பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலிஎலையை பிரதிநிதித்துவப்படுத்தியே இந்தத் தேர்தலுக்கு வருகிறீர்கள். கடந்த காலங்களில், பல்வேறு அரசியல் வாக்குறுதிகளால் அந்தப் பிரதேசங்களின் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர். உங்கள் அரசின் நிர்வாகத்தில் தோட்ட மக்களுக்கு உங்களால் நியாயத்தை நிலைநாட்ட முடியுமா?

பதில்: ஹாலிஎல ஆசனத்தை எடுத்துக் கொண்டால், சனத்தொகையில் சுமார் 35 வீதமானவர்கள் பெருந்தோட்ட சமூகத்தினர், ஆரம்ப காலத்தில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தோட்டங்களில் வேலை செய்தவர்கள். இளம் தலைமுறையினர் இவற்றை கைவிட்டுவிட்டனர். 201 ஆண்டுகளுக்கு முன், அவர்களின் முன்னோர்கள் வந்து, காடுகள் நிறைந்த நிலத்தை விளைநிலமாக மாற்றியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தோட்டங்களில் ஒரு அங்குல நிலம் கூட சொந்தமாக இல்லை. அவர்கள் லைன் அறைகளுக்குள் மிகவும் பரிதாபமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். மிகவும். இவர்களுக்கு வாழ்வதற்கு மிகவும் போதிய ஊதியம் கிடைப்பதில்லை. மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும். இதுவரை அவர்களுக்கு சிறு சலுகைகளை கொடுத்து வாக்குகளை பெற்று வந்தனர். அந்த சகாப்தத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​பாரம்பரிய அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டுக்கு ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தை முன்வைத்தமை, தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வழிவகுத்த முக்கியமான விடயங்களில் ஒன்றாகும். எதிர்காலத்தில் அந்த நம்பிக்கையை அரசாங்கம் காப்பாற்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: அரசியல் இயக்கமாக ஏனைய அரசியல் கட்சிகளிலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள். இதன் சிறப்பு என்னவெனில், தனிமனித வீரம் மற்றும் தனிமனித திறன்களை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் நாமல்ல. நாம் ஒரு கட்சியாக, கட்சியைச் சுற்றி திரண்ட முற்போக்குவாதிகள் நாங்கள். பெருமளவான மக்கள் பங்குதாரர்களாக மாறியுள்ளார்கள். நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உண்மையான நாட்டம் கொண்ட ஒரு குழுவின் செயற்பாடுகளிலேயே எமது தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களை இந்நாட்டு மக்களிடமிருந்து அகற்றிய மகிழ்ச்சியையும் பொருளாதார சுதந்திரத்தையும் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தியாக எமக்கு திறமை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதற்கு நாங்கள் தனி நபராக அல்லாமல் கட்சியாகச் செயல்படுவதே காரணம்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய அனுபவமிக்க அணி தேசிய மக்கள் சக்தியுடன் இல்லையென பல்வேறு குழுக்கள் அரசியல் மேடைகளில் புகார் செய்கின்றன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: அனுபவம் வாய்ந்த தலைவர்கள் என்று கூறிக் கொண்டவர்கள்தான் 76 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தனர். உலகிலேயே கடைசியாக, கடனை அடைக்க முடியாமல் வங்குரோத்தான அரசாக தங்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அவர்களின் திறமையும், அனுபவமும், நாட்டை திவாலாக்கும் திசையை அவர்களுக்கு தெளிவாகக் காட்டியுள்ளது. நமது நாட்டில் ஊழல்வாதிகளும், படிக்காதவர்களும் சேர்ந்து ஆட்சி செய்த அரசு இருந்தது. ஊவா மாகாண முன்னாள் கல்வி அமைச்சருக்கு சாதாரணதர கல்வி கூட இல்லை. இதன் விளைவாக ஊவா மாகாணம் நாட்டின் வறுமையான மாவட்டமாக உள்ளது. நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் ஊவா மாகாணத்தின் பங்களிப்பு 4 வீதம் வரை குறைந்தது. அத்தகையவர்களே ஆட்சி செய்தனர். ஊழல், திருட்டில் அனுபவம் உள்ளவர்கள் எங்களிடம் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். உழைக்கும், அறிவார்ந்த, படித்த, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு குழு எங்களுடன் உள்ளது. கடந்த ஆட்சியில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 155 பேர் செய்த நிர்வாகத்தை மாகாண சபைகள், பிராந்திய சபைகள், பாராளுமன்றம் என எதுவும் இல்லாமல் மூன்று பேருடன் எந்தப் பிரச்சினையும் இன்றி நடத்தி வருகின்றனர்.

நெத்மி பூஜனி ரத்நாயக்க தமிழில் வீ.ஆர். வயலட்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division