Home » காலாவதியாகும் பிராந்திய அரசியல்?

காலாவதியாகும் பிராந்திய அரசியல்?

அதனை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்வது என்பது பற்றியே சிந்திக்க வேண்டும்

by Damith Pushpika
November 10, 2024 6:00 am 0 comment

பிராந்திய அரசியலின் காலம் முடியப்போகிறதா?‘ என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அநுர குமார திசாநாயக்கவின் புதிய வசீகரமும்.

2. பிராந்திய அரசியலை முன்னெடுத்த தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகளின் தவறுகள், பலவீனங்களும்.

3. உட்பிராந்திய அரசியற் சக்திகளைப் பேணி வளர்க்கும் வெளிப்பிராந்திய சக்திகளின் அணுகுமுறைத் தவறுகளும், அணுகுமுறை மாற்றங்களும்

மேற்படி மூன்று பிரதான காரணிகள் பிராந்திய அரசியலையும் அவற்றை முன்னெடுத்த சக்திகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. முதலில் பிராந்திய அரசியலைக் குறித்த ஒரு சிறிய விளக்கத்தைப் பார்க்கலாம்.

இலங்கையில் பிராந்திய அரசியல் என்பது சமூகங்களின் அடையாளத்தோடும் அவற்றின் வாழிடம் என்ற அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

இதை நாம் –

அ) சமூகப் பிராந்தியம்

ஆ) வாழிடப் பிராந்தியம் (புவியியற் பிராந்தியம்)

என வரையறுத்துக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் சமூகப் பிராந்தியமாகத் திரட்சியடைகிறார்கள். அவர்களுடைய அரசியற் திரட்சி என்பது சமூக அடிப்படையிலேயே நிகழ்ந்திருக்கிறது; நிகழ்கிறது. அவ்வாறே, முஸ்லிம்களும் மலைய மக்களும் அந்தந்தச் சமூகப் பிராந்தியமாகத் திரட்சியடைந்து தமது அரசியலை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்; வருகின்றனர். ஏன் சிங்கள மக்களும் கூடப் பிராந்திய அரசியலையே மேற்கொள்கிறார்கள். மாறியும் ஒரு சமூகப் பிராந்தியம் இன்னோர் சமூகப் பிராந்தியத்திற்கு ஆதரவளிப்பதே இல்லை.

என்பதால் இதை நாம் சமூகப் பிராந்தியமாகக் கொள்ள வேண்டும்.

இதை மேலும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், தமிழ் அரசியல், முஸ்லிம் அரசியல், மலையக அரசியல் என்பதெல்லாம் அந்தந்தச் சமூகப் பிராந்தியங்களின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன என்பதைக் கவனித்தால் தெரியும்.

இதேவேளை இந்தச் சமூகங்கள் தங்களுடைய வாழிடங்களின் அடிப்படையிலும் பிராந்தியப்பட்டிருக்கின்றன. தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ், முஸ்லிம் பிராந்தியங்களாக உள்ளன. இன்னொரு தொகுதித் தமிழ் மக்கள் மலையகத்தில் வாழ்வதால், அவர்கள் மலையகப் பிராந்திய மக்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறான பிராந்திய அரசியலுக்குப் பிரதான காரணமாக இருந்ததும் இருப்பதும் இலங்கையின் இனப்பாரபட்சமும் இனவாதமுமே. முக்கியமாக இனவாத அடிப்படையிலான அரசாட்சி முறையாகும். அதுவே பிராந்திய உளவியலை உருவாக்கியது. அதுவே பின்னர் வளர்ச்சியடைந்து வேறு தரப்புகளின் அரசியற் காரணங்களையும் இணைத்துச் சமூகப் பிராந்தியங்களாக வளர்ச்சியடைந்தது.

இந்தப் பிராந்தியவாதமே வளர்ச்சியடைந்து தேசியவாதமாகியது. தேசியவாதம் என்பது இனவாதத்தின் நேரடி எதிர்விளைவேயாகும்.

இலங்கையின் அரசியல் நடைமுறைகளிலும் கோட்பாட்டிலும் தேர்தல்களிலும் இந்தப் பிராந்தியத் தாக்கமே செல்வாக்குச் செலுத்துகின்றது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இது இன்னும் பெரிய வளர்ச்சியைக் கண்டது.

இந்தப் பிராந்திய அரசியலின் – சமூக மட்ட அல்ல இனக்குழும அரசியலின் – விளைவினால் உலகளாவிய விரிந்த சிந்தனைப் போக்கையும் புதிய நடைமுறைகளையும் புரிந்து கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது. உலகளாவிய விரிந்த சிந்தனைப் போக்கையும் புதிய நடைமுறைகளையும் புரிந்து கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்படும்போது, மக்கள் துருவமயப்பட வேண்டியதாயிற்று. இந்தத் துருவ மயப்படுதல் பிற சமூகத்தினரை எதிர்நிலையில் வைத்துப் பார்க்கும் ஒரு சூழலை உருவாக்கியது.

இதனை தமக்கான அரசியல் மூலதனமாக்கிக் கொண்டன பிராந்திய அரசியலை மேற்கொண்ட சக்திகள். இது அனைத்துச் சமூகங்களிலும் நடந்தது. சில சமூகங்களில் தூக்கலாகவும் சில சமூகங்களில் வரையறுக்கப்பட்ட அளவிலும் நடந்தது. குறிப்பாக தமிழ், சிங்களச் சமூகங்களில் தூக்கலாக இருந்தது. அதிலும் தமிழ்ச்சமூகத்தில் இது உச்சநிலைப்பட்டது.

இப்போது உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழல் அல்லது தற்போதைய அரசியல் நிலையானது, பிராந்திய அரசியலைத் தொடர முடியுமா? அதற்கு இடமுண்டா? என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

காரணம், தேசிய மக்கள் சக்தியானது, இலங்கைத் தீவில் மாற்றமொன்றுக்கான அரசாட்சியை வழங்குவதற்கு முன்வந்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதாகும். இன்னும் பாராளுமன்ற அதிகாரம் கிடைக்காது விட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசநாயக்க பெற்றிருக்கும் வெற்றியும் NPP யின் எழுச்சியும் மாற்றம் பற்றிய அடையாளச் சமிக்ஞையைக் காட்டியிருப்பது புதிய அரசியல் உணர்வலையை நாடு முழுவதிலும் உண்டாக்கியுள்ளது. இந்தப் புதிய அரசியல் உணர்வலை பிராந்தியச் சூழலிலும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது. அதனை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தெளிவாக உணரலாம்.

இதுவொரு வகையான பிராந்திய அரசியல் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது என்றால், அடுத்ததாக, பிராந்திய அரசியலை முன்னெடுத்து வந்த அரசியற் சக்திகளின் பலவீனம் பிராந்திய அரசியலைப் பலவீனப்படுத்துவதாக அமைந்துள்ளது.

உதாரணமாக, தமிழ்ப் பிராந்திய அரசியலானது, அவற்றை முன்னெடுத்த தமிழ்த்தேசியவாத அரசியற் சக்திகளால் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்த்தேசியவாத அரசியலைத் தலைமைதாங்கி முன்னெடுத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உடைவு தமிழ்ப் பிராந்திய அரசியலைக் குறித்து மக்களிடம் நம்பிக்கையீனத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ்த்தேசியவாத அரசியற் சக்திகள் உடைந்து பல கூறுகளாக நிற்பது சலிப்பையும் வெறுப்பையும் உண்டாக்கியிருக்கிறது. இதில் ஒவ்வொரு கட்சியும் சில பிரதிநிதிகளைப் பெறலாம். அப்படிப் பெற்றாலும் அவற்றினால் பிராந்தியத் திரட்சியை உறுதிப்படுத்தவும் முடியாது. அதை வலுவாக வெளிப்படுத்தவும் முடியாது.

உதாரணமாக சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டு தடவை பிராந்திய அரசியலை முன்னெடுத்த தமிழர் தரப்பு எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறது. தனியே வடக்குக் கிழக்கில் அதுவும் தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் பெற்று எதிர்க்கட்சி ஆசனத்தைக் கைப்பற்றியது. இது மிக முக்கியமான ஒரு கவனச் சேதியாகும். அப்படியானதொரு நிலை இன்றைய சூழலில் எந்தப் பிராந்திய அரசியற் தரப்புக்கும் கிடைக்கப்போவதில்லை. இது தொடருமாக இருந்தால் ஒரு போதும் அப்படியான இடத்தை எந்தப் பிராந்திய அரசியற் சக்திகளும் தொடவே முடியாது. மட்டுமல்ல, பிராந்திய அரசியற் தேவைகளையோ குரலையோ குறித்து பேசவும் முடியாத சூழல் ஏற்பட்டு விடும்.

இந்த வீழ்ச்சி தனியே தமிழ்த்தரப்புக்கு மட்டும் நேர்ந்ததல்ல. முஸ்லிம் பிராந்தியம், மலையகப் பிராந்தியம் போன்றவற்றுக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆக மொத்தத்தில் பிராந்திய அரசியற் தரப்புகள் மிகப் பின்னடைவையே சந்தித்துள்ளன. இது எதிர்காலத்தில் ஒற்றைப் பிராந்தியமாக மேலெழுமா அல்லது பன்மைத்துவத்துக்கும் பல்லினத்தன்மைக்கும் இடமளித்துப் புதிய கூட்டுப் பிராந்தியம் ஒன்றை உருவாக்குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஆனாலும் இதுவரையில் அதற்கான உத்தரவாதங்களோ அடையாளங்களோ இல்லை.

அப்படியென்றால் பிராந்திய அரசியலை – பிரிவினை அரசியலை தொடர வேண்டுமா? அதை ஊக்குவிப்பது சரியா என்ற கேள்விகள் எழலாம். அதைத் தீர்மானிப்பது, ஆட்சித் தரப்பின் செயற்பாடுகளேயாகும். கடந்த காலத் தவறுகள் – இனவாத முன்னெடுப்புகள்தான் தொடர்ந்தும் நிகழுமாக இருந்தால், பிராந்திய அரசியலின் தொடர்ச்சியும் மீளெழுச்சியும் நிகழும்.

ஆக இப்போது பிராந்திய அரசியலை முன்னெடுத்த சக்திகளின் கூட்டுத் தவறுகள் அந்த அரசியலைப் பலவீனப்படுத்தி, தேசிய அரசியலுக்கான இடத்தை வழங்கியிருக்கிறது என்பது உண்மை. ஏனெனில் பிராந்திய அரசியல் பலவீனமடையும்போது இலங்கைத் தேசிய அரசியலே எழுச்சியடையும். இதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சியை நாம் சற்றுப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்ததாக, உட்பிராந்திய அரசியற் சக்திகளைப் பேணி வளர்க்கும் வெளிப்பிராந்திய சக்திகளின் (குறிப்பாக இந்தியா மற்றும் சீனா) அணுகுமுறைத் தவறுகளும் இவற்றின் அணுகுமுறை மாற்றங்களும் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளாகும். தமிழ்ப் பிராந்திய அரசியலை ஊக்குவித்து வளர்த்ததில் இந்தியாவின் பங்கு பெரியது. ஆனால், அதை இனியும் இந்தப் புதிய சூழலில் எப்படி இந்தியா தொடர்ப்போகிறது? எப்படிக் கையாளப்போகிறது என்பது புதிய வாசிப்புக்குரியதாகும்.

கொழும்பின் புதிய ஆட்சிச் சூழலை எதிர்கொள்வதிலிருந்தே தமிழ்ப் பிராந்திய அரசியலை இந்தியா எப்படிக் கையாளும், அதற்கான மூலோாய – தந்திரோபாயக் கொள்கையை எப்படி வகுத்துக் கொள்ளும் என்பதைப் பற்றி அறிய முடியும். குறிப்பாக NPP யின் மாற்றத்துக்கான அரசியற் தன்மை (விளைவுகள்) தான் இதைத் தீர்மானிக்கப்போகிறது.

இதனுடைய மறுபக்கமாகவே சர்வதேச சமூகம் என்ற மேற்குலகினதும் (அமெரிக்கா, ஐரோப்பா) யப்பான், அவுஸ்திரேலியா போன்றவற்றினதும் அணுகுமுறைகளிருக்கும். பிராந்திய அரசியலில் இவற்றின் செல்வாக்கு வரையறுக்கப்பட்டது என்பதால் நேரடியான தாக்கங்களை எதிர்பார்க்காது விட்டாலும், பிராந்திய அரசியற் தொடர்ச்சிக்கு இவற்றின் ஊக்க விசை ஒரு எல்லை வரை உண்டு என்பதையும் மறுக்க முடியாது. ஆகவே இவையும் கொழும்பின் அசைவைப் பொறுத்தே தமது அணுகுமுறையைக் காட்டும். இவ்வாறான பின்னணியில் தற்போது பலவீனப்பட்டிருக்கும் பிராந்திய அரசியலை புதிய சூழலுக்கு ஏற்றவாறு எப்படி மாற்றியமைத்துக் கொள்வது என்று சிந்திக்க வேண்டும். தேசிய அரசியலுடன் சமனிலைப்படுத்துவதோ எதிர்நிலைப்படுத்துவதோ எதுவாக இருந்தாலும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். பிராந்திய அரசியலாளர்களுக்கு இதொரு சோதனைக் காலமும் சோதனைக் கட்டமுமே.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division