Home » இலக்கிய உலகை கவலைக்கு உள்ளாக்கிய மு. பொ.வின் மறைவு

இலக்கிய உலகை கவலைக்கு உள்ளாக்கிய மு. பொ.வின் மறைவு

by Damith Pushpika
November 10, 2024 6:00 am 0 comment

மு.பொ. என்று அழைக்கப்படும் பிரபல எழுத்தாளரான மு.பொன்னம்பலம் 11-07- – 2024 திங்கட்கிழமை அமரரானார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட மு. பொ, முருகேசு, மாரிமுத்து (சின்னத்தங்கம்) தம்பதிக்கு 26-08- – 1939அன்று மகனாகப் பிறந்தார். மு.தளையசிங்கம் இவரது மூத்த சகோதரர். பராசக்தி இவர்கள் இருவருக்கும் மூத்த சகோதரி ஆவார்.

கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் ஆகிய துறைகளில் கடந்த ஆறு தசாப்தங்களாக எழுதிவந்த மு.பொ., ஆரம்பக் கல்வியை தனது கிராமத்தில் உள்ள சண்முகநாதன் வித்தியாசாலையிலும் பின்னர் இரத்தினபுரியில் உள்ள சென்ற் லூக்ஸ் கல்லூரியிலும் பயின்று உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

மு.பொ.வின் இலக்கியப் பிரவேசத்தை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது காலகட்டம் 1950 களில் ஆரம்பிக்கிறது. இவரது பாடசாலைக் காலத்தில் இலக்கிய இரசனையை ஊட்டியவர் இவருக்குக் கம்பராமாயணம் படிப்பித்த அல்வாய் கந்தசாமி ஆசிரியராவார். மு.பொ. அப்போது சிறுவர் கவிதைகளை எழுதினார். 1958இல் தினகரன் சிறுவர் பகுதியில் வெளியான ‘மழையும் வெயிலும்’ என்ற படைப்பே இவரது முதற் படைப்பாகும். இக்காலங்களில் ‘தீவான்’ என்ற புனைபெயரில் சுதந்திரன், வீரகேசரி ஆகியவற்றில் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவரது இரண்டாவது இலக்கிய காலகட்டம், 1960களில் ஆரம்பமாகியது. இவரது தந்தையார் இரத்தினபுரியில் வர்த்தகராக இருந்த காரணத்தினால், இவர் அங்கு தனது தமையன் மு.தளையசிங்கத்துடன் வாழநேரிட்டது. அங்கு இயங்கிய புத்திஜீவிகள் சங்கம் என்று சொல்லக்கூடிய ஓர் அமைப்பில் இவரும் மு.த.வும் தங்களை இணைத்துக்கொண்டனர். அந்த அமைப்பில் அனேகமானோர் இடதுசாரிகளாக இருந்தனர். அங்கு இலக்கியம், அரசியல் தொடர்பான பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன. அத்தோடு களுகங்கை ஆற்றங்கரையில் இருந்த மு.த.வின் அறையிலும் நண்பர்கள் கூடி பலதரப்பட்ட இலக்கிய விடயங்களைப் பேசினர். இந்த அமைப்பில் சிங்கள, முஸ்லிம் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இருந்தனர். மு.பொ.வும் மு.த.வும் மட்டுமே தமிழர்கள். இந்தத் தொடர்புகள் காரணமாக இவருக்கு மேல்நாட்டு இலக்கியங்கள் பற்றியும் சிங்கள இலக்கியங்கள் பற்றிய ஓரளவு அறிவும் ஏற்பட்டன. இவற்றின் பின்னணியில் இவர் எழுதிய ‘அரைநாள் பொழுது’, ‘ஒரு நாள்பொழுது’ ஆகிய சிறுகதைகள் அக்காலத்தில் பெரும் கணிப்புக்கு உள்ளாகின.

இவரது சகோதரரான மு.தளையசிங்கத்தின் ‘மெய்முதல் வாத’ கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் இவர், அதனை இன்றைய காலத்திற்கேற்ப மேலும் வளர்த்துக் காட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டுவந்தார்.

இவரது படைப்புகள் பலவும் தென்புலம், – வடபுலம் சார்ந்து வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மரபுக்கவிதை எழுதுவதில் ஆர்வம்காட்டிய மு.பொ., அறுபதுகளின் பிற்பகுதியில் இருந்து புதுக்கவிதை எழுதத் தொடங்கினார். இவரது முதலாவது கவிதைத் தொகுதி ‘அது’ 1968இல் வெளியாகியது. இவரது ஏனைய கவிதைத் தொகுதிகளாக, ‘விலங்கை விட்டெழும் மனிதர்கள்’ (1989) ‘விடுதலையும் புதிய எல்லைகளும்’ (1990), ‘காலி லீலை’ (1997), ‘பொறியில் அகப்பட்ட தேசம்’ (2002) ‘சூத்திரர் வருகை’ (2003) ‘கவிதையில் துடிக்கும் காலம்’ (2009), ‘குந்திசேத்திரத்தின் குரல்’ (2017); என்பன வெளிவந்துள்ளன. ‘கவிதையில் துடிக்கும் காலம்’ கவிதைத் தொகுதி அவ்வாண்டின் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது.

2002இல் ‘பொறியில் அகப்பட்டதேசம்’ வெளிவந்த காலத்தில் அக்கவிதைத் தொகுதி பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும் உள்ளாகியது. காலனித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலான இவ்வரசியல் கவிதை 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் நடந்த விமானத் தற்கொலைத் தாக்குதல் ஏற்படுத்திய சர்வதேச அதிர்ச்சியின் கிளர்ச்சியாகவும் அமைந்தது. காலம் காலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்ளோடியிருந்த உலகின் கண்டனப் பார்வை இங்கு இலக்கிய வெளிப்பாடாகியுள்ளது. அதேவேளை இதே அமெரிக்காவே முற்போக்குச் சக்திகளின் உருவாக்கத்திற்கும் அவற்றின் போராட்டத்திற்கும் விளைநிலமாக இருந்திருக்கின்ற அத்தகைய போக்கும் இங்கே அவிழ்கின்றது. சர்வதேசியமாய் விரிந்த தமிழ்க்கவிதைப் பரப்பை இக்கவிதை கொண்டுள்ளது. இக்கவிதை ஏ. ஜே.கனகரட்னாவால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டது. அத்துடன் மு.பொ. ஆங்கிலத்தில் எழுதிய இன்னொரு நீண்ட கவிதையும் மகுடத்தில் இத் தொகுப்பில் அடங்கியுள்ளது.

‘ஊஞ்சல் ஆடுவோம்’ (2001) ‘நீர்க்கோலம்’ என்பன மு.பொ. எழுதிய சிறுவர் ஆக்கங்களாகும். இவரது சிறுகதைத் தொகுதிகளாக ‘கடலும் கரையும்’, ‘முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை’ என்பன வெளிவந்துள்ளன.

இத் தொகுப்புகள் பெரும்பாலும் ஈழத் தமிழர் போராட்டம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியுமே பேசியுள்ளன. ஈழத்துச் சிறுகதை வரலாறு பற்றி எழுதிய செங்கை ஆழியான் அந்நூலில் தமிழ் தேசிய உணர்வு காலகட்டக் கதைகளை ஆராயும்போது, ‘ஏனைய சிறுகதை ஆசிரியர்களிலிருந்து மு.பொன்னம்பலம் விலகி ஒரு தனிப்போக்கைக் கொண்டுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது ‘கடலும் கரையும்’ என்ற சிறுகதைத் தொகுதி வடக்கு கிழக்கு மாகாண விருதினைப் பெற்றுக் கொண்டது.

மு.பொ. 1967இல் இருந்து 2001வரை தனது கிராமமான புங்குடுதீவில் இருந்தார். அங்கு சர்வமத அலுவல்களில் முழுநேர ஊழியராகக் கடமையாற்றினார். தீவுப்பகுதியை இராணுவம் கைப்பற்றியபோதும் பலர் இடம்பெயர்ந்து சென்றபோதும் 1991இல் அக்கிராமத்தில் ஒரு சிலருடன் தங்கி அங்குள்ளவர்களுக்குத் தன்னாலான சேவைகளைச் செய்தார். அக்கால நிகழ்ச்சிகள் சிலவற்றை அவருடைய சிறுகதையான ‘கைது செய்யப்பட்ட கிராமம்’ என்ற சிறுகதையில் பதிவு செய்துள்ளார். அச்சிறுகதை ‘முடிந்துபோன தசையாடல் பற்றிய கதைத் தொகுதியில் அடங்கியுள்ளது.

மு.பொ.வின் நாவல்களாக ‘நோயில் இருத்தல்’ (1999), ‘சங்கிலியன்தரை’ (2016) ஆகியவை வெளிவந்துள்ளன. ‘நோயில் இருத்தல்’ அவ்வாண்டுக்கான தேசிய சாகித்திய விருதினைப் பெற்றது.

‘நோயில் இருத்தல்’ நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதலாம் பாகம் 1984இல் மயிலிட்டிக் கிராமத்தில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் மு.பொ. மூன்று மாதம் தங்கியிருந்து சிகிச்சைபெற்ற காலத்தில் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள், ஆசிரியரது உள்மன யாத்திரை, தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருத்தல், உலகியல் நிகழ்வுகள் போன்றவற்றைப் பேசுகிறது.

இரண்டாம் பாகத்தில், இவரது சகோதரர் மு.தளையசிங்கத்தின் ஆன்மிகச் செயற்பாடுகள், அவரது இறந்த தருணம் போன்றவற்றை விபரிக்கிறது. இக்காலத்தில் மு.பொ. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்தார். அக்காலத்திலேதான் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகள் உக்கிரமடைந்தன.

இந்நாவல் 80களுக்குப் பின்பு ஏற்பட்ட ஈழத்து சமகால அரசியல் நிலைமைகள் பற்றியும் இலங்கை இராணுவம் மற்றும் இயக்க நடவடிக்கைகள் பற்றியும் விபரிக்கிறது.

‘நோயில் இருத்தல்’ கதாநாயகனின் நோயை மட்டுமல்ல, இது எங்கள் தேசத்தின் நோய் என்பதையும் குறியீடாக இந்நாவல் பேசுகிறது. மு.பொ.வின் விமர்சன நூல்கள் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ (1992), ‘திறனாய்வு சார்ந்த பார்வைகள்’ (2000), ‘திறனாய்வின் புதிய திசைகள்’ (2011) ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. இவற்றுள் ‘திறனாய்வின் புதிய திசைகள்’ நூலுக்கு மலேசியா ‘தான்ஸ்ரீ’ சோமசுந்தரம் கலை இலக்கிய அறிவாரியம் 2010 – 2011 ஆண்டுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்குள் சிறந்த நூலுக்கான பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கிக் கௌரவித்தது.

இவரது மொழிபெயர்ப்பு நூல்களாக ‘பேரிடர்களை பெரு வாய்ப்புகளாக மாற்றுதல்’ (மருத்துவமும் நலவழியியலும் தொடர்பான நூல்), கம்லா பஹாசின் ‘ஆண்நிலை இயல்பு பற்றிய ஆழமான தேடல்’ (சமூகவியல்) ஆகியவை வெளியாகியுள்ளன. இவற்றைவிட இவர் எட்டு ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்.

இவர் மொழிபெயர்த்த குமாரி ஜெயவர்த்தனாவின் நூல் ‘ஓயாத கிளர்ச்சி அலைகள்’ மொழிபெயர்ப்புக்கான அரச தேசிய சாஹித்திய விருதைப் பெற்றது.

மு.பொ. 1970- – 1971 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ‘சத்தியம்’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். அப்பத்திரிகை புங்குடுதீவில் இயங்கிய சர்வோதயம்- சர்வமதசங்கம் ஆகியவற்றையும் ஈழத்து அரசியல், இலக்கியம் ஆகியவற்றையும் நெறிப்படுத்துவதாக அமைந்தது. மு.தளையசிங்கம் அதில் அரசியல், வரலாற்றுக் கட்டுரைகளை எழுதினார்.

‘பூரணி’ சஞ்சிகை வெளியீட்டிலும் மு.பொ.வின் பங்களிப்பு இருந்தது. 1989 தை முதல் 1990 வைகாசி வரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘திசை’ என்ற பத்திரிகைக்கும் மு.பொ. ஆசிரியராக இருந்துள்ளார். அப்போது அதன் உதவி ஆசிரியராகச் செயற்பட்டவர் அ.யேசுராசா.

மு.பொ. பாடசாலை ஆசிரியராகத் தொழில் புரிந்தவர், மு.பொ.வின் மனைவி பெயர் செல்வநாயகி (உமா). மு. பொ. தம்பதிக்கு பிள்ளைகள் கிருபாகரன், யசோதா, டாக்டர் மனோகரன், டாக்டர் துளசி ஆகிய நால்வர் ஆவர்.ஞானம் சஞ்சிகையில் இவர் ‘மு.பொ.பக்கம்’ என்ற தொடர் பத்தியை எழுதியதோடு சிறுகதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார்.

ஈழத்துப்போர் இலக்கியம் தொடர்பாக இவருடனான கருத்தாடல் ஞானம் போர் இலக்கியச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது.

ஞானம் சஞ்சிகைக்கு இவர் அளித்த நேர்காணல் ஞானம் 196வது இதழில் வெளியாகியுள்ளது,

மு.பொ.வின் இலக்கியப் பணிகளைக் கௌரவிக்கும் முகமாக தெற்காசியாவின் ‘Library of Congress’ என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவராக 2002இல் இவரைக் கௌரவித்தது.

அத்தோடு லண்டன், சுவிஸ், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் தமிழ் இலக்கிய அமைப்புக்களால் இவர் கௌரவிக்கப்பட்டார்.

2010இல் தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) கௌரவித்தது.

அதே ஆண்டில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கவிதைத்துறை சார்ந்த நிகழ்வில் ஒரு அரங்கத்துக்கு இவர் தலைமை வகித்ததோடு கௌரவமும் பெற்றார்.

2010இல் கனடாவில் வெளிவரும் ‘காலம்’ இதழ் இவரைக் கௌரவிக்கும் வகையில் மு.பொ. சிறப்பிதழை வெளியிட்டது.

2010இல் வடக்கு, கிழக்கு, மாகாண சபை ஆளுநர் விருது வழங்கிக் கௌரவித்தது.

2016இல் தெவளை நகரசபை இவரது பணிகளைப் பாராட்டிக் கௌரவித்தது.

2016இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் உபுல் திஸாநாயக்கவால் கௌரவிக்கப்பட்டார்.

2018ஆம் ஆண்டுடில் அரச உயர் இலக்கிய விருதான ‘சாகித்திய ரத்னா’ விருதினைப் பெற்றார்

29-06- – 2024 அன்று கொழும்புத் தமிழ் சங்கம் நடத்திய தமிழ்க்கற்கை நெறியின் 8 ஆவது விருது விழாவில், மு.பொ. தமிழ்நிதி விருது வழங்கிக் கௌவிக்கப்பட்டார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division