Home » இருக்கை வீரர்கள்

இருக்கை வீரர்கள்

by Damith Pushpika
November 10, 2024 6:00 am 0 comment

மேற்கிந்திய தீவுகள் சென்ற பின்னர் சொந்த மண்ணில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இலங்கை. ஏற்கனவே இலங்கையில் டெஸ்ட் தொடரை 0–2 முழுமையாகத் தோற்றுவிட்டு இந்தியாவுக்குப் போன நியூசிலாந்து அணி அங்கே இந்திய அணியை யாரும் எதிர்பார்க்காத வகையில் 3–0 என தொடரை முழுமையாக வென்றுவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி இருக்கிறது.

இலங்கை இரண்டு போட்டிகளைக் கொண்ட T20 தொடர் மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்தியாவை வீழ்த்திய உற்சாகம் நியூசிலாந்திடம் இருக்க தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருவதால் இலங்கைக்கு பிரத்தியேக தைரியம் வந்துவிட்டது.

இதனால் தான் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய அதே T20 அணியுடனும், ஒருநாள் அணியில் பெரிதாக மாற்றம் இன்றியும் நியூசிலாந்தை எதிர்க்கப் புறப்பட்டது. எனவே இலங்கை அணியின் கட்டமைப்பு மற்றும் மூலோபாயங்கள் பற்றி பெரிதாக ஆராயத் தேவையில்லை… பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் எல்லோருமே நன்றாக சோபித்து வரும் நிலையிலேயே நியூசிலாந்து தொடர் வந்திருப்பதால் வெற்றிகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகம்.

அதுவல்ல விடயம், வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷிராஸ், முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமால் போன்ற வீரர்கள் தொடர்ந்து குழாத்தில் இடம்பெறுகிறார்கள். ஆனால் போட்டியின்போது அவர்களை இருக்கையில் மாத்திரம் தான் காண முடிகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் குழாத்திலும் 29 வயது ஷிராஸ் இடம்பெற்றிருப்பதோடு T20 குழாத்தில் சந்திமால் இடம்பெற்றார். இந்த இருவருமே கடந்த மேற்கிந்திய தீவுகள் தொடரிலும் இலங்கை அணியில் இடம்பெற்றார்கள், ஆனால் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கிட்டவில்லை.

இலங்கை ஆடும் ஒருநாள் தொடரிலேயே ஷிராஸ் அணிக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் இதுவரை ஆடியது ஒரே ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியில் தான். அதிலும் நான்கு ஓவர்கள் தான். தினேஷ் சந்திமாலின் நிலை இதனை விடவும் மோசம். அவர் இலங்கை T20 அணிக்கு அழைக்கப்படுவது இது மூன்றாவது முறை. ஆனால் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை (நேற்று (09) நடந்த இலங்கை – நியூசிலாந்து T20 போட்டி உள்ளடக்கப்படவில்லை).

இத்தனைக்கும் தினேஷ் சந்திமால் ஒரு காலத்தில் இலங்கை அணியின் நிரந்தர வீரராக இருந்தவர். அணித் தலைவராகக் கூட இருந்தவர். T20 அணியில் இடம்பெற்று வருவதற்று என்ன அவர் கடைசியாக இலங்கை அணிக்காக T20 போட்டி ஒன்றில் ஆடியது 2022 நவம்பரில்.

தினேஷ் சந்திமால் என்பவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவருக்கு சரிப்பட்டுவர மாட்டார் என்று பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான முன்னாள் தேர்வுக் குழுவால் ஓரங்கட்டப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர். திறமை அனுபவத்திற்கு வாய்ப்பு வழங்குவது என்று தற்போதைய உபுல் தரங்க தலைமையிலான தேர்வுக் குழுவினால் இழுத்துவரப்பட்ட வீரர்களில் சந்திமாலும் ஒருவர்.

உண்மையில் இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டில் சோபித்ததை அடுத்தே ஷிராஸ், சந்திமால் போன்ற வீரர்கள் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார். இப்போது அவர்கள் ஏன் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள் என்று மறந்து போகும் அளவுக்கு இருக்கையிலேயே காலத்தை கடத்துகிறார்கள்.

இந்த ஆண்டின் பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் சோபித்ததை அடுத்தே ஷிராஸுக்கு இலங்கை அணியில் வாய்ப்புக் கிட்டியது. கடந்த ஜூலை 30 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் பி.ஆர்.சி. அணிக்காக ஆடும் அவர் குருநாகல் அணிக்கு எதிராக 7 ஓவர்களில் 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவர் இலங்கை அணிக்கு முதல் முறை அழைக்கப்பட உடனடிக் காரணமாக இருந்தது.

இது ஏ தர மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் இருந்தது. இதற்கு சரியாக ஒரு நாளைக்குப் பின்னரே கடந்த ஓகஸ்ட் ஆரம்பத்தில் அவர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான அந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணிக்காக தனது கன்னி ஒருநாள் போட்டியில் ஆட ஷிராஸ் அழைக்கப்பட்டார். ஆனால் இந்தியாவின் பலமான துடுப்பாட்டத்திற்கு முன்னால் அவருக்கு நான்கு ஓவர்கள் தான் வீச முடிந்தது. அதற்குப் பின் இருக்கையில் வைக்கப்பட்டவர் இன்னும் எழுந்திருக்கவில்லை.

மறுபக்கம் தினேஷ் சந்திமால் கடந்த ஜூலையில் நடந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் சோபித்ததை அடுத்தே இலங்கை T20 அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு இலங்கை பதினொருவர் அணியில் பொருந்துவதற்கு இடம் இருக்கவில்லை. அணியில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டிருந்தன. ஆரம்ப வரிசையில் பத்தும் நிசங்க தொடக்கம் மத்திய வரிசையில் பானுக்க ரஜபக்ஷ வரை வெற்றிடம் இருக்கவில்லை.

அணி ஒன்று பலம்பெறும்போது இப்படியான நிலைமை வருவதுண்டு. அணியின் அனைத்து இடங்களிலும் பலமான வீரர்கள் உருவெடுக்கும்போதே அணியும் பலம்பெறும். இதனால் அணிக்குள் இடம்பெறுவதற்கு கடும் போட்டி ஏற்படுவதோடு சில திறமையான வீரர்கள் தமது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தைக் காணாமலேயே வெளியேறும் துரதிருஷ்டம் ஏற்படும்.

கிட்டத்தட்ட கடந்த ஒரு தசாப்தத்தில் இலங்கை அணிக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டதில்லை. வீரர்கள் ஏகத்திற்கு வந்துபோய் இருக்கிறார்கள். அணியில் நிரந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டவர்கள் சொற்பமே. இதனால் அணியும் பலவீனம் அடைந்திருந்தது. ஆனால் அதற்கு முந்தைய சூழலைப் பார்த்தால் இதற்கு முற்றாக முரணாக இருக்கும்.

சனத் ஜயசூரிய, முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா போன்ற வீரர்கள் தேசிய அணியில் உடும்புப் பிடியாக இருந்தபோது அணிக்குள் நுழைய முடியாமல் எத்தனை பேர் தமது கிரிக்கெட் வாழ்வை கைவிட்டிருப்பார்கள். மார்வன் அத்தபத்து போன்ற வீரர்கள் நீண்ட காலம் இருக்கையில் அமர்ந்துவிட்டுத்தான் அணிக்குள் நுழைந்தார்.

ருமேஷ் களுவிதாரன, ரொஷான் மஹானாம போன்ற வீரர்களை ஓரங்கட்ட முடிந்த பிரத்தியேக திறமை இருந்ததால் தான் இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை வீரர்களாக மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார போன்றவர்கள் முன்னேற முடிந்தது.

முத்தையா முரளிதரன் இருக்கும் வரை ரங்கன ஹேரத் அணியில் இடம் பிடிப்பதற்கு போராட வேண்டி இருந்தது. முரளியின் ஓய்வுக்குப் பின்னர் தனது 30 வயதைத் தாண்டிய ரங்கன இலங்கை அணியில் நிரந்தர இடம்பெற்றார். தனது 40 வயது வரை ஆடியே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி இடம் பிடித்து 400க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.

அதிலும் திலின கண்டம்பி, நவீட் நவாஸ் போன்ற வீரர்களுக்கு கடைசி வரை இலங்கை அணியில் நிரந்தர இடம் ஒன்றை பிடிக்க முடியாமல் போனது.

எனவே அணி ஒன்று பலம்பெறும்போது தனிப்பட்ட வீரர்களுக்கு இப்படியான துரதிருஷ்டங்கள் நிகழ்வதுண்டு. அது அணி என்ற வகையில் ஆரோக்கியமானது. இதற்கு அப்பால் ஒரு வீரர் அணியில் தனது இடத்தை தக்கவைப்பதற்கு பிரத்தியேக திறமையுடன் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும்.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division