Home » சட்டம், சமூகம், சமயத்துறைகளில் சேவையாற்றிவரும் சட்டத்தரணி திலகரெத்தினம் துஷ்யந்தன்

சட்டம், சமூகம், சமயத்துறைகளில் சேவையாற்றிவரும் சட்டத்தரணி திலகரெத்தினம் துஷ்யந்தன்

by Damith Pushpika
November 10, 2024 6:27 am 0 comment

திருகோணமலை தம்பலகாமம் எனும் ஊரில் குருகுல பூபாலசிங்கம் திலகரெத்தினம் என்பவருக்கும், திருமதி சமயேஸ்வரி திலகரெத்தினம் என்பவருக்கும் மகனாக 1979ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் திகதி துஷ்யந்தன் பிறந்தார். அவரது தந்தையாரான திலகரெத்தினம் ஆசிரியராக நிலாவெளி, கிண்ணியா, திருகோணமலை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்பித்ததுடன் பின்பு அதிபராக தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி பின்பு உதவிக் கல்விப்பணிப்பாளாராக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றினார். பின்பு அக் கல்வி வலயத்தில் வலயக் கல்விப்பணிப்பாளராகவும் பலவருடங்களாக பணியாற்றியுள்ளார். தாயாராகிய சமயேஸ்வரி திலகரெத்தினம் தம்பலகாமம், கிண்ணியா, திருகோணமலை நகரப்பகுதிகளில் பல பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றி அதன் பின்னர் சமூகக் கல்விப் பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

திலகரெத்தினம் துஷ்யந்தன் தம்பலகாமம் R.K.M சாரதா வித்தியாலயம், கிண்ணியா அல் அசா வித்தியாலயம், தி/ புனித வளனார் வித்தியாலயம், தி/ விக்கிணேஸ்வரா மகா வித்தியாலயம் மற்றும் தி/ ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்வி கற்றதுடன் உயர்தரத்தில் வணிகப் பிரிவில் பயின்று மாவட்டத்தில் 2ம் நிலையில் தேறி சட்டத்துறையை தெரிவு செய்து கொழும்பு பல்கலைக்கழக சட்டப பீடத்தில் சட்டமாணி பட்டமும் பெற்று இலங்கை சட்டக்கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார். அவர் சட்டத் தொழில் துறையில் பிரவேசித்த ஆரம்ப கால கட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் வழக்குகளை இலவசமாக வாதாடும் ERO (Eastern Rehabilitation Organization ) நிஷ நிறுவனத்திலும் தன்னை இணைத்து மக்கள் நலன் கருதி சேவையாற்றினார். அந்தக் காலப்பகுதியில் ERO நிறுவனத்தின் ஸ்தாபகராக இருந்த காசிநாதர் சிவபாலனின் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் (Sri Lanka Monitoring Mission) பணியாற்றும் போது அவருக்கு சட்டத்துறை உதவியாளராக இணைந்து பணியாற்றினார்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபின் காசிநாதன் சிவபாலன் மற்றும் திலகரெத்தினம் துஷ்யந்தன் ஆகியோருக்கு விசாரணைகளையும் உயிர் அச்சுறுத்தல்களையும் முகங்கொடுக்க நேரிட்டது. போர் நிறுத்தம் செய்யப்பட்ட பின் திருகோணமலை நகரில் இடம் பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலருடைய வழக்குகள் இவரால் இலவசமாக வாதாடி கொடுக்கப்பட்டதுடன் விடுதலையையும் பெற்றுக் கொடுத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ERO நிறுவனம் 2008ம் ஆண்டில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அழுத்தங்களால் இயங்காமல் தடைசெய்யப்பட்ட பின் அப்பாவி இளைஞர்களுக்கான வழக்குகளை தொடர்ந்தும் சட்டத்தரணி என்ற வகையில் முன்னெடுத்துச் சென்றதை அவதானித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பல தடவைகள் விசாரணைகளை நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக இடம்பெற்ற காலப்பகுதியில் துணிகரமாக அத்தகைய வழக்குகளில் இலவசமாக ஆஜராகி அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்தார். சுனாமி மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுனாமியில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் / காணாமல் ஆக்கப்பட்டவர களின் இறப்புப்பதிவு மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் காணி சம்பந்தமாக ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற நோர்வேக்கான அகதிகள் பேரவையில் ( NRC) தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவணங்கள் கிடைப்பதற்கான உதவிகளை புரிந்தார். இந்தக்காலப்பகுதியில் இவரின் செயற்பாடுகள் மூதூர், ஈச்சிலம்பற்று, வெருகல் கிண்ணியா, குச்சவெளி போன்ற இடங்களில் அதிகமாக இடம்பெற்று வந்தன.

திருகோணமலை நகரில் இடம்பெற்ற 05 பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு, திருகோணமலை பேருந்து நிலைய புத்தர் சிலை ஸ்தாபித்தல் வழக்கு போன்றவற்றில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சுபாஷினி சித்திரவேல், ஆறுமுகம் ஜெகசோதி ஆகியோருடன் இணைந்து இந்த வழக்குகளில் மனித உரிமை மீறப்பட்டதை சர்வதேசத்துக்கு வெளிக்கொணர சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

யுத்தகாலத்தில் மூதூரில் 17 மனித நேய ஊழியர்கள் கொல்லப்பட்ட (Action Faim) விடயத்தில் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இறந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் பிரேத பரிசோதனையின் பின் இடம் பெற்ற பிரேத மீள் பரிசோதனை என்பவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அவ்விடயம் தொடர்பில் தனது வாக்குமூலத்தையும் தனது ஒன்று விட்ட சகோதரரின் இறப்பு தொடர்பான அறிக்கையினையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளிப்படுத்தியிருந்தார்.

இறுதி யுத்தத்தில் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து புல்மோட்டை வைத்தியசாலை, திருகோணமலை வைத்தியசாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட வேளையிலும் UNHCR உடன் இணைந்து (NRC) நிறுவனம் சார்பாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு திட்டத்தில் தன்னை இணைந்து செயற்பட்டார். யுத்தகாலத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்த வேளையில் அம்மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்ற நேரடி உதவித்திட்டத்தில் யுத்தம் நடைபெற்ற பகுதியில் உலர் உணவுப் பொருட்களை வழங்குகின்ற UNHCR இன் அவசர செயற்றிட்டத்திலும் பணியாற்றினார். மேலும் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் வியாபார சட்டம் தொடர்பில் வெளிவாரி விரிவுரையாளராக 2006 தொடக்கம் 2009 வரை சேவையாற்றியுள்ளார்.

திருகோணமலை பெண்கள் வலையமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகள் சார்பில் நடாத்தப்படும் செயலமர்வுகளில் வளவாளராகவும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.

மேலும் கொரோனா என்னும் கொடிய நோயின் கோரத்தாண்டவ காலத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் உலர் உணவுபொருட்களை தனது சொந்த செலவில் உதவி தேவைப்பட்ட பல இடங்களுக்கு கொடுத்து உதவியிருந்தார்.

தம்பலகாமம் வன்னிச்சியார் திடலில் அமைந்துள்ள பிள்ளையார் சமயேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 40 இலட்சம் பெறுமதியான அர்த்த மண்டபத்தினையும் வீரமாநகர் நாகம்மாள் ஆலய மண்டப நிர்மாணதிற்கு மூன்று இலட்சம் நிதி உதவியையும் தம்பலகாமம் முள்ளியடி இடுகாட்டிற்கு ஈமைக்கிரியைகளுக்காக ரூபா 5 இலட்சம் செலவில் கிணறும் இவரால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப் பணி மட்டுமன்றி சமயப் பணியிலும் தனது சேவையை திருகோணமலை வாழ் இந்துகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக திருகோணமலை தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தில் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் ஆலய பரிபாலன சபையின் செயலாளாராக பதவி வகித்து தனது சேவைகளை வழங்கினார். மேலும் திருகோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலன சபைக்காக 2019ம் ஆண்டில் நடாத்தப்பட்ட பரிபாலன சபை தேர்தலில் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

சிறிது காலத்தின் பின் அப்போதைய தலைவர் அருள்சுப்பிரமணியம் திடீரென அப்பதவியில் இருந்து விலகிக் கொண்டதன் பின்னர் தி.துஷ்யந்தன் தலைவராகி சமயப்பணிகளை சிறப்பாக ஆற்றிவந்தார். 2019ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பரிபாலன சபையின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் 2023ம் ஆண்டு நடைபெற்ற நிர்வாகிகள் தெரிவிற்கான பொதுச்சபை கூட்டத்தில் இருந்து சுயாதீனமான இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பரிபாலன சபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். ஆலய நிர்வாகத்தை சிறப்பாக நடாத்தி வருகிறார். இவருடைய அரப்பணிப்பான சேவையைக் கண்டு ஆலய ஆன்மீக சிந்தனையுடைய இளைஞர்கள் தாமாக முன்வந்து ஆலயப் பணிகளில் தம்மை இணைந்து கொண்டுள்ளனர். ஆலய நிர்வாக சபை ஆலயத்தின் நித்திய, நைமித்திய கிரியைகளை கிரமம் தவறாது நடாத்தி வருகிறது. ஆலய பரிபாலன சபை மீது சேறு பூசும் நடவடிக்கையாக இருவர் நம்பிக்கைப் பொறுப்பு சபையின் மீது வழக்கினைத் தொடர்ந்தனர். தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அதனுடைய தீர்ப்பு வழங்கப்படும் காலம் வரை கூட பொறுக்க முடியாமல் ஆலயத்தை முறைகேடாக கைப்பற்ற எடுக்கப்பட்ட சில அரச உயர் அதிகாரிகளின் செயற்பாடுகள் கூட இவரால் முறியடிக்கப்பட்டு இன்றும் இவரது தலமையில் நிர்வாகசபை சிறப்பாக செயற்படுகிறது.

மேலும் திலகரெத்தினம் துஷ்யந்தனின் பாரியாரான புனிதவதி துஷ்யந்தனும் ஒரு சட்டத்தரணியாவார். அவர் வவுனியாவில் உள்ள நோர்வே அகதிகள் பேரவையில் சட்ட ஆலோசகராக கடமையாற்றி பல சேவைகளை யுத்தகாலத்தில் ஆற்றியிருந்தார். வவுனியா சட்ட உதவி ஆணைக்குழுவிலும் (LEGAL AID COMMISSION) கடமையாற்றி வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பொது மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கியிருந்தார். அதன்பின்னர் திருகோணமலையில் சட்டத்தரணியாக பணிபுரிந்த காலத்தில் பல சமூகம் சார்ந்த பொதுநலவழக்குகளில் ஆஜராகியிருந்தார். மூதூர் பகுதியில் 2017ம் ஆண்டில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் சமூக ரீதியான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தி/சண்முகா இந்து மகளிர்க் கல்லூரியில் சமூக முரண்பாட்டினை ஏற்படுத்திய ஹபாயா அணிதல் தொடர்பான வழக்கிலும் சக சட்டத்தரணிகளுடன் இணைந்து குறித்த சமூகப் பிரச்சினை சுமூகமாகவும் இனாமாகவும் முடிய உதவியிருந்தார். மேலும் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் வெளிவாரி விரிவுரையாளாராக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றார். திருக்கோணமலை பெண்கள் வலையமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகள் சார்பில் நடாத்தப்படும் செயலமர்வுகளில் வளவாளராகவும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.

இவ்வாறு மக்கள் சேவையை மகத்தான சேவையாக எண்ணி தனது வாழ்நாளில் பகுதிக்காலத்தை மக்களுக்காக தியாகம் செய்த துஷ்யந்தன் இம்முறை 2024 நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியில் வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 07 இல் போட்டியிடுகிறார். இத்தகைய இளைஞர்கள்ள் முன்வருகை தமிழர் அரசியலில் வரவேற்கத்தக்கது.

கே. ஈஸ்வரலிங்கம் easwarantkn@gmail.com வட்ஸ்அப்: 0773124543

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division