”நாம் அரசியல் பொருளாதார சமூக ரீதியில் வங்குரோத்து அடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். எனினும் அவை அனைத்துடனும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது” தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் ஒரு நேர்காணல்.
கேள்வி: அரசியலில் உங்கள் ஆரம்பம் எவ்வாறு?
பதில்: நான் பிறந்த ஊர் அகலவத்தை. பாடசாலை காலத்திலிருந்தே அரசியல் உணர்வு என்னிடம் மிகுந்து காணப்பட்டது. அந்த வகையில் பல்கலைக்கழகத்தில் நான் கற்ற போது சமூக மாணவர் அமைப்பின் செயற்பாட்டாளராக இணைந்து செயற்பட்டு மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்து கொண்டேன்.
2009 ஆம் ஆண்டாகும்போது நான் டாக்டராக தொழில் புரிந்த போதும் அதிலிருந்து விலகி எனது கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கினேன். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலிலும் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் வேட்பாளராக போட்டியிட்டேன்.
கேள்வி: டாக்டர் தொழில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்ட ஒரு தொழில். அவ்வாறான ஒரு தொழிலை கைவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தீர்மானித்தீர்கள்?
பதில்: உண்மையில் அது கஷ்டமான தீர்மானம் தான். எவ்வாறாயினும் குடும்பத்தில் அம்மா, அப்பா, தங்கை குறிப்பாக எனது மனைவி ஆகியோர் அந்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அனுமதியையும் ஒத்துழைப்பையும் வழங்கினர். சமூகம் முன்னேறுவதானால் இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் சில அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாறில்லாவிட்டால் சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. சமூகமும் முன்னேறாது.
கேள்வி: பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே காணப்படுகின்றன. குறிப்பாக உங்களது கட்சி பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதுடன் அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரி நிற்கின்றது. பலமான அரசாங்கம் ஒன்றின் தேவை ஏன் ஏற்படுகிறது?
பதில்: நாம் சமூக பொருளாதார அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்த நாட்டை யே பொறுப்பேற்றோம். அப்போது இந்த நாடு சர்வதேச அங்கீகாரத்திலும் மிகவும் கீழ் மட்டத்திலேயே, வீழ்ச்சிடைந்த நிலையிலேயே காணப்பட்டது.
ஊழல், மோசடிகள் நிறைந்து காணப்பட்டன. நோயாளர்களுக்கு தமக்கு வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் நம்பிக்கை இல்லாத நிலையே காணப்பட்டது.
அவ்வாறான நாட்டை அந்த நிலையிலிருந்து மீட்டெடுத்து முன்னேற்றுவதற்கு மிகவும் காத்திரமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பொருளாதார அபிவிருத்தி, மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் மக்களுக்கான நலன்புரி திட்டங்கள், அரசியல் கலாசாரத்தில் மாற்றம், இராஜதந்திர ரீதியிலான புதிய பயணம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதானால் பலமான பாராளுமன்றம் அவசியமாகிறது.
அது மட்டுமன்றி காத்திரமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. அவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதானால் பாராளுமன்றத்தில் சிறந்த பெரும்பான்மையைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
அதனால் நாம் நாட்டை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் கட்டியெழுப்ப வேண்டுமானால் பலமான அரசாங்கத்தை உருவாக்குவது முக்கியமாகும். அதனால் தான் நாம் பலமான பாராளுமன்றம் அவசியம் என தெரிவிக்கின்றோம்.
கேள்வி : நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள அரசியல், சமூக,பொருளாதார நிலைமைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு நாட்டு மக்களால் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வாறான திட்டங்களை அரசாங்கம் வைத்துள்ளது?
பதில்: நாடு சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் சர்வதேச சந்தைகளுக்கு பொருத்தமான உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு தவறியுள்ளன. அதேபோன்று அப்போதிருந்த வழமையான உற்பத்தி முறைமையை நவீனமயப்படுத்துவதற்கும் அந்த அரசாங்கங்கள் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
எவ்வாறாயினும் 1948 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியிலும் நாட்டின் உற்பத்திகள் ஒருவாறு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேசிய உற்பத்தி கவனத்திற்கொள்ளப்படாமல் திறந்த பொருளாதாரம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. அதனால் தேசிய உற்பத்தி பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரதிபலனை நாட்டில் அனைவரும் அறிவர்.
குறிப்பாக அது தொடர்பில் குறிப்பிட வேண்டுமென்றால் வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளுக்கு விற்பனை செய்யப்படும் நாட்டின் தேசியக்கொடி கூட உள்ளூர் உற்பத்தி கிடையாது. அதுவும் இந்தியாவிலிருந்தோ அல்லது சீனாவில் இருந்தோ தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. எமது நாட்டின் முக்கியமான சின்னங்களான புத்தர் சிலைகள் உட்பட அவ்வாறான ஞாபக சின்னங்களாக நாம் வழங்கக்கூடிய அனைத்து பொருட்களுமே வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதுதான் எமது தேசிய உற்பத்தியின் தற்போதைய நிலை.
கிராமங்களில் நாம் அறிந்த பல பிரதேசங்களில் தும்புத்தொழில் பிரசித்தமாக காணப்பட்டது. தும்புத்தடி உள்ளிட்ட அந்த உற்பத்திப் பொருட்கள் துறை தற்போது முழுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் தும்புத்தடிகளையே இப்போது அதிகம் காண முடிகிறது.
அந்த வகையில் தேசிய உற்பத்தியை முன்னேற்றும் நோக்கில் உற்பத்தியை கேந்திரமாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நாம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இனங்கண்டு திட்டமிட்ட வகையில் அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவோம். அதற்கான திட்டத்தை வகுத்தல் மற்றும் சலுகைகளை வழங்குதலை அரசாங்கம் மேற்கொள்ளும். தனியார் துறை, தனி நபர் குழுக்கள், தொழில் முயற்சியாளர்கள், சமூக அமைப்புக்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்த உற்பத்தி வலையமைப்பை உருவாக்குவது அவசியம். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டுமானால் இது போன்ற உற்பத்தி பொருளாதார வேலைத் திட்டங்கள் முக்கியமானதாகும்.
கேள்வி: நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அதனை விட வேறு எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது?
பதில்: கொரோனா தொற்று சூழ்நிலையோடு வழங்கல் அல்லது விநியோகம் பாதிக்கப்பட்டதால் உலகின் பெரும்பாலான நாடுகளின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டன. அதனைக் கவனத்திற் கொண்டு பல நாடுகள் தேசிய உற்பத்தி பொருளாதார வேலைத் திட்டங்களை உருவாக்கின.
காணிகள் மற்றும் நீர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படும் சிங்கப்பூர் கூட 2030 ஆம் ஆண்டில் நாட்டின் உணவு தேவையில் 30% உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளது. நாமும் அவ்வாறான திட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்தும் அதேவேளை, உலக வழங்கல் துறைக்குள் நாமும் பிரவேசிக்க வேண்டியுள்ளது. எமது இலக்கு தேசிய சந்தை அல்லாது சர்வதேச சந்தையாக அமைய வேண்டும். இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதற்கு பலமான அரசாங்கம் அமைய வேண்டியது அவசியம்.
கேள்வி: நாட்டின் பொருளாதாரம், முதலீட்டு துறைகளில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. புதிய அரசாங்கம் அது தொடர்பில் எவ்வாறாக அணுகும்?
பதில்: இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள டயஸ்போராக்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நாம் விசேட அழைப்பை விடுகின்றோம்.
குறிப்பாக அவர்கள் கிராமப்புறங்களில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முடியும் அதற்கான அனைத்து உதவி ஒத்துழைப்புகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சும் முதலீட்டு சபையும் வழங்கும் அதில் எவருக்கும் தயக்கம் தேவையில்லை.
கேள்வி: மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை பெரும் இழுபறி நிலையில் உள்ளது. ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அதனையே அந்த மக்களுக்கு வேட்பாளர்கள் வாக்குறுதியாக வழங்கி அவை இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதுவரை அவர்கள் எதிர்பார்த்த 1700 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அத்துடன் அந்த மக்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் கூட பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அரசாங்கம் அது தொடர்பில் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும்?
பதில்: மலையக பெருந்தோட்ட மக்கள் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இனியும் அவர்களை ஏமாற இடமளிக்க முடியாது. அவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக வர்த்தமானியை கடந்த அரசாங்கம் வெளியிட்டு மறுபுறம் அவர்களுக்குத் தேவையான தோட்ட கம்பெனிகளுக்கே ஆதரவு வழங்கினர். அந்த மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
அந்த வகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மட்டுமின்றி அவர்களது கல்வி, சுகாதாரம், வீட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தோட்டப்புறங்களில் முன்பு சிறந்த டிஸ்பென்ஸரிகள் காணப்பட்டன. அந்த முறைமை தற்போது அங்கு இல்லாமல் போனது. அந்த மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தோட்டப்புறங்களின் அபிவிருத்திக்காகவும் விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி: யுத்தத்தினால் பாதிக்கப்படடுள்ள வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன.
குறிப்பாக இப்போதும் காணாமற் போனோரின் பிரச்சினைகள் தொடர்கின்றன. அந்த மக்கள் வருடக் கணக்காக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இராஜதந்திரிகள் அங்கு செல்லும்போது இப்போதும் அவர்கள் அதற்கான முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
பதில்: வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். காணாமற்போனோரின் பிரச்சினை மட்டுமின்றி தீர்க்கப்பட வேண்டிய அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும். இன நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடும் மிக அவசியம் அதற்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.
நேர்காணல்: லோரன்ஸ் செல்வநாயகம்