இலங்கையில் கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து எமது நாட்டை மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குரிய அபிவிருத்தி திட்டங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகமொன்றுக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக மீண்டும் ஆராயப்படுவதாகவும் இதற்கான செலவை இந்தியாவே பொறுப்பேற்குமெனவும் அவர் கூறியிருந்தார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றதை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பாரிய இருதரப்பு திட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த திட்டம் உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதென்பதுடன், இது இரு நாடுகளுக்கும் சிறந்த வரப்பிரசாதமென்றே கூற முடியும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள தொப்புள்கொடி உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையவுள்ள இந்த திட்டத்தால் பாரிய நன்மைகளை இரு நாட்டு பிரஜைகளும் அனுபவிக்க முடியுமென்பது உறுதியாகும்.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை வளங்கள் பொருந்திய சிறப்பை கொண்டமைந்துள்ள திருகோணமலையிலேயே இயற்கைத் துறைமுகமும் அமைந்துள்ளதுடன், இந்த இயற்கைத் துறைமுகமே பல நாடுகளும் இலங்கையில் நுழைவதற்கான போட்டிநிலையைத் தோற்றுவித்துள்ளதும் அறிந்ததே.
இராமேஸ்வரத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை திட்டத்தால் இரு நாடுகளுக்கும் குறிப்பாக இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் எவை?
தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள அனைத்து நாடுகளிலும் ஏதோவொரு வகையில் தாக்கம் செலுத்தும் நாடாக இராஜதந்திர நடவடிக்கைகளிலும், வர்த்தக, வியாபார நடவடிக்கைகளிலும் பாரிய வகிபாகத்தை கொண்டமைந்த நாடாக இந்தியா அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே அதன் அயல் நாடான இலங்கை மீது இந்தியா அதிக அக்கறை செலுத்துவதற்கான காரணத்தை கொண்டமைந்துள்ளதாக, தினகரன் வாரமஞ்சரிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள பொருளியல்துறை விரிவுரையாளர் எஸ்.சந்திரகுமார் தெரிவித்தார்.
இந்துசமுத்திரத்தின் முத்தென்று வர்ணிக்கப்படும் இலங்கையானது நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டதொரு சிறந்த தீவகமாகும்.
அதேவேளை சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து இந்தியாவுடன் தொப்புள்கொடி உறவாகவும் இலங்கை பின்னிப்பிணைந்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பது இரு நாடுகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும் விடயமாகவே உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இலங்கையை பொறுத்தவரையில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ரயில் பாதை ஏற்கெனவே இருந்ததாகவும் அப்பாதை 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரம் புதுடில்லியிலுள்ள ரயில்வே நூதனசாலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைவழி உறவு உள்ளது.
ஆனால் இலங்கையானது இந்தியாவுடன் தரைவழி உறவாக இன்னும் இணைக்கப்படவில்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இராமேஸ்வரத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் தரைவழியான இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் இதுவரைகாலமும் இல்லாத வகையில் கிழக்கு மாகாணம் முதலில் பாரிய நன்மை அடையும்.
அதனைத் தொடர்ந்து இலங்கையும் பூரண நன்மை அடையும்.
தமிழ்நாடும் வடக்கு மாகாணமும் ஏதோவொருவகையில நெருங்கிய தொர்புகளைக் கொண்டிருந்தபோதும் கிழக்கு மாகாணம் அவ்வாறானதல்ல. இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் இடையில் பாரிய இணைப்பு ஏற்படும். கிழக்கு மாகாணமும் அம்மாகாண மக்களும் நன்மை அடைவது மாத்திரமின்றி இலங்கை பூராகவும் இதனால் பாரிய நன்மைகள் கிடைக்குமெனவும், அவர் கூறினார். சமூக, பொருளாதார, வர்த்தக, வியாபார, கலை, கலாசார ரீதியாக இரு நாடுகளும் பலப்படுமென்பதுடன், கல்விப் பரிமாற்றம் மற்றும் கல்வி புலமைப்பரிசில்களுக்கு வாய்ப்புகள் ஏற்படும். அத்துடன் புதிய அறிமுகங்கள், புதிய ஸ்தாபனங்கள், புதிய வர்த்தக நடவடிக்கைகளும் அதனால் புதிய வர்த்தக, வியாபார நிலையங்கள் உருவாக்கம், புதிய பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படும். குறைந்த விலையில் தரமான பொருட்களை, தமிழ்நாட்டின் புதிய உற்பத்திகளை நுகரக்கூடிய வசதி ஏற்படும். எமது நாட்டு கைத்தொழில் உற்பத்திகளும் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பட்சத்தில் கைத்தொழில் அபிவிருத்தி ஏற்படும். திருகோணமலை மாவட்டம் கேந்திர நிலையமாக மாறும் நிலைமை ஏற்படும். இவற்றால் எமது நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்குமென்பதுடன், வர்த்தகர்கள் நன்மை அடைவார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொருளாதார ரீதியான புலப்பெயர்வு ஏற்படாது. இதனால் எமது நாடு சிறந்த வருமான வளர்ச்சியை எட்டுமென்பதில் ஐயமில்லை.
மேலும் இலங்கையின் கரையோரப்பகுதிகளும் தமிழ்நாட்டு எல்லைகளும் பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தகத்துக்கும் இந்த திட்டம் உதவும். ஏனெனில் ஏனைய நாடுகளும் இலங்கையிலும் இலங்கையினூடாகவும் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு அமையும்.
எமது நாட்டில் யுத்தம் முடிந்து தற்போது நல்லிணக்கத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கையில், பெரும்பான்மையின மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமை மறுமலர்ச்சி, மேலும் பலப்படும். ஏனெனில் பெரும்பான்மையின மக்கள் திருகோணமலையினூடாக தமிழ்நாட்டுக்கு போக்குவரத்து மேற்கொள்ளும் போது தமிழ் மக்களுடன் அதீத ஈடுபாடு பெரும்பான்மையின மக்களுக்கு இருக்கும். இவ்வாறான சூழ்நிலையால் சிறந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துமென்பதிலும் எவ்வித ஐயமில்லை. பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் இந்த திட்டத்தால் அனைவருமே நன்மை அடைய முடியும். ஆயினும் இராமேஸ்வரம் – திருகோணமலை நெடுஞ்சாலை திட்டம் சாத்தியப்படும் வகையில் அமையுமா என்ற கேள்விகளும் தோன்றுகின்றன.
ஏனெனில் வடமாகாணத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் தூரம் குறைவாக காணப்படும் அதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் தூரம் அதிகமாக உள்ளது. இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? அடுத்ததாக திருகோணமலை கடற்பரப்பு இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்து அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளதுடன், இது அனைத்து நாடுகளுக்கும் கடல்வழி போக்குவரத்தில் நன்மை பயக்கும் வகையிலும் அமைந்துள்ளது. ஆகையால் இந்த ரயில் பாதை திட்டமானது கடலுக்கு மேலாகவா அல்லது கடலுக்கு அடியில் அமைக்கப்பட உள்ளதா என்ற கேள்வியும் தோன்றுகிறது.
எவ்வாறாயினும் கடலுக்கு அடியில் ரயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில் சுற்றுலா அபிவிருத்தி ஏற்படும். இலங்கைக்கு இந்தியாவிலிருந்து மின்சார வசதி மற்றும் எரிபொருள் விநியோக வசதி கிடைக்கும் சாத்தியம் உள்ளது. சிறந்த தொழில்நுட்ப வசதியை பொறுத்து துரிதகதியில் இருநாட்டு ஏற்றுமதி, இறக்குமதிகளை குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் முன்னெடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. சட்ட ரீதியானதும் பாதுகாப்பானதுமான சேவையாகும். மக்களும் இதனை விரும்புவர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இதுவரையில் எந்தவொரு தரைவழி பாதையும் காணப்படாத நிலையில், திருகோணமலைக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவழி பாதையும் அமையும் பட்சத்தில் மிகவும் சாதகமான நிலைமை இரு நாடுகளுக்கும் தோற்றுவிக்கப்படும். பொருளாதார அபிவிருத்தியை நோக்கும் போது அது மக்களின் மனங்களில் தங்கியுள்ளதாயினும், அபிவிருத்தியை நோக்கி நகரும் மக்களுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாக அமையும். ஏனெனில் ஏனைய நாடுகளால் இலங்கையை வளர்ச்சி அடையச் செய்வதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியான முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் பட்சத்திலும் மக்களும் தமது வளங்களை பயன்படுத்தும் பட்சத்திலும் பொருளாதார ரீதியான மறுமலர்ச்சி யுகம் பிறக்குமென்பது உறுதியான நிலைப்படாகும்.
திருகோணமலை – இராமேஸ்வரம் தரைவழி திட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் சுமார் 23 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையில் நிச்சயமாக பொருளாதார ரீதியான மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆகையால் இலங்கையின் அபிவிருத்தியை நோக்கிய வளர்ச்சிக்கு இந்த திட்டம் அவசியமானதாகும்.
ஆர்.சுகந்தினி