உலக அரசியலில் மேற்கு ஆசியா எப்போதும் தனித்துவமான இடத்தை அதன் எண்ணெய் வளத்தினால் கொண்டிருக்கின்றது. தற்போது இஸ்ரேல் நடத்தும் போரானது அத்தகைய வளம் கொண்ட மேற்காசியாவில் தனது நீண்ட இருப்பை உறுதி செய்வதாகவும் மேற்குலகத்தின் நலன்களை முழுமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது. காசாவில் தொடங்கிய யுத்தம், லெபனான் நோக்கி விரிவடைந்திருப்பதோடு லெபனான் நாட்டின் எல்லைக்குள் ஊடுருவி இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
லெபனானின் தலைநகரில் கணிசமான பகுதிகளை வான்வழித் தாக்குதலூடாக அழித்து வரும் இஸ்ரேல், ஈரானின் அணு உலைகளை தாக்கியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை யூதர்களால் மட்டுமின்றி அமெரிக்க புலனாய்வுத் துறையினராலும் கூறப்பட்டு வருகிறது. இக்கட்டுரை ஈரான் அணு உலை மீதான தாக்குதலின் யதார்த்தத்தை தேடுவதாக உள்ளது.
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்லாலி பெனற் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக ஈரானின் அணு உலைகளை தாக்கியழிக்க வேண்டும் எனவும், கூறியுள்ளது. மிகநீண்ட காலத்துக்கு பின்னர் இத்தகைய வாய்ப்பு இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோபைடன் அவ்வகை தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்படுமாக இருந்தால், அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை செய்ததோடு,. இஸ்ரேல் இத்தகைய தாக்குதலை மேற்கொள்ளக் கூடாது எனவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை ஆழமாகத் தேடுவது அவசியமானது.
ஒன்று மேற்காசிய இஸ்லாமிய அரசியலில் மேற்குலகம் எப்போதுமே விழிப்பாக இருந்துள்ளது. தனது அரசியல் பொருளாதார நலன்கள் மட்டுமன்றி, இராணுவ நலனையும் ஒன்று சேர்த்து மேற்காசிய அரசியலை கையாள விரும்புகிறது. கடந்த கால வரலாறு முழுவதும் அதனையே அமெரிக்காவும் அதன் தலைமையிலான மேற்கு நாடுகளும் வெளிப்படுத்தியுள்ளன.
1979ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட புரட்சி அமெரிக்காவை அதீத நெருக்கடிக்கும் அவமதிப்பிற்கும் தள்ளியிருந்தது. இதன் பின்புலத்திலிருந்து ஈரானையும் ஈரானிய புரட்சியாளர்களையும் அழித்து ஒழிப்பது என்ற திட்டமிடலோடு பல போர்களையும், பொருளாதாரத் தடைகளையும் நடத்தியது. அணு விஞ்ஞானிகளையும் இராணுவ தளபதிகளையும் ஆட்சியாளர்களையும் மேற்கு- இஸ்ரேலியக் கூட்டு இதன்மூலம் அழிவுக்கு உள்ளாக்கியிருந்தது.
இதன் இன்னொரு கட்டமாகவே தற்போதைய போரின் முனைப்பு விளங்குகிறது. ஹமாஸ் மீதான தாக்குதலை தொடங்குகின்ற போது இஸ்ரேலிடம் தெளிவான, ஈரான் மீதான தாக்குதலுக்குரிய உத்தி காணப்பட்டது. அதன் பின்புலத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைந்து கொண்ட போதும், அவ்வப்போது உலகத்தின் கண்களை மறைத்துக் கொள்வதற்கு தாராள ஜனநாயக வடிவத்தை காட்டும் விதத்தில் இஸ்ரேல் மீது எச்சரிக்கைகளையும் போர் நிறுத்த உடன்படிக்கைகளையும் பேச்சுவார்த்தைகளையும் சமாதான உரையாடல்களையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளது.
ஆனாலும் ஈரானுடைய அணு ஆற்றலே இஸ்ரேல் அமெரிக்க கூட்டின் இலக்காக உள்ளது. அத்தகைய இலக்கை அடைவது தற்போது ஏற்பட்டிருக்கும் முக்கியமான இராணுவ தந்திரோபாயமாகும்.
ஈரானை அழிப்பது என்பது ஈரானின் மண்ணின் மேற்கொள்ளப்படும் அழிப்புக்களாக அமைவது பொருத்தமானது என இஸ்ரேல் கருதுகிறது. அதற்கு அமைவாகவே ஈரானின் நிலப்பரப்பில் தனது புலனாய்வு உத்திகளைக் கொண்டு அழிவுகளையும் சிதைவுகளையும் மூர்க்கத்தனமாக நிகழ்த்தி வருகின்றது.
இதனுடைய அடிப்படைகளுக்குள்ளேயே ஈரானின் அணு உலை மீதான தாக்குதலில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கள் அழிக்கப்பட்ட நிலையில் ஈரான் பாரிய நெருக்கடியை இஸ்ரேலிடமிருந்து எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. ஈரானை நோக்கிய வான்வழித் தாக்குதலும் ஏவுகணை தாக்குதலும் துல்லியமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் ஈரான் மீதான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே ஈரான் அணு ஆயுதத்தை கையிருப்பில் கொண்டிருக்கின்றது என்ற உரையாடல்களும் அதன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வழிவகுக்குமென இஸ்ரேல் கருதுகிறது.
அதற்கான இலக்குகளை கட்டமைத்துக் கொண்டு நகர திட்டமிடும் இஸ்ரேல், ஈரானின் எல்லைக்குள் தாக்குதலுத்திகளை தொடக்கியுள்ளதாகவே தெரிய வருகின்றது. அணுகுண்டுகளும் அதன் பரிசோதனை நிலையங்களும் அதனை அண்டிய பிரதேசங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாக செய்திகளை மேற்கும் இஸ்ரேலும் பரப்பி வருகின்றன. மேற்குலகத்தினுடைய ஊடகப் பிரசாரம் ஈரானுக்கு எதிராக பாரிய அளவில் திரும்பி உள்ளது.
இதனால் இஸ்ரேலின் தாக்குதல் வாய்ப்பான சூழலை நோக்கி நகர்கிறது. இதே உத்தியையே ஈராக்கின் அணு உலைகளை தாக்க இஸ்ரேல் முனைந்து, வெற்றி கண்டது. ஈராக்கின் ஓசிராக்கை 1981ஆம் ஆண்டு எவ்வாறு இஸ்ரேல் தாக்கி அழித்ததோ, அதேபோன்று ஈரானின் அணு உலைகள் மீதும் தாக்கி அழிக்க திட்டமிடுவதாக தெரிய வருகின்றது.
இதனை எதிர்கொள்ளும் விதத்தில் ஈரானும் ஈரானுடைய ஆட்சியாளர்களும் தயாராக இருந்தாலும், அவர்கள் ஒரு பதற்றமான சூழலில் காணப்படுவதும், தமது தலைமைகளை பாதுகாப்பதில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளும் இஸ்ரேலின் தாக்குதலை பெரிய அளவில் தடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இல்லை என்பதை காட்டுகிறது. ஆனால் ஈரானின் அணு உலைகள் மீதான தாக்குதலை தடுப்பது மட்டுமல்ல ஈரானிய தலைவர்களை பாதுகாக்கின்ற செய்முறைக்கும் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை சீனா வழங்குவதாகவும் ரஷ்யா அதற்கான ஒப்புதலை கொடுத்திருப்பதாகவும் இரு நாடுகளும் ஈரான் மீதான தாக்குதலையும் அணு உலை மீதான தாக்குதலையும் தடுக்கும் விதத்தில் இராணுவ ரீதியில் செயல்பட முனைவதாகவும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அதனால் இப்போது அது புதியதொரு தளத்தை நோக்கி நகரும் என்ற இராணுவப் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இலகுவானதாகவோ வெற்றிகரமானதாகவோ அமைவதற்கான வாய்ப்புகளை பலவீனப்படுத்தி இருக்கிறது. சீனாவின் ரஷ்யாவின் இராணுவ ரீதியான ஒத்துழைப்பும் போரின் திசையை புதிய வடிவத்தில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பினை கொடுக்க முடியும். அதனை சீனா முழுமையாக வெளிப்படுத்துமா என்பது சந்தேகமானதே. எனவே ஈரான் மீதான இலக்கு என்பது இஸ்ரேலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அதன் நடைமுறை ரீதியான நெருக்குவாரங்கள் அதிகமான விளைவுகளை மேற்காசிய அரசியலில் ஏற்படுத்த விளைவதாகவே தெரிகிறது.
ஒரு நீண்ட போராக மட்டுமின்றி உலக வல்லரசுகள் பங்கெடுக்கின்ற ஒரு போராக இப்பிராந்திய போர் மாறுவதற்கான சூழல் காணப்படுகிறது. இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்க வல்லரசும் ஐரோப்பிய அரசுகளும் செயல்படுவது போன்று ஈரானுக்கு பின்னால் சீனாவும் ரஷ்யாவும் ஒன்றிணையுமானால் வல்லரசுகளின் போர் உத்திகள், ஆயுத தளபாட அரசியலுக்கான போராகவும், இஸ்லாமியர்கள் பலியிடலுக்கான போராகவும் அமையும்.