லெபனானின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விமானங்களில் பேஜர் மற்றும் வோக்கி டோக்கி உள்ளிட்ட வயர்லெஸ் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டுக்கு கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் எமிரேட்ஸ் எயார் விமானங்களும் இச்சாதனங்களைச் தடை செய்திருக்கின்றன.
எமிரேட்ஸ் எயார் நிறுவனம் கடந்த 07 ஆம் திகதி விடுத்துள்ள அறிக்கையில், துபாயிலிருந்து அல்லது துபாய் வழியாக விமானங்களில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் பேஜர்கள், வோக்கி-டோக்கி உள்ளிட்ட வயர்லெஸ் தொடர்பு சாதனங்களை கையில் வைத்தபடியோ அல்லது லக்கேஜில் பொருட்களுடன் வைத்து எடுத்துச் செல்லவோ முடியாதென குறிப்பிட்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இது உலகளாவிய மட்டத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த செப்டம்பரின் நடுப்பகுதியில் (17, 18 ஆகிய தினங்களில்) லெபனானின் பல பிரதேசங்களிலும் சிரியாவின் சில இடங்களிலும் பேஜர், வோக்கி டோக்கி உள்ளிட்ட வயர்லெஸ் தொடர்பு சாதனங்கள் மாலை வேளையில் சில நிமிடங்களுக்குள் திடீர்திடீரென வெடித்தன. இதனால் லெபனானையும் சிரியாவையும் சேர்ந்த 37 பேர் கொல்லப்பட்டதோடு, 3500 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் கண்பார்வையை இழந்துள்ளதோடு, இன்னும் சிலர் கைகள், விரல்கள் உள்ளிட்ட அவயவங்களில் கடும் பாதிப்புகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இந்த வயர்லெஸ் தொடர்பு சாதனங்களின் வெடிப்பு சம்பவத்திற்கு லெபனான் பிரதமரும் ஹிஸ்புல்லாஹ்வும் இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ள போதிலும், இஸ்ரேல் எவ்வித பதிலும் அளிக்காது மௌனம் காத்து வருகிறது.
இவ்வயர்லெஸ் சாதனங்களில் அதிகம் செறிவூட்டப்பட்ட வெடிமருந்தானது கண்டுபிடிப்பு சாதன பரிசோதனைகளிலும் பதிவாகாதபடி இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு ஹிஸ்புல்லாஹ் அங்கத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
இதன் விளைவாக சுமார் 3500 ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என லெபனானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளளன. ஆனால் லெபனானில் வெடித்த பேஜர்கள் தாய்வான் நிறுவனத்தின் இலச்சினையைக் கொண்டிருந்தன. அதனால் இவை தாய்வானில் உற்பத்தி செய்யப்பட்டவையாக நம்பப்பட்ட போதிலும், அதனை மறுத்த தாய்வான் நிறுவனம் தமது இலச்சினையைப் பயன்படுத்த ஹங்கேரி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டது,
இந்நிலையில் ஹங்கேரி ஊடகங்கள், பல்கேரியாவை தளமாகக் கொண்ட நோர்டா குளோபல் நிறுவனம்தான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பேஜர்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. குறித்த நிறுவனம் நோர்வே பிரஜைக்குச் சொந்தமானதாகும். அதனால் அவருக்கு எதிரான விசாரணைகளை நோர்வே ஆரம்பித்திருக்கிறது. எனவே இந்த பேஜர் வெடிப்பு விவகாரம் தாய்வான், ஹங்கேரி, பல்கேரியா மற்றும் நோர்வே என விரிவடைந்துள்ளது.
இந்நிலையில் பேஜர், வோக்கிடோக்கி போன்ற வயர்லஸ் தொடர்புசாதங்களைப் பயன்படுத்தவே அச்சம் கொள்ளும் நிலை லெபனானிய மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு இச்சாதனங்களை இறக்குமதி செய்வது குறித்தும் பயன்படுத்துவது குறித்தும் உலகம் திகிலடைந்துள்ளது.
லெபனான் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இத்தகைய வயர்லெஸ் சாதனங்களை விமான நிலையத்திற்குள் கொண்டு செல்வதற்கு தடை விதித்திருக்கிறது. இதேநேரம் எமிரேட்ஸ் எயார் நிறுவனம் இச்சாதனங்களை தங்கள் விமானங்களில் பயன்படுத்துவதையும் எடுத்துச் செல்வதையும் தடை செய்திருக்கிறது.
வயர்லெஸ் சாதனங்கள் லெபனானில் தாக்குதல் உபகரணங்களாகப் பயன்படுத்தப்பட்டதையடுத்து ஈரான் இஸ்லாமிய புரட்சி காவலர்படை அனைத்து உறுப்பினர்களும் எந்த வகையான தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட்டது. ஆனால் ஈரான் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் பெரும்பாலான வயர்லெஸ் தொடர்பு சாதனங்கள் உள்ளூர் உற்பத்திகளாகவும் சீன மற்றும் ரஷ்ய தயாரிப்புகளாகவும் உள்ளன. அப்படியிருந்தும் அவற்றின் பயன்பாட்டுக்கு உடனடியாகத் தடைவிதித்த ஈரானிய படையினர், அனைத்து சாதனங்களையும் பரிசோனைக்கு உட்படுத்தினர்.
இதேவேளை ஈரானிய முன்னாள் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பயணித்த ஹெலிகொப்டர் சீரற்ற காலநிலையினால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக விசாரணை அறிக்கைகள் தெரிவித்திருந்தன. ஆனால் லெபனான் மற்றும் சிரியாவில் பேஜர்கள் தாக்குதல் சாதனங்களாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இவர்களது மரணத்துக்கும் பேஜர் காரணமாக அமைந்திருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி ரைசியும் பேஜர் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் துருக்கி கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மெஹ்மட் படிஹ் கசிர், ‘லெபனானில் வயர்லெஸ் சாதனங்களப் பயன்படுத்தி மேற்கொண்ட தாக்குதல் ஒவ்வொரு நாடும் தேசிய தொழில்நுட்ப இயக்கத்தை நோக்கி செல்வதன் அவசியத்தை மீண்டுமொரு தடவை வலியுறுத்தியுள்ளது. அதனால் உள்நாட்டு வளங்களை பயன்படுத்தி முக்கியமான தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குவதும் உற்பத்தி செய்து கொள்வதும் ஒரு முக்கியமான தேவை’ என்றுள்ளார்.
துருக்கியின் சைபர் பாதுகாப்பு கொத்தணியின் (டி.சி.எஸ்.சி) பொது ஒருங்கிணைப்பாளர் அல்பஸ்லான் கெசிசி, ‘வெளிநாட்டு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் போது, வேண்டுமென்றே வீணான பிரச்சினைகளுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. குறிப்பாக முக்கியமான உட்கட்டமைப்புகள், பாதுகாப்பு, எரிசக்தி அமைப்புகள், சுகாதாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட மூலோபாயத்துறைகள் இத்தகைய அச்சுறுத்தலை எதிர்கொள்ளலாம்’ எனக் கூறியுள்ளார்.
அங்காராவின் ஒ.எஸ்.ரி.எம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முக்கிய கல்வியியலாளர் ஒருவர் கூறுகையில், இந்த வயர்லெஸ் சாதனங்கள் வெடிப்பின் உடனடித் தாக்கமாக இலத்திரனியல் மற்றும் இரசாயனப் பொருட்களின் இறக்குமதி அதிக கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகலாம். அதனால் மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவைக்கு உள்ளாகியுள்ளன என்றுள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இத்தகைய அபாயங்களைக் குறைக்கவென குறைக்கடத்திகள் போன்ற உயர்தொழில்நுட்ப உபகரணங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதோடு, பயன்படுத்தவும் செய்கின்றன. இருப்பினும், குறைந்த வருமானம் பெறும் வளரும் நாடுகள் இன்னும் முக்கியமான தொழில்நுட்பங்களுக்காக இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளன.
அதேநேரம் நிலம், கடல், காற்று, விண்வெளியுடன் சைபர்ஸ்பேஸை போரின் ஐந்தாவது களமாக நேட்டோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. இது இராணுவம், சிவிலியன் என்ற இரு தரப்பினரதும் உட்கட்டமைப்பை ஆழமாக பாதிக்கலாம் என்கிறனர் போரியல் ஆய்வாளர்கள்.
அதனால் பெரும்பாலான நாடுகள், தங்கள் சொந்த இணைய பாதுகாப்பு தீர்வுகளை தாங்களே உருவாக்கிக் கொள்வதோடு, முழுமையான உரிமையையும் கட்டுப்பாட்டையும் பேணிக் கொள்கின்றன. ஆனாலும் இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்ப சாதனங்களின் ஊடாக முக்கியமான தரவுகள் ஏனைய நாடுகளின் கைகளுக்கு செல்லக்கூடிய அபாயமும் நிலவவே செய்கிறது. அத்தோடு பராமரிப்பு, சீரமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளுக்காக வெளித்தரப்பில் முழுமையாக தங்கியிருப்பதும் அச்சுறுத்தல் மிக்கதாகவே அமையும்.
அதனால்தான் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா ஜகரோவா, ‘பேஜர் வெடிப்பைத் தொடர்ந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மீதான தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவென உலகளாவிய ஒழுங்குவிதிகள் அவசியம். ஏனெனில் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளது புலனாய்வு அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கின்றன, அவை மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடவும் உளவு பார்க்கவும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மீதான தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்கள் கட்டுப்பாட்டை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க உலக சமூகத்தை சட்டப்பூர்வமாக பிணைக்கும் சர்வதேச வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேற்கத்திய நிறுவனங்கள் முக்கிய தகவல் தொழில்நுட்ப உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிகாரத்தை தங்கள் கைகளில் குவித்திருக்கின்றன. ஆனால் நாடொன்றின் இறைமை மற்றும் பாதுகாப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. அதனால்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தங்கள் தயாரிப்புகளுக்குப் பொறுப்பேற்க வைப்பது மிகவும் முக்கியமானது, மென்பொருளில் தீங்கு விளைவிக்கும் கதவுகளை அறிமுகப்படுத்துவதை நிறுவனங்கள் தடுத்திருப்பதை உறுதிசெய்வதும் அவசியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே பேஜர், வோக்கி டோக்கி உள்ளிட்ட சாதாரண வயர்லெஸ் சாதனங்கள் லெபனான், சிரியாவில் தாக்குதல் உபகரணங்களாகப் பயன்படுத்தப்பட்டமையே உலகளாவிய ரீதியில் இத்தகைய திகில் நிலையை தோற்றுவித்திருக்கிறது.
மர்லின் மரிக்கார்