25
அலையாத முகில் தொட்டு
அழைக்கின்ற காற்றேகி,
பிழையாகிச் செல்கின்ற மேகம்,
தளிர் கொண்ட பூமித்தாய்
தழைக்கின்ற மழையானால்
தகையொன்றே நிலையான யோகம்!
நீர் தேடும் பூமிக்கு
நிலைகொண்ட ஒரு சேதி
உளமுற்று வழங்காதோ மேகம் !
தழைகொண்ட பசுமைகள்
தளிர்க்கின்ற இளமைகள்
நிலைகொள்ள முடியாத சோகம் !
அசைவில்லா வானத்தில்
விசையான மேகங்கள்
திசைமாறிச் செல்கிற பாகம்,
கசிகின்ற மழைத்தூறல்
காற்றாடும் மோகத்தில்
இசைவின்றிப் பொழியாத வேகம் !
விழி தோயும் ஆகாயம்
வீழ்ந்தேகும் சிறுதூறல்
மழையானால் பூமிக்கு ஆகும் !
நிலைகொள்ளும் மேகங்கள்
நிறம்மாறி முகிலாகத் –
தலைகாட்டும் மழைத்தூறல் ஏகம் !