தெற்கு லெபனான் உட்பட லெபனானின் பல பிரதேசங்களில் இஸ்ரேல் கடும் விமானத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. ஹிஸ்புல்லாஹ்வின் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவாக இஸ்ரேல் குறிப்பிடுகின்ற போதிலும், இற்றைவரை 569 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சிறுவர்களும், 94 பெண்களும் அடங்கியுள்ளனர். இவர்களில் இருவர் யூ.என்.எச்.சிஆர் உத்தியோகத்தர்களாவர். இத்தாக்குதல்களில் 2000 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக பெய்ரூட்டின் தஹ்யா பிரதேசத்தில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தின் மீது 27ஆம் திகதி வௌ்ளிக்கிழமை மாலையில் யுத்த விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல், அத்தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா உட்பட சில முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் நஸ்ருல்லாவின் மகள் சைனப் கொல்லப்பட்டுள்ளதை லெபனானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதல்களில் 250 போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளதோடு, லெபனானின் பல பகுதிகளிலும் 2,000 இற்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
‘ஹிஸ்புல்லாஹ்வைப் பலவீனப்படுத்தவும், வடக்கு இஸ்ரேலில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே இந்நடவடிக்கையை முன்னெடுப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
‘எங்கள் குடிமக்கள் அனைவரையும் அவர்களது வடக்கு எல்லையிலுள்ள வீடுகளுக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்’ என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் லெபனான் – இஸ்ரேல் எல்லையில் கடமையாற்றவென 10 ஆயிரம் ரிசர்வ் படையினருக்கு அழைப்பு விடுத்துள்ள இஸ்ரேல், தரைவழி இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு உலகளாவிய ரீதியில் வலியுறுத்தப்படுகிறது. பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ், ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், பிரான்ஸ் உட்பட பல தலைவர்களும் லெபனான் மீதான போரை நிறுத்துமாறு கோரியுள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் 21 நாட்கள் யுத்தநிறுத்த முயற்சிகளை விரைவுபடுத்தியுள்ளன. ஆனால் அம்முயற்சிகளுக்கு இஸ்ரேலின் வலதுசாரி அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, வெளிவிவகார அமைச்சர் கட்ஸ் அந்த யோசனையை நிராகரித்துள்ளார். அதனால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் முழு அளவிலான போர் வெடிக்கும் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஸா மீதான யுத்தத்தை இஸ்ரேல் கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி ஆரம்பித்தது. அந்த யுத்தத்தை நிறுத்தக் கோரி இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்களைத் தொடங்கியது. ரொக்கட், ட்ரோன், ஏவுகணை போன்ற ஆயுதங்களைக் கொண்டு எல்லை தாண்டிய தாக்குதல்களை ஹிஸ்புல்லாஹ் மேற்கொள்கையில் இஸ்ரேலும் ட்ரோன், ஏவுகணை மற்றும் யுத்த விமானங்கள் மூலமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இரு தரப்பினரும் எல்லை தாண்டிய தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக இஸ்ரேலின் இராணுவ கட்டமைப்புகளையும் தொடர்பாடல் மற்றும் உளவு பிரிவுகளையும் விமானப்படை தளங்களையும் இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்கிறது ஹிஸ்புல்லாஹ்.
இவ்வாறான சூழலில் கடந்த சில மாதங்களாக ஹிஸ்புல்லாஹ்வின் முக்கியஸ்தர்களைத் துல்லிய தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்யும் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது. இத்தகைய துல்லிய தாக்குதல்கள் நாளுக்கு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையோ என்றபடி முன்னெடுக்கப்படுகிறது. இத்தாக்குதல்களின் விளைவாக ஹிஸ்புல்லாஹ் முக்கிய தளபதிகளை இழப்பது அந்த அமைப்புக்கு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தம் உறுப்பினர்களை அன்ரொய்ட் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
ஹிஸ்புல்லாஹ்வின் மூத்த உறுப்பினர் புவாரட் சுகூர் கடந்த ஜுலை 31 ஆம் திகதியன்று பெய்ரூட்டில் படுகொலை செய்யப்பட்டார். அதேதினம் ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயீல் ஹனியா ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்படட்டார்.
இதன் விளைவாக மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்ப்பதற்றம் உருவானது. அமெரிக்கா யுத்த கப்பல்களையும் விமானந்தாங்கிக் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பலையும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு நகர்த்தியது. ஈரானும் ஹிஸ்புல்லாஹ்வும் இஸ்ரேல் பழிவாங்கப்படும் என்றன. ஆனால் பாரிய தாக்குதல்களை உடனடியாக முன்னெடுக்காத ஹிஸ்புல்லாஹ் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேலின் டெல் அவிவ், மெரோன் தளம், ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளில் உள்ள நான்கு தளங்கள், க்ளிலோட்டை தளமாகக் கொண்ட உளவுப் பிரிவு உட்பட 11 இராணுவ தளங்கள் மீது 320 கட்டுஷா ரொக்கட்டுகள் மற்றும் ட்ரோன்களை ஏவி பாரிய தாக்குதல்களை ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டது.
இந்நிலையில் 48 மணி நேர அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய இஸ்ரேல் இத்தாக்குதல்களால் எவருக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவித்ததோடு ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு முன்னரான அரைமணி நேர காலப்பகுதிக்குள் நூறு யுத்த விமானங்களைப் பயன்படுத்தி, ஹிஸ்புல்லாஹ்வின் நூற்றுக்கணக்கான ரொக்கட் மற்றும் ஏவுகணைத் தளங்களைத் தாக்கியழித்ததாகக் குறிப்பிட்டது.
இந்த சூழலில் ஹிஸ்புல்லாஹ், தகவல் தொடர்பாடலுக்காக அன்ரொய்ட் கையடக்கத் தொலைபேசியில் இருந்து பேஜர் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு சென்றது. இத்தொழில்நுட்பத்திற்குள் பிரவேசித்து சில வாரங்கள்தான் கடந்திருக்கும். கடந்த 18 ஆம் திகதி பேஜர்களும், 19 ஆம் திகதி வோக்கிடோக்கிகளும் திடீர்திடீரென வெடித்துச் சிதறி மரணங்களையும் காயங்களையும் ஏற்படுத்தின. இது திட்டமிடப்பட்ட குண்டுத் தாக்குதல் என்று லெபனான் பிரதமர் நஜீப் மிகாடியும் ஹிஸ்புல்லாஹ் தலைவரும் குற்றம் சாட்டினர். பேஜர் வெடிப்பு தாக்குதல் மூலம் 12 பேரும் வோக்கி டோக்கி வெடிப்பு தாக்குதல் மூலம் 25 பேரும் கொல்லப்பட்டனர். அத்தோடு பேஜர் வெடிப்பினால் 2800 பேரும், வோக்கி டோக்கி வெடிப்பினால் 608 பேரும் காயமடைந்தனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு அறிவித்தது.
இத்தாக்குதலின் ஊடாக ஹிஸ்புல்லாஹ்வின் 500 பேர் பார்வை இழந்துள்ளதோடு, 1500 உறுப்பினர்கள் போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ‘ரொய்ட்டர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பேஜர் மற்றும் வோக்கிடோக்கி வெடிப்பு தாக்குதல்களால் ஏற்பட்டிருந்த பதற்றம் தணிவதற்குள் கடந்த 20 ஆம் திகதி இப்றாஹீம் அகீல் உட்பட ஹிஸ்புல்லாஹ்வின் 11 உயர்மட்ட முக்கியஸ்தர்கள் துல்லிய தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டனர். இதனை ஹிஸ்புல்லாஹ்வும் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தகைய தாக்குதல்களின் ஊடாக தெற்கு லெபனான் மீது பாரிய தாக்குல்களை கடந்த 23 ஆம் திகதி ஆரம்பித்த இஸ்ரேல், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அவசரநிலையையும் பிரகடனப்படுத்தியுள்ளது. இப்பிரகடனத்தின் கீழ், இஸ்ரேலிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க இராணுவத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை தெற்கு லெபனானிலுள்ள சுமார் 80 ஆயிரம் பேரின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தும் ஒலிப்பதிவு குறுஞ்செய்தி வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லெபனானும் இஸ்ரேலும் வேறு வேறு பகுதிகள். அப்படியிருந்தும் லெபனானியர்களின் கைபேசிகளுக்கு இந்த ஒலிபரப்பு பதிவு எவ்வாறு வந்தது என்பது வியப்பாக உள்ளது. லெபனானியர்களின் கைபேசிகளுக்குள் ஊடுருவி இஸ்ரேல் இதனைச் செய்துள்ளதாக லெபனான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வெளியேற்ற அறிவுறுத்தலால் பெருந்தொகையான தெற்கு லெபனானியர்கள் பெய்ரூட் நோக்கி அவசர அவசரமாக இடம்பெயரத் தொடங்கினர். இதன் விளைவாக பெய்ரூட் நெடுஞ்சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தெற்கு லெபனானில் ஒரு இலட்சம் பேர் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களினால் எல்லாமாக சுமார் 5 இலட்சம் பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை இஸ்ரேலின் இராணுவ கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை முன்னெடுத்துவரும் ஹிஸ்புல்லாஹ், கடந்த புதனன்று டெல்அவிவ்விலுள்ள மொசாட் உளவுப் பிரிவு தலைமையகத்தை இலக்கு வைத்து பிளாஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை முதற்தடவையாக முன்னெடுத்துள்ளது.
இவ்வாறான உச்சகட்டப் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் பெய்ரூட் சர்வதேச விமான நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
லெபனானிலுள்ள பிரித்தானிய பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ள பிரித்தானியா 700 படையினரை, அவர்களை மீட்பதற்காக சைப்பிரஸுக்கும், அமெரிக்கா யுத்தகப்பல்களை மத்திய தரைக்கடலுக்கும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மர்லின் மரிக்கார்