வானொலி குயிலொன்று வானளவில் பறந்து சென்றுவிட்டது என்ற செய்தி வானொலிப் பிரியர்களை மட்டுமல்ல நம் எல்லோரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முத்தான சொத்தாக திகழ்ந்த கலாபூசணம் ஆயிஷா ஜுனைதீன் கடந்த 22.09.2024 அன்று எம்மை விட்டும் இவ்வுலகை விட்டும் நிரந்தமாக விடைபெற்றுச் சென்று விட்டார் என்ற செய்தி எம்மை நிலைகுலையச் செய்து விட்டது.
1976 ஆம் ஆண்டு முதல் வானொலியில் கொடிகட்டி பறந்தவர்தான் சகோதரி ஆயிஷா ஜுனைதீன். மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சி உட்பட மேலும் பல்வேறு பிரபலமான நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்த பெருமை இவருக்குண்டு. வானொலிக்கு ஏற்ற வளமான குரலுக்கு சொந்தக்காரி. தமிழ் மட்டுமன்றி சிங்கள ஆங்கில மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழக வணிகவியல் பட்டதாரி. இவ்வளவு ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்ட சகோதரி ஆயிஷா ஜுனைதீனின் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
நான் ஆரம்ப காலத்தில் தமிழ் சேவையில் ஒலிபரப்பாகும் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சிக்குத்தான் அடிக்கடி ஆக்கங்களை அனுப்புவது வழக்கம். இதன் மூலமே என்னை இனம் கண்ட சகோதரி ஆயிஷா ஜுனைதீன் தனது மாதர் மஜ்லிஸ் நெஞ்சோடு நெஞ்சம் நிகழ்ச்சியோடு என்னையும் இணைத்துக் கொண்டதை இங்கு நன்றியுடன் நினைவூட்ட விரும்புகிறேன். பல வருடங்கள் பிரதி மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு, வானொலியில் முதன்முதலாக நேரில் கலந்து கொண்டு குரல் கொடுக்கும் வாய்ப்பை அளித்த பெருமையும் இவரையே சாரும்
பல வருட காலமாக மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு எழுதும் வரம் பெற்ற எனக்கு, என் எழுத்துகளுக்கும் ஊக்கமளித்து, உரமிட்ட உத்தமர்களில் சகோதரி ஆயிஷாவும் குறிப்பிடத்தக்கவராவார்.
மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியை திங்கள் மலர், செவ்வாய் மலர், புதன் மலர் என பெயரிட்டு மலரச் செய்து மணம் பரப்பியவர்.
இவர் வானொலியில் இருந்த காலம் வசந்த காலம் என்றே சொல்ல வேண்டும்.எனவே இலங்கை வானொலியை பொறுத்தவரை ஆயிஷா ஜூனைதீன் மறக்க முடியாத ஓர் ஆளுமை.
முஸ்லிம் சேவையில் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமையும் சகோதரி ஆயிஷா ஜுனைதீனுக்கு உண்டு. இவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக மட்டுமின்றி நிகழ்ச்சித் தொகுப்பாளராக, அறிவிப்பாளராக என தனது பங்களிப்பினை நல்கியுள்ளார். மாதம்பையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரி ஆயிஷா ஜுனைதீன் 1976 ஆம் ஆண்டிலேயே மாதர் மஜிலிஸ் நிகழ்ச்சியின் முதல் பெண் தயாரிப்பாளராக இணைந்து கொண்டார். இவர் முஸ்லிம் மாதர்கள் கல்வியில் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்பதை தனது நிகழ்ச்சிகளில் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இது தவிர பிஞ்சு மனம், முதுசம், இலக்கிய மஞ்சரி, முத்தாரம், அருட்சுனை ஆகிய பல இலக்கிய நிகழ்ச்சிகளையும் கலந்துரையாடல்களையும் இவர் தயாரித்துள்ளார் வானொலி,தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் கூட இவர் செயல்பட்டுள்ளார். இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண்ணும், அது போன்றே இலங்கை ரூபவாஹினி தொலைக் காட்சியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண்ணும் இவரே. சுயாதீன தொலைக்காட்சி சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டபோது இந்த தொலைக்காட்சியிலே முதன் முதலில் தோன்றிய முஸ்லிம் பெண் அறிவிப்பாளரும் இவரேதான். நொயலின் ஹொண்டர் ஆங்கிலத்திலும், ஆயிஷா ஜுனைதீன் தமிழ் மொழியிலும், இந்துநில் திசாநாயக்க சிங்கள மொழியிலும் அறிவிப்புச் செய்தே சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆரம்பம் செய்து வைப்பர். நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும்போதும் இந்த மூன்று பெண் அறிவிப்பாளர்களே அறிவிப்பு செய்தனர் . அந்த அளவுக்கு சகோதரி ஆயிஷாவின் குரலுக்கு நல்ல மவுசு இருந்தது. இவர் வானொலிவுடன் தனது நீண்ட நாள் உறவைத் துண்டித்துக் கொண்டாலும், தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு மொழி பெயர்ப்பு மூலம் பங்களிப்புச் செய்து வந்தார். இவரது கலை இலக்கியச் சேவையைப் பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. கலாசார அமைச்சும் இவருக்கு கலாபூஷணம் அரச விருது வழங்கி கௌரவித்தது
சகோதரி ஆயிஷா ஜுனைதீன் ஆரம்பித்து வைத்த எனது வானொலி பயணம் தான் இன்றும் தொடர்கிறது. சகோதரி ஆயிஷாவுக்கும் எனக்குமிடையிலான தூய நட்பும் அன்று முதல் தொடர்ந்தே வந்தது.அவருக்கு சிறிது சுகயீனம் என்று கேள்விப்பட்டதும் அவரை நேரில் சென்று சுகம் விசாரிக்க பல முறை முயன்றேன். “இப்போது வரவேண்டாம். நான் சொன்ன பிறகு வாருங்களேன்” என்று நாட்களை கடத்தி விட்டு சொல்லாமலேயே சென்று விட்டார் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் வலிக்கிறது. கண்கள் குளமாகின்றன. நான் அவரை நேசித்தேன். அதுபோலவே அவரும் என்னை அளவு கடந்து நேசித்தார். என்மீது அளவற்ற அன்பைச் சொரிந்தார். எனது முன்னேற்றங்களைக் கண்டு பெருமிதம் கொள்வார். இன்று அவர் நிரந்தமாக எம்மை விட்டும் சென்று விட்டாரே என்பதை என்னால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. அந்த சோகத்தை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. நெஞ்சோடு நெஞ்சமாய் என்னோடு இணைந்திருந்த சகோதரி ஆயிஷா ஜுனைதீன் எம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகள் எமது “நெஞ்சோடு நெஞ்சமாய்” என்றும் இணைந்திருக்கும். அவரின் சாயலிலேயே இருக்கும் அவரது ஒரே மகள் ஸிமாராவைப் பார்த்து நாம் மன ஆறுதலடைவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் என் அன்புச்சோதரி ஆயிஷாவுக்கு மேலான சொர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போமாக! ஆமீன்.