Home » ஒரு வருடகால பாடசாலைக் கல்வியை இழந்த நிலையில் காஸா மாணவர்கள்!

ஒரு வருடகால பாடசாலைக் கல்வியை இழந்த நிலையில் காஸா மாணவர்கள்!

புதிய கல்வியாண்டில் கால்பதிக்கவும் வழியில்லை!

by Damith Pushpika
September 15, 2024 6:32 am 0 comment

பலஸ்தீனின் காஸா மாணவர்கள் ஒருவருட காலமாக பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் புதிய கல்வி ஆண்டில் பிரவேசித்திருக்கிறார்கள். காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தம் காரணமாக இந்நிலைக்கு இம்மாணவர்கள் முகம்கொடுத்திருக்கிறார்கள்.

வருடா வருடம் செப்ெடம்பர் மாதம் 09 ஆம் திகதி பலஸ்தீன் உட்பட காஸாவில் புதிய கல்வியாண்டு ஆரம்பமாவது வழமை. ஆனால் கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் இவ்வருடம் செப்ெடம்பர் 09 ஆம் திகதிக்கும் அப்பால் யுத்தம் தொடர்வதன் விளைவாக கடந்த வருடம் முழுவதும் பாடசாலைக்கல்வி இன்றி புதிய கல்வி ஆண்டில் பிரவேசிக்கும் துர்ப்பாக்கிய நிலை இம்மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது,

இப்போரின் விளைவாக காஸாவில் ஏற்பட்டுள்ள அழிவுகளும், சேதங்களும் கொஞ்சநஞ்சமல்ல. காஸா சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இற்றைவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மக்களின் வாழ்வை சிதைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ள இப்போரினால் அவயவங்களை இழந்துள்ளவர்களையும் உளத்தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களையும் காஸாவில் பரவலாகக் காண முடிவதாக தெரிவித்துள்ள சர்வதேச மருத்துவர்கள், பெரும்பாலான பிள்ளைகள் கல்வியில் ஆர்வம் செலுத்த முடியாத அளவுக்கு உளத்தாக்கங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்றுள்ளனர்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மனநல நிபுணர் ஜீசஸ் மிகுவல் பெரெஸ் காசோர்லா குறிப்பிடுகையில், ‘பாடசாலைக் கல்வி இன்மையின் விளைவாக உளவியல் ரீதியான பாதிப்புக்கு இளம் பராயத்தினரில் அநேகர் முகம்கொடுத்துள்ளனர். இது அவர்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடியதாகும். இப்போரினால் அநேக சிறுவர்கள் அதிக கவலை மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இடம்பெயர்தல் காஸா மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ளது. இஸ்ரேலியப் படையினர் விடுக்கும் வெளியேற்ற அறிவுறுத்தல்கள் இதற்கு காரணமாகும். இதனால் காஸா மக்களில் பெரும்பகுதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்களவிலானோர் ஐந்து முதல் எட்டு தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இப்போர் காஸாவின் உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளை அழித்து சேதப்படுத்தியுள்ளது. குடிநீர் வசதி, கழிவகற்றும் கட்டமைப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், குடியிருப்புக்கள் என அனைத்தும் அழிவுற்றும் சேதமடைந்துமுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிக கூடாரங்களிலும் முகாம்களிலும் தங்கியுள்ளனர். அவர்களில் மாணவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

365 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட காஸா இப்போருக்கு முன்னர் 23 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அவர்களில் 6 இலட்சத்து 25 ஆயிரம் பேர் பாடசாலை மாணவர்களாவர். 40 ஆயிரம் பேர் உயர்கல்வி பெறுபவர்களாவர். காஸா மாணவர்களுக்கு கல்வி புகட்டும் பணியில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் கடமையாற்றினர் என்று பலஸ்தீன கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இம்மாணவர்களுக்கென 564 பாடசாலைக் கட்டடங்கள் காணப்பட்டுள்ளன. அவற்றில் 309 பாடசாலைக் கட்டடங்கள் பலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் உள்ளவையாகும். அதேநேரம் ஐ. நா பலஸ்தீன நிவாரண முகரவகத்தின் (யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ) நிர்வாகத்தின் கீழ் 187 பாடசாலைக் கட்டடங்களும் தனியார் துறையினரின் நிர்வாகத்தின் கீழ் 68 பாடசாலைக் கட்டடங்களும் இருந்துள்ளன.

இப்போரினால் காஸா மாணவர்களில் அநேகர் தங்கள் பாடசாலை உபகரணங்களையும் மாத்திரமல்லாமல் பாடசாலை சீருடையையும் கூட இழந்துள்ளனர். அவர்களில் உடுத்த உடையுடன் இடம்பெயர்ந்தவர்களும் உள்ளனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் தம் பெற்றோரில் இருவரையும், சிலர் இருவரில் ஒருவரையும் இழந்திருக்கிறார்கள்.

பல மாணவர்கள் உளரீதியிலான தாக்கங்களுக்கும் முகம்கொடுத்துள்ளனர். அவர்களது பாடசாலை வகுப்பறைகள் வகுப்பறைகளாக இல்லை. அவை அழிவுற்றும் சேதமடைந்தும் காணப்படுகின்றன. அதேநேரம் இடம்பெயர்ந்துள்ள காஸா மக்களின் தங்குமிடங்களாக பாடசாலைக் கட்டடங்களும் உள்ளன.

அப்படியிருந்தும் கூட பாடசாலைக் கட்டடங்கள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் 15 இற்கும் மேற்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

யுனிசெப் நிறுவனத்தின் துணை அமைப்பாக விளங்கும் உலகளாவிய கல்வி கொத்தணி அமைப்பின் தரவுகளின்படி, இப்போரினால் காஸாவில் 477 பாடசாலைக் கட்டடங்கள் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளன.

இப்போரினால் 110 பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 321 பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. காஸா மாணவர்கள் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் கல்வியை மாத்திரமல்லாமல் அவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களையும் பள்ளித்தோழர்களையும் கூட இழந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலத்தின் தகவல்களின்படி, காஸாவில் யுத்தம் ஆரம்பமானது முதல் செப்ெடம்பர் மாதம் வரையும் 10,490 மாணவர்களும் 411 ஆசிரியர்களும், 150 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 16,700 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அத்தோடு இவ்வருடம் உயர்கல்வி நிலையங்களில் சேர வேண்டிய 450 மாணவர்களும் கூட இப்போரினால் காவு கொல்லப்பட்டுள்ளனர். 58 ஆயிரம் மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

முதலாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையான மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு அமர முடியாத நிலைக்கும் முகம்கொடுத்துள்ளனர். அதனால் இம்மாணவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்லூரிகளிலும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

இப்போர் காஸா மாணவர்களின் கல்வி உரிமையைப் பெரிதும் பாதித்துள்ளது. இவ்வாறான சூழலில் தெற்கு ஹேப்ரோன் பிராந்தியத்தில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையைப் பார்வையிடச் சென்ற பலஸ்தீனப் பிரதமர் மொஹமட் முஸ்தபா, “ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கும் சுதந்திரத்தை அடைவதற்கும் கல்வியே நமது முதன்மை ஆயுதம். கல்விக்கான நமது அர்ப்பணிப்பு ஒரு உயிர்நாடியாகும். இதன் மூலம் நாம் அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியும்” என்றுள்ளார்.

இப்பின்புலத்தில் காஸாவில் ஈ கற்பித்தலை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை புதிய கல்வியாண்டு ஆரம்பமானதைத் தொடர்ந்து அங்குள்ள ஆசிரியர்களில் சிலர் சேதமடைந்துள்ள வீடுகளிலும் கட்டடங்களிலும் கூடாரப் பாடசாலைகளை அமைத்து மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில், தெற்கு காஸாவின் கான் யூனிஸில் உள்ள தனது வீட்டின் இடிபாடுகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரப் பாடசாலையில் எஸ்ரா எபு முஸ்தபா என்ற ஆசிரியை கற்பித்தல் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். இங்கு பாலர் பாடசாலை முதல் ஆறாம் வகுப்பு வரை கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

‘பலஸ்தீனிய கல்வித் திட்டத்தின்படி கற்பிக்கவும், மகிழ்ச்சிக்கான செயற்பாடுகள் மூலம் உளவியல் ஆதரவை வழங்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். காஸாவிலுள்ள பிள்ளைகள் கடினமானதும் சோகமானதுமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். மேலும் பாடங்கள் மற்றும் மகிழ்ச்சியான செயற்பாடுகள் மூலம் அவர்களின் துன்பங்களை போக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றுள்ளார் ஆசிரியர் எஸ்ரா எபு முஸ்தபா.

கல்வி பெறுவது ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமையாகும். அதற்கேற்ப காஸா பிள்ளைகளும் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். யுத்தம் தொடர்வது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதனால் யுத்தநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமென ஐ.நா நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதனால் இக்கோர யுத்தம் நிறுத்தப்பட்டு அனைத்து மக்களும் நிம்மதியாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் காஸா பிள்ளைகள் பீதியின்றி மீண்டும் சுதந்திரமாகப் பாடசாலைக் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவர்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division