இம்மாதம் 22ம் திகதி இந்நாட்டின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நீங்களா?
ஆம். இந்த தேர்தலில் நான் அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெறுவேன் என்பது மிகத் தெளிவான விடயமாகும். இலங்கை முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒன்று திரண்டிருக்கின்றார்கள். இன அடிப்படையில் எடுத்துக் கொண்டால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும், மத அடிப்படையில் எடுத்துக் கொண்டால் பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாம், கிறித்தவர்கள் என இந்நாட்டில் வாழும் பன்முகத்தன்மை கொண்ட மக்களின் பொதுவான ஆதரவு எனக்கே உள்ளது. வேறு எந்த வேட்பாளருக்கும் இவ்வாறான மிகப் பிரமாண்டமான ஆதரவு நாடு முழுவதையும் உள்ளடக்கியவாறு கிடைக்கவில்லை.
அதேபோன்று எனது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியே இந்த ஜனாதிபதித் தேர்தலில் பரந்தளவிலான ஜனநாயகக் கூட்டணியாகும். மற்ற இடங்களில் புனிதமற்ற கூட்டணிகள் அல்லது சர்வாதிகாரக் கூட்டணிகளையே காண்கிறோம். அதேபோன்று மக்கள் நம்பும் வகையில் தெளிவான, பிரச்சினைகளற்ற, நடைமுறைக் கொள்கைத் திட்டத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்வைத்த ஒரே கூட்டணி எங்கள் கூட்டணி மாத்திரமேயாகும். இந்த அனைத்து விடயங்களுக்கும் அமைய வெற்றிக்கான வாய்ப்பு ஏற்கனவே எங்களுக்கு நிச்சயமாகியுள்ளது.
தற்போது தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும் என்று எந்தளவான நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?
எனது வெற்றி தொடர்பில் எந்த சந்தேகமும் இல்லை. 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. எங்களின் பிரசாரக் கூட்டங்களுக்கே அதிகமான மக்கள் வருகின்றார்கள். அதேபோன்று, இதுவரை மற்ற கட்சிகளுக்கு வாக்களித்த பொதுமக்கள் தற்போது முழு கிராமமாக எங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். தீவிரவாதத்துக்கும், ஊழல் அரசியலுக்கும் பலியாகாத, நாட்டின் நல்லிணக்கத்தையும், அமைதியையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய ஒரு தலைவருக்காக நம் நாட்டின் மீது அக்கறை கொண்ட சர்வதேச சமூகமும் காத்திருப்பதைக் காண்கிறேன். இந்த அனைத்து உண்மைகளின்படி, எங்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. 22ஆம் திகதியின் பின்னர் மக்களை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீங்கள் எவ்வாறு அந்தப் பொறுப்பைச் செய்யப் போகிறீர்கள்?
முதலில் எனது வெற்றியின் பின்னர் தற்போது நிலையற்ற நிலையிலுள்ள நாட்டை நிலையானதாக ஆக்குவதற்கு நான் நடவடிக்கை மேற்கொள்வேன். எந்தவித வன்முறைகளுக்கோ, அரசியல் பழிவாங்கல்களுக்கோ இடமளிக்க மாட்டேன். தேசிய பாதுகாப்பை கூடியளவில் உறுதிப்படுத்துவேன். எனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணை பாராளுமன்றத்தினுள்ளும் இருக்க வேண்டும். எனவே நான் உடனடியாகவே இப்போதைய பாராளுமன்றத்தைக் கலைப்பேன். அதுவரைக்கும் தற்காலிய காபந்து அரசாங்கத்தை அமைப்பேன்.
எமது அரசாங்கம் முதலில் மேற்கொள்வது தற்போது கடன் சுமைகளாலும், வரிச் சுமைகளாலும் வாழ்க்கைச் சுமைகளாலும் நசுங்கிப் போயுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதேயாகும். அதேபோன்று எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களைச் செயற்படுத்துவதற்காக அரசியல் மற்றும் நிருவாகக் குழுக்களை நான் உடனடியாகவே நியமிப்பேன்.
தற்போது சிதைவடைந்து போயுள்ள சர்வதேச உறவுகளைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்வேன். சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும்.
உங்களைச் சுற்றி பலமான குழுவினர் உள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தக் குழுவினால் முடியுமா?
ஆம். எமது குழு நிபுணத்துவமிக்க குழுவாகும். அதேபோன்று திறமையான மற்றும் நடைமுறைக் குழுவாகும். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத குழு. மற்றும் கடந்த காலத்தில் பணியாற்றிக் காட்டிய குழுவாகும். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் நான் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவேன். எரிசக்தி, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், நிதி, பொது நிர்வாகம், பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில் துறை, வெளியுறவுக் கொள்கை போன்ற அனைத்து துறைகளையும் வழிநடத்தக்கூடிய இந்த நாடும் உலகமும் நம்பக்கூடிய ஒரு குழு என்னிடம் உள்ளது. இவர்கள் சலுகைகளுக்காக நற் பெயரைக் காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல. அத்தகைய குழுவின் தலைவராக இருப்பதில் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
ரணில், சஜித் இணைவது தொடர்பில் பேசப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அல்லது பின்னர் ரணில் சஜித் இணைவைக் காண முடியுமா?
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஒரு தீர்க்கமான காரணி அல்ல என்பதை ரணில் விக்கிரமசிங்க இப்போது உணர்ந்துள்ளார். அதனால்தான், எங்களால் வெற்றி பெற முடியாது, அதனால்தான் இரண்டு தரப்பும் ஒன்று சேர வேண்டும் என்று பிரசாரம் செய்கிறார்கள். நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்றே நான் சொல்கிறேன். எனவே, வெற்றிபெறும் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாளுக்கு நாள் பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் எங்களுடைய பயணத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
ரணில், சஜித் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதே சிறந்த விடயம் என அண்மையில் கட்சியில் இருந்து விலகிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் கூட தெரிவித்திருந்தாரே?
அந்த வாய்ப்பை நானா இல்லாமல் செய்தேன்? ரணில் விக்கிரமசிங்க எத்தனை ஜனாதிபதி தேர்தல்களில் தோல்வியடைந்தார்? எத்தனை ஜனாதிபதி தேர்தல்களிலிருந்து ஒதுங்கினார்? அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியினர் வேறு ஒரு தலைவரைத் தேடினர்கள். தேர்தலில் வெல்லக்கூடிய தலைவரைத் தேடினார்கள். அவ்வேளையில் ரணில் விக்கிரமசிங்க செய்தது, ஜனாதிபதித் தேர்தலில் கட்சியைச் சேர்ந்த வேறு எவரும் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பை தடுத்ததேயாகும். ரணில் விக்கிரமசிங்க ஒரு உண்மையான ஜனநாயகத் தலைவராக இருந்திருந்தால் கட்சியின் அடுத்த இரண்டாவது அணியை உருவாக்கியிருக்க முடியும். புதிய தலைவர்கள் உருவாகும்போது அவர்களுக்கு கைகொடுக்க வேண்டும். இப்போது சஜித் பிரேமதாசவுக்கு எதிராக அவர் செய்யக்கூடிய அனைத்து மோசமான செயல்களையும் செய்ய அவர் முன்வந்துள்ளார்.
நீங்கள் வெற்றி பெற்றால் புதிய ஆட்சி அமைக்க மற்றைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?
தற்போதே எங்கள் கூட்டணியை சுற்றி பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. எங்களின் தேர்தல் பிரகடனத்தை ஏற்கும் எவருக்கும் நாங்கள் கதவுகளை மூட மாட்டோம். எவ்வாறாயினும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நாட்டு மக்கள் நல்லவர்களை, புத்திசாலிகளை, திறமையானவர்களை, ஊழல் செய்யாதவர்களை என அனைத்துக் கட்சிகளிலிருந்தும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்பவார்கள் என்று நான் நம்புகிறேன். அப்போது அவ்வாறான சிறந்தவர்களைத் தெரிவு செய்து வலுவான ஆட்சி அமைக்க நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் சம்பளப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்குவீர்கள்?
அரசாங்கம் சம்பள அதிகரிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அது மிகத் தெளிவான ஒரு தேர்தல் இலஞ்சமாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் வேலையையே இப்போது செய்திருகின்றார்.
எனவே, அரசின் முன்மொழிவுகளை நாம் பெரிதாகக் கருதவில்லை. அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து ஊதியம் பெறுபவர்களின் வருமானத்தை மிக அதிகமாக உயர்த்துவோம் என நாம் உறுதியளித்துள்ளோம். இதைச் செய்ய பணம் எங்கே என்று பலர் கேட்கிறார்கள். தேசிய வருமானத்தை அதிகரிக்க சில புரட்சிகரமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் நீங்கள் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்கள் என்ன?
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் மற்றும் சலுகைகள் எதனையும் நாம் குறைக்க மாட்டோம். அதேபோன்று உடனடியாக எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் போன்றவற்றைக் குறைத்து, அரசாங்கத்தின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு நிறைய நிவாரணங்களை வழங்குவோம். உற்பத்திப் பொருளாதாரத்திற்கு மக்களின் பங்களிப்பை அதிகளவில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணி வரவிருக்கும் அரசாங்கத்திற்கு உள்ளது. உங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை கூறுங்களேன்?
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
ஆனால் கடன் சுமையை பொதுமக்கள் மீது சுமத்துவதற்கு நாம் விரும்பவில்லை. நாட்டின் தேசிய வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தி டிஜிட்டல் புரட்சியை ஆரம்பிப்போம்.
ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் இலக்கு வைத்து அபிவிருத்தி வலயங்களை உருவாக்குவோம். அனைத்து துறைகளிலும் காணப்படும் ஊழல், மோசடி, இலஞ்சம் ஆகியவற்றை முழுமையாக ஒழிக்க நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். உழைக்கும் நாட்டை உருவாக்குவோம். செய்த வேலைகளின் சமூக- பொருளாதார பலன்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறும் நாடு.
இன்னமும் கடனைச் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. 2028ஆம் ஆண்டு கடனைச் செலுத்தத் தொடங்கிய பின்னர் இதனை விட சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள் எப்போதும் கூறி வந்தன. உங்கள் அரசாங்கத்தின் கீழ் இதை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப் போகிறீர்கள்?
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, நாங்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வோம். மக்களைச் சிரமங்களுக்குள் உள்ளாக்காமல் சிக்கனம் போன்ற பொருளாதார உத்திகளை கடைப்பிடிப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். இலங்கையின் பொருளாதாரத்தை கடனைச் செலுத்தும் வாய்ப்புடைய பொருளாதாரமாக துரிதமாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். 2028ஆம் ஆண்டில், நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு இடமளிக்காமல் இந்தக் கடன் தவணைகளை செலுத்தும் திறனைப் பெற்றுக் கொள்வோம்.
மக்கள் மீது சுமையில்லாத வகையில் இதை எவ்வாறு செய்ய முடியும்?
தேசியக் கடனின் சுமை முழுவதுமாக மக்கள் மீது சுமத்தப்பட்டு, ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருந்து விடுபடுவதுதான் இப்போது செய்யப்படுகின்றது. வரிச் சுமை மற்றும் கடன் சுமையால் மக்கள் பாதிக்கப்பட்டது போதும். எமது அரச வருவாய்த் திட்டம் சமூக ஜனநாயகப் பொருளாதாரத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்
வரிச்சுமையைக் குறைக்க நிவாரணங்களை வழங்க தயாரா?
ஆம், எமது தேசிய வருமானத் திட்டம் முற்றிலும் நியாயமான வரிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. நியாயமற்ற வரிகளை விதித்து மக்களின் கழுத்தை நெரிக்க நாங்கள் தயாராக இல்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்ந்தாலும் அதன் விதிமுறைகளை மாற்ற உங்கள் அரசாங்கம் தயார். சர்வதேச நிபந்தனைகளை மாற்றுவது நாட்டையே பின்னோக்கி திரும்பச் செய்வதுதானே?
சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை. வருமானத்துக்குக் குறைவாகச் செலவுகளை வைத்துக்கொள்ளுங்கள் என்றே அவர்கள் கூறுகின்றார்கள். அது ஒரு மோசமான விடயம் அல்ல. ஆனால் தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் சொல்லியுள்ளதாகக் கூறி ஐ.எம்.எப் கூறாத பல விடயங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த குழப்பம் தீர்க்கப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள விஞ்ஞாபனத்திற்கு அமைய செயற்பட்டால் தற்போதுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முற்றாக பாதிக்கப்படும் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
தேசிய மக்கள் சக்தியானது எவ்வித நடைமுறை முக்கியத்துவம் இல்லாத பல திட்டங்களை முன்வைத்துள்ளது. எனவே அதைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.
தற்போது, தேசிய மக்கள் சக்தி தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவர்கள் உங்கள் தேர்தல் பணிகளுக்குச் சவாலா?
அவர்கள் எனக்கு சவாலாக இல்லை. அவர்கள் 3 சதவீத கட்சியில் இருந்து சிறிதளவு வளர்ந்துள்ளனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பலத்தை ஒரு அங்குலம் கூட நெருங்குவதற்கான வாய்ப்பு அவர்களிடம் இல்லை.
தேசிய மக்கள் சக்தி அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆகக் குறைக்க உள்ளதாம். இதை நடைமுறையில் செய்ய முடியுமா? உங்கள் அரசின் இதன் எண்ணிக்கை எவ்வாறு இருக்கும்?
அமைச்சரவை அமைக்க தேசிய மக்கள் சக்தி முதலில் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கான எந்த சாத்தியமும் இல்லை. எனவே, அவர்களின் அமைச்சரவை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஆனால் ஒரு நாட்டின் அமைச்சரவை பெரிதாய் இருக்க வேண்டியதில்லை. நாங்கள் ஒரு சிறிய அமைச்சரவையை உருவாக்குவோம். அந்த அமைச்சரவை அறிவியல் அடிப்படையில் அமைச்சுக்களை பிரித்து உருவாக்கப்படும்.
கடைசியாக மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
நாங்கள் வெற்றி பெறுவோம். நம்பிக்கையோடு எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் என அனைத்து மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
எம். எஸ். முஸப்பிர்