பணம் பத்தல்ல பல நூறும் செய்யும்
பாதாளத்தில் கிடந்தவனையும்
ஆகாயத்தில் பறக்க வைக்கும்
சிரிக்க வைக்கும் பணமேதான்
சிலவேளை பதறவும் வைக்கும்
நெருங்கிய உறவுகளைக்கூட
நெருங்க விடாமல் செய்யும்
நொறுங்கின உள்ளங்களை
கண்டும் காணாமல் நகரும்
கருவறை முதல் கல்லறை வரை
சில்லறைகளே ஆட்சி செய்யும்
கருப்பையின் ஆரோக்கியமும்
இருப்பைக் கொண்டே
அளவிடப்படும்
கறைபடியா கைகளையும்
காலடியில் விழவைக்கும்
நேர்மை நியாயத்தை
நிர்க்கதியாய் நிக்கவைக்கும்
தரிசனம் என்பதும்
விலை போகும்
நிதர்சனம் தான் இப்புவியிலே
காசிருந்தால் கருவறைக்குப்
பக்கத்தில்
இல்லையேல் கடைசிப்
படிக்கட்டில்
கல்லாப் பெட்டி
நிறைந்திருந்தால்
பொல்லாப்பென்பது
இருக்காது
கேட்கும்போது கொடுக்க
மறுத்தால்
கேடு நினைப்பர் மறக்காதே
ரோட்டோரம்
கிடந்தவனையும்
கோட்டையிலே
வாழ வைக்கும்
கொடிகட்டிப் பறந்தவனை
தலை குப்புற வீழ்த்திவிடும்
ஏற்றத் தாழ்வை
ஏற்படுத்தும் பணம்
ஏழைகளுக்கு எட்டாக்கனி
பலபேர் எச்சில் பட்டாலும்
தீட்டு என்று ஒதுக்கப்
படாதது பணம்
தேர்தல் என்று வந்து விட்டால்
தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள
மக்கள் பிரதிநிதிகளும்
விலை போகும் பண்டங்கள்தான்
பை நிறைய பணம் இருந்தால்
பட்டமரம் பூ பூக்கும்
பாறையிலும் நீர் சுரக்கும்
எட்ட நின்ற உறவுகளும்
ஒட்டி ஒட்டி உறவாடும்
கட்டு கட்டாய் பணம் இருந்தால்
பகட்டான திருடனையும்
கெட்டிக்காரன் என்றுதான்
பட்டம் தீட்டி கொண்டாடும்
குப்பைத் தொட்டியை கண்டிராத
ஒற்றைக் காகிதம் பணம்
பணத்தை தேடி
பசியை மறந்தவனும் உண்டு
பாதியிலேயே
உயிரை விட்டவனும் உண்டு
காசுக்கு இருக்கும் மவுசுதான்
காசினியை வாழவைக்குது
காசேதான் கடவுள் அப்பா
கடவுளுக்கும் இது தெரியுமப்பா.