தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறுகிறது. 2,849 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில், 323,879 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். அதன்படி, இப் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதேவேளை, பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தேர்தல் கடமைகளை மேற்கொள்ளக் கூடாதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் பாடசாலைகள் மற்றும் பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் அரசியல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய தினம் அவசர அனர்த்த சூழல் ஏற்படுமாயின் மாணவர்களை இடையூறின்றி பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. ஏதேனும் அனர்த்த நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுமாயின், 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்படும் மாணவர்களுக்குத் தேவையான உடன் நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
68
previous post